அன்று நிருபர் இன்று இயக்குநர்



இருபது ஆண்டுகால சினிமா அனுபவம் இருக்கிறது. வாய்ப்புகளும் ஏராளமாக கிடைக்கிறது. இருந்தும் படம் இயக்குவதற்கு ஆர்வம் காட்டாமல் துறவி மாதிரி இருந்தவர் எம்.ஆர்.பாரதி. பதிப்பக உரிமையாளர், விளம்பர நிறுவனம் நடத்துபவர் என்று பன்முகங்கள் கொண்டவர். பி.சி.ஸ்ரீராம் இயக்கிய முதல் படமான ‘மீரா’வுக்கு இவர்தான் கதை, திரைக்கதை, வசனம். இப்போது திடீரென்று ‘அழியாத கோலங்கள்’ என்கிற படத்தை இயக்கியிருக்கிறார். ஒரு குளிர் பின்னிரவில் சூடான தேனீருடன் அவருடன் விவாதித்தோம்.

“எப்போது சினிமாவுக்கு வந்தீர்கள்?”

“தொண்ணூறாம் ஆண்டில் வந்தேன். இயக்குநர் பாலுமகேந்திராவிடம் ஒரு படம் கூட பணிபுரிந்ததில்லை. ஆனாலும் நான் அவருடைய மாணவன்தான். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அவரிடம் உடனேயே இருந்து சினிமாவைக் கற்றிருக்கிறேன். என் நண்பனான பி.சி.ராம் படத்துக்கு ஸ்க்ரிப்ட் செய்தேன். அதன் பிறகு பதிப்பகம், விளம்பர நிறுவனம் என்று தொழிலில் பிஸியாகி விட்டேன். முழு உழைப்பையும் என் நிறுவன வளர்ச்சிக்கு கொட்டிவிட்டதால் சினிமாவில் பணிபுரிய முடியாத சூழல் ஏற்பட்டது.”

“அழியாத கோலங்கள்?”

“பாலுமகேந்திரா இயக்கிய படத்தின் டைட்டில்தான். அவரைப் போலவே தரமான யதார்த்தமான படங்களை இயக்க வேண்டும் என்பது என் விருப்பம். செய்தால் நல்ல சினிமாவாக செய்ய வேண்டும். இல்லாவிட்டால் சும்மா உட்கார்ந்திருக்கலாம் என்பது என் பாலிஸி. நான் இயக்கும் ‘அழியாத கோலங்கள்’, பாலுமகேந்திரா படம் போலவே நல்ல படமாகத்தான் இருக்கும்.”

“கதை?”

“ஒரே கல்லூரியில் படித்த இரண்டு நண்பர்கள் இருபத்து நான்கு வருடங்களுக்குப் பிறகு பெருமழை நாள் ஒன்றில் திடீரென சந்திக்கிறார்கள். அந்த சந்திப்பும், அதைத் தொடர்ந்த நிகழ்வுகளும்தான் கதை.”

“ஆர்ட்டிஸ்டெல்லாம் வெயிட்டானவர்களாக இருக்கிறார்களே?”

“ஆமாம். பிரகாஷ்ராஜ், நாசர், ரேவதி, அர்ச்சனா என்று பெரிய நட்சத்திரங்களாக அமைந்துவிட்டார்கள். இந்தப் படத்தை பாலுமகேந்திராவுக்கு சமர்ப்பிப்பதற்காகவே இவர்கள் கூட்டணி சேர்ந்திருக்கிறார்கள். அதனால்தான் வினியோகஸ்தர்கள் மத்தியிலும் எங்கள் படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது.”

“பிரகாஷ்ராஜ்?”

“அவருடைய ஒத்துழைப்பை மறக்கவே முடியாது. பெங்களூரில் சந்தித்து அவரிடம் கதை சொன்னேன். இது நிச்சயமாக நல்ல படமாக வரும் என்று சொல்லி நடிக்க ஆர்வமானார். ஒரு நாலு மாசம் பொறுத்துக்கங்க, கால்ஷீட் தர்றேன் என்று நம்பிக்கைக்குரிய முறையில் சொன்னார். ஆனால், நான் சென்னை திரும்புவதற்குள் போன் செய்து ஜூன் மாசமே ஷூட்டிங் போயிடலாம் என்றார். அந்தளவுக்கு கதை அவருக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என் படத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார் என்று தெரிந்ததுமே நிறைய பேர் அட்வைஸ் சொல்ல கிளம்பி விட்டார்கள். நான் பழகியவரையில் அவர் மிக நல்ல மனிதர். இதே சினிமாவில் என்னுடன் ஒன்றுக்கு ஒன்றாக பழகியவர்கள் பலரும் இன்று புகழேணியின் உச்சத்தில் இருக்கிறார்கள். ஆனால், நான் படம் இயக்கப் போகிறேன் என்றதுமே எங்கே கால்ஷீட் கேட்டுவிடுவேனோ என்கிற அச்சத்தில் முகம் திருப்பிக் கொண்டு போனார்கள். எனக்கு எவ்விதத்திலும் அறிமுகமே இல்லாத பிரகாஷ்ராஜ்தான் கதையைக் கேட்டு தோழனாகி தோள் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் வந்தபிறகுதான் படத்துக்கு வேல்யூவே கூடியிருக்கிறது. அவருக்கு நிரம்பவும் கடமைப்பட்டிருக்கிறேன்.”

“அர்ச்சனா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கிறார் போலிருக்கிறதே?”

“ஆமாம். முப்பது ஆண்டுகளுக்கு முன்பும் அவர் ஹீரோயின். இப்போது என்னுடைய படத்திலும் ஹீரோயினாகத்தான் நடிக்கிறார். அவர் இருபது வருடங்களாக எனக்கு தோழி. இருந்தும் கதை கேட்டு பிடித்திருந்ததால்தான் ஒப்புக்கொண்டு நடிக்கிறார். ரேவதியும் அதே போலத்தான். நாசர் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் அனைத்து ஆர்ட்டிஸ்டுகளுமே நடிப்போடு நிறுத்திக் கொள்ளாமல் யூனிட் ஆள் போல சகஜமாக எல்லா வேலைகளையும் செய்தார்கள். அத்தனையும் பாலுமகேந்திராவுக்காக நாங்கள் செய்யும் குருபூஜையாக இருக்கட்டும் என்றார்கள்.”

“டெக்னீஷியன்ஸ் சைட்?”

“பாலுமகேந்திரா அறிமுகப்படுத்திய ஹீரோயின்களில் ஒருவரான ஈஸ்வரி ராவ்தான் படத்தை தயாரிக்கிறார். இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளரான ஷாஜி கே.நாயரின் அசோசியேட் ராஜேஷ் கே.நாயர்தான் ஒளிப்பதிவு செய்கிறார். ஆபாவாணன் படங்களுக்கு இசையமைத்த அரவிந்த் சித்தார்த்தா இசையமைக்கிறார். பெரியளவுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவருக்கு ஏனோ சரியான பிரேக் அமையவில்லை. அர்ச்சனா இயக்கிய ஒரு சீரியலில் மிகச்சிறப்பாக இவர் இசையமைத்திருந்ததைப் பார்த்து ஞாபகம் வைத்து மீண்டும் சினிமாவுக்கு அழைத்து வந்திருக்கிறேன்.”

-நீண்டநேரம் பேசிவிட்டு அவரிடம் விடைபெறும்போது சொன்னார்.

“முக்கியமான விஷயத்தைச் சொல்ல மறந்துட்டேன். முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் ‘வண்ணத்திரை’யில் நான் நிருபர். அப்போது 32 பக்கமாக புத்தகம் வந்து கொண்டிருந்தது. புத்தகம் முழுக்கவே என்னுடைய கைவண்ணமாகத்தான் இருக்கும். அந்த வேலை மூலமாகத்தான் எனக்கு பல சினிமா ஜாம்பவான்கள் அறிமுகமானார்கள். நான் வேலை பார்த்த பத்திரிகையிலேயே இப்போது என்னை பேட்டி காண்கிறார்கள் எனும்போது ஏற்படுகிற உணர்வு, தாய்வீட்டு சீர் பெறும் பெண்ணுக்கு தரக்கூடிய மகிழ்ச்சியைத் தருகிறது.”(‘வண்ணத்திரை’ வாசகர்கள் சார்பில் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தோம்.)

-சுரேஷ்ராஜா