சினிமாவுக்கு கதை எழுத கத்துக்கலாம்! மாணவன் 3



முரண்ப டுவோம்!

கடந்த இரண்டு வாரங்களாக இத்தொடரில் நாம் செய்து கொண்டிருந்தது கதை விடுவதற்கான வார்ம்-அப். இனிமேல்தான் எத்தனை கதை இருக்கிறது, அதைக் கொண்டு எப்படி சினிமாவுக்கு எழுதப் போகிறோம் என்று தெரிந்து கொள்ளப் போகிறோம்.Plot என்று சொல்லப்படும் கருதான் கதையின் அடிப்படையே. உலகில் இதுவரை சொல்லப்பட்ட கதைகளின் பிளாட்கள் மொத்தம் எவ்வளவு என்பது குறித்து நிறைய அபிப்ராய பேதங்கள் உண்டு.

இருபதோ அல்லது இருபத்தெட்டோ பிளாட்கள்தான் மொத்தமாக இருக்கின்றன என்று சினிமா கதை மன்னன் பாக்யராஜ் கூட ‘வாங்க சினிமாவைப் பற்றி பேசலாம்’ என்கிற நூலில் குறிப்பிடுகிறார். இந்தக் கருவைச் சுமந்து, ஒரு படைப்பாளி எப்படி சுகப்பிரவசம் செய்கிறான் என்பதிலேயே அவனது படைப்பாற்றல் வெளிப்படுகிறது.

கதைக்கு ஒரே ஒரு கருதான் உண்டு. அது பிரசவிக்கப்படும்போது கருப்பாகவோ, சிகப்பாகவோ, நெட்டையாகவோ, குட்டையாகவோ, ஒல்லியாகவோ, குண்டாகவோ பிறக்கிறது என்று வாதிடுபவர்களும் உண்டு. Single basic conflict என்று கூறப்படும் இந்த கோட்பாடு, ‘முரண்தான் கரு’ என்கிறது.

‘முரண்’ என்கிற சொல், கொஞ்சம் இலக்கியத்தனமாகத் தெரியலாம். நான் புரிந்துகொண்ட அளவில் அதை கொஞ்சம் எளிமையாகச் சொல்ல முற்படுகிறேன்.
ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களுக்கான வேறுபாடுதான்.

 அதாவது, ஒரு பக்கம் பூ என்றால் இன்னொரு பக்கம் தலை. ‘பூவா? தலையா?’ என்கிற கேள்விதான் முரண்.கடவுள் vs சாத்தான், நல்லவன் vs கெட்டவன், ஹீரோ vs வில்லன், ஆக்கம் vs அழிவு, நன்மை vs தீமை, அன்பு vs வெறுப்பு. இப்படி எதிர் எதிர் பண்புகளில் செயல்படக்கூடிய விஷயம்தான் முரண்.உதாரணங்களோடு அடுத்த வாரம் பார்க்கலாம்.

(கதை விடுவோம்)