அறியா குற்றம்!



சினிமாவுக்கு கதை எழுத கத்துக்கலாம்! மாணவன் 34

தமிழில் மிக அரிதாகவே ஆன்ட்டி ஹீரோ திரைப்படங்கள் எடுப்பதுண்டு. வரலாற்றுச் சாதனை படைத்த ‘ஹரிதாஸ்’ திரைப்படத்திலேயேகூட பாகவதர் ஒருவகையில் ஆன்ட்டி ஹீரோதான். சிவாஜியே கூட ஆரம்பத்தில் ‘அந்த நாள்’ மாதிரியான படங்களில் ஆன்ட்டி ஹீரோவாக நடித்தவர்தான்.

ஆனால்-எம்.ஜி.ஆர் தன்னை திட்டமிட்டு ‘நல்ல’ பிம்பத்தை உருவாக்குவதற்காக எடுத்துக் கொண்ட முயற்சிகள், தமிழ் சினிமாவின் ஆன்ட்டி ஹீரோ கதை சொல்லல் முறையையே அழித்துவிட்டது என்று சொல்லலாம். ஹீரோ என்றால் கல்யாண குணங்கள் கொண்டவனாக இருந்தே ஆகவேண்டும் என்கிற கட்டாயத்தை எம்.ஜி.ஆர் ஏற்படுத்திவிட்டார்.

அவர் காலத்துக்குப் பிறகுதான் பல ஹீரோக்களும் வில்லத்தனமான ஹீரோ வேடத்தில் நடிக்கவே துணிந்தார்கள். இதனால் வித்தியாசமான கதைக் களன்கள் பலவற்றையும் நாம் இழந்திருக்கிறோம்.உலக சினிமாக்களில் எப்போதும் எடுபடும் ஒன்லைனர் ஒன்று உண்டு. ஹீரோ யாரென்று தெரியாமலேயே ஒரு கேரக்டருக்கு தீமை செய்துவிடுவான். பாதிக்கப்பட்டவர் தன்னுடைய உறவோ அல்லது நட்போ என்று தெரிந்ததும் பதறிவிடுவான். அந்தத் தீமைக்கு அவன் என்ன நிவாரணம் செய்யப் போகிறான் என்று கதை போகும்.

ரஜினிகாந்தை முதன்முதலாக சூப்பர் ஸ்டார் ஆக்கிய ‘பைரவி’ இம்மாதிரியான கதைதான்.காமுகனான தன்னுடைய முதலாளி ஸ்ரீகாந்துக்கு ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக ஏற்பாடு செய்துவிடுவார் விசுவாசமான வேலைக்காரனான ரஜினி. ஸ்ரீகாந்தால் சிதைக்கப்பட்ட அந்தப் பெண், சிறுவயதில் தொலைந்துபோன தன்னுடைய தங்கைதான் என்பதை அறிந்ததும் ஸ்ரீகாந்துக்கு எதிராக கிளர்ந்தெழுவார். நல்லவனாக மாறி வில்லன் ஸ்ரீகாந்தை பழிவாங்குவார்.

இவ்வகை கதைகளை எழுதுவதற்கு இரண்டு பாத்திரங்களை இன்ச் பை இன்ச்சாக செதுக்கியாக வேண்டும்.ஒன்று, தீமை செய்யும் வில்லன். இரண்டு, பாதிக்கப்படும் அப்பாவி. தீமை நடைபெறுவதற்கு வலுவான காரணம் ஒன்றினை உருவாக்க வேண்டும். குற்றவுணர்ச்சியால் வில்லன் வருந்துவதற்கு ஏதுவாக அந்த இருவருக்குமான பிணைப்பு மிக வலுவாக ஏற்படுத்தப்பட வேண்டும்.

கிரேக்க புராணத்தில் ஈடிபஸின் கதையை வாசித்தால் இதுபுரிபடும். அவன் ஒருவனைக் கொன்றுவிட்டு, அவனுடைய மனைவியைத் திருமணம் செய்து கொள்வான். சில ஆண்டுகள் கழித்துதான் தெரியும் கொல்லப்பட்டவன் தன்னுடைய தந்தை, தான் மணந்திருப்பவள் தன்னுடைய தாய் என்று. வில்லங்கமான சிக்கல்தான் என்றாலும் ஈடிபஸின் கதை உலகப் பிரசித்தி பெற்றது.

(கதை விடுவோம்)