கட்டப்பாவ காணோம்



மீனு வேணுமா மீனு?

அதிர்ஷ்டமே இல்லாத இளைஞர் சிபிராஜ், ஹீரோயின் ஐஸ்வர்யா ராஜேஷை ஒரு மதுக்கூடத்தில் சந்திக்கிறார். செம போதையேறி ஒருவரையொருவர் காதலிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். வீட்டில் இவர்கள் காதலுக்கு ரெட் கார்ட். வீட்டை விட்டு வெளியேறி ஒரு டூயட் பாடியதும் கல்யாணம் செய்து கொள்கிறார்கள்.

குடும்பம் நடத்தும்போதுதான் பொருளாதாரத் தேவைகளால் காதல் கசக்கிறது. இந்நிலையில் கட்டப்பா என்கிற வாஸ்து மீன் இவர்களிடம் மாட்டுகிறது. அதே சமயத்தில் ஒரு கும்பல் இவர்களிடம் பணம் கேட்டு மிரட்டுகிறது. வாஸ்து மீனுக்கு கோடிக்கணக்கான மதிப்பு இருப்பதை உணர்ந்த இவர்கள், அதை வைத்து இந்தக் கும்பலிடம் இருந்து தப்ப முயற்சிக்கிறார்கள். கட்டப்பா என்ன ஆனது என்பதே கதை.

நாய், பேய் என்று வலம் வரும் சிபி இதில் மீனுடன் கூட்டணி போட்டிருக்கிறார். ஹீரோயிஸம் செய்யாமல் யதார்த்தமாக நடிக்க முயற்சிப்பதற்காகவே சிபிக்கு நிறைய படங்கள் புக் ஆகவேண்டும்.ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நாளாக நாளாக உடலில் மெருகு கூடிக்கொண்டே போகிறது. கிளாமர் காட்சிகளில் துணிச்சலாக களமிறங்குகிறார். சாந்தினிக்கு படத்தில் வேலை எதுவுமில்லை.

வழக்கம் போல் யோகி பாபு, காளி வெங்கட் சிரிக்க வைக்கும் வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். காளி வெங்கட்டின் டபுள் மீனிங் டயலாக்கிற்கு தியேட்டரில் செம ரெஸ்பான்ஸ்.  மைம் கோபி,  இயக்குநர் நலன் குமாரசாமி ஆகியோர் தங்களுக்கு கொடுத்த வேலையை நன்றாக செய்திருக்கிறார்கள்.

சந்தோஷ் தயாநிதி இசையில் ‘ஏ…பெண்ணே’ பாடல் ஒன்ஸ் மோர் கேட்கலாம். பின்னணி இசையும் ஓ.கே. ஆனந்த் ஜீவாவின் ஆர்ப்பாட்டம் இல்லாத ஒளிப்பதிவு படத்தை ரசிக்க வைக்கிறது.மீனை மையமாக வைத்து மிக சாமர்த்தியமாக திரைக்கதை அமைத்திருப்பதில் இயக்குநர் மணி செய்யோன் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே கூறலாம்.