தமிழ் சினிமாவில் கலக்கும் இலங்கை தமிழ் கவிஞர்!



பொதுவாக தமிழ் சினிமாவில் தமிழ்நாட்டு தமிழர்கள்தான் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். உலகின் மற்ற நாடுகளில் வாழும் தமிழர்களின் பங்களிப்பு மிகக்குறைவாகவேதான் இருக்கும். அந்தக் குறையைப் போக்க வந்திருப்பவர் கவிஞர் அஸ்மின். இலங்கையைத் தாயகமாகக் கொண்ட இந்த இஸ்லாமிய கவிஞர் கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் சொல்லிக் கொள்ளும்படியாக வளர்ந்து வருகிறார்.

இலங்கையில் 2001ஆம் ஆண்டு நடைபெற்ற தேசியளவிலான கவிதைப் போட்டியில் முதலிடம் பெற்றவர் அஸ்மின். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா இதற்கான விருதை அளித்தார். அது மட்டுமின்றி இம்மாதிரி போட்டிகளில் பதினைந்துக்கும் மேற்பட்டவற்றில் வென்றவர் அஸ்மின். பேராதனைப் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட பவளவிழா கவிதைப் போட்டியில் தங்கப்பதக்கம், 2010 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் தேசியளவில் நடந்த ‘வியர்வையின் ஓவியம்’ என்கிற பாடல் இயற்றல் போட்டியில் தொடர்ந்து இருமுறை பாடலாசிரியர் விருது என்று இலங்கையில் அஸ்மின் ரொம்ப ஃபேமஸ்.

2011 ஆம் ஆண்டு கவிக்கோ அப்துல் ரஹ்மான் தலைமையில் மலேசியாவில் மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சர்வதேசக் கவியரங்கில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை  பாடியதற்காக மலேசிய அமைச்சர் டத்தோ சரவணன் வழங்கிய விருதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி சினிமாவுக்கு வருவதற்கு முன்பாகவே தன் கவிதை புனையும் திறனுக்காக ஏராளமான விருதுகளைக் குவித்திருக்கிறார். இவர் மானசீக குருவாக நினைக்கின்ற கவிப்பேரரசு வைரமுத்து, இவரது மரபுக் கவிதைகளில் ஒரு தேர்ந்த கவிஞனுக்குரிய திறன் தெரிகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

2011ம் ஆண்டு  இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ‘நான்’ படத்திற்கு புதிய பாடலாசிரியரை அறிமுகப்படுத்த சர்வதேச அளவில் போட்டி ஒன்றை நடத்தினார்.  அதில் கலந்து கொண்ட 20 ஆயிரம் பாடலாசிரியர்களுள் இவரது  பாடலுக்கு முதலிடம்  கிடைத்தது. ‘தப்பெல்லாம் தப்பே இல்லை’ என்ற அந்தப் பாடல்  உலகமெங்கும் நல்ல வரவேற்பு பெற்றதுடன், தமிழ் சினிமாவில் இவருக்கான அடையாளத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது.

அதன் பிறகு ஜீவாசங்கரின் இயக்கத்தில் ‘அமரகாவியம்’ படத்தில் ஜிப்ரானின் இசையில் ‘தாகம் தீர கானல் நீரை காதலின்று காட்டுதே’ பாடலை எழுதினார். அந்தப் பாடல், விமர்சகர்களால் கவித்துவமான பாடலாக கணிக்கப்பட்டது. நடிகர் காதல் சுகுமாரின் இயக்கத்தில் ‘சும்மாவே ஆடுவோம்’ திரைப்படத்தில் காந்த் தேவா இசையில் ‘முத்து முத்து கருவாயா’ என்றொரு பாடல். அனூப் அரவிந்தன் இயக்கத்தில் ‘தேன்ல ஊர்ன மிளகாய்’ படத்தின் பாடல்கள் மொத்தத்தையும் இவரே எழுதியுள்ளார். மணிவண்ணனின் உதவி இயக்குநர் முத்துக்குமாரின் இயக்கத்தில் ‘எந்நேரத்திலும்’ படத்தின் எல்லாப் பாடல்களையும் எழுதியவர் இவரே. தாஜ்நூர், வர்சன் ஆகியோரின் இசையில் வெளிவரவுள்ள படங்களிலும் பாடல்கள் எழுதுகிறார்.

ஏ.ஆர்.கே.ராஜராஜாவின் இயக்கத்தில் வெளிவரவுள்ள ‘யாவும் காதலே’ திரைப்படத்தில்  வல்லவன் இசையில் ‘மர்லின் மன்றோ மகளா நீ மாடர்ன் இரவின் பகலா நீ’ என்ற  பாடலை எழுதியுள்ளார். ‘பேபி டால்’, ‘கருப்புப் பசங்க’, மற்றும் பெயர் வைக்கப்படாத மூன்று படங்களுக்கும் பாடல் எழுத ஒப்பந்தமாகியுள்ளார் அஸ்மின்.

மரபுக் கவிதை எழுதி வரும் கவிஞராகவும், திரைப்படப் பாடலாசிரியராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் சகலகலா வல்லவன் இந்த அஸ்மின். இலங்கையில் ‘கவி செந்தூரம்’ என்ற செய்தித்தாள் இணைப்பிதழும், ‘கவிஞன்’ என்கிற இதழும் அட்டைப் படச்செய்தியாக இவரை சிறப்பித்திருக்கிறார்கள்.

இலங்கை கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட அஸ்மின், மர்ஹூம் உதுமாலெவ்வை - ஆயிஷா தம்பதியின் மூத்த மகன். பொத்துவில் மத்திய கல்லூரியின் பழைய மாணவர். கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் துறையில் பட்டம் பெற்றவர்,டான் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், டான் தமிழ் ஒலி வானொலியில் செய்தி வாசிப்பாளராகவும் சிறிது காலம் பணிபுரிந்த அனுபவம் உண்டு. இப்பொழுது இலங்கையில் பிரபலமான வசந்தம் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் தொகுப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார். அத்தொலைக்காட்சியில் இவர் தயாரித்து வழங்கும் ‘தூவானம்’ என்கிற கலை இலக்கிய சஞ்சிகை நிகழ்ச்சி இரண்டு முறை சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான அரசு விருதினைப் பெற்றுள்ளது. இலங்கையில் தயாராகும் தமிழ்த் திரைப்படங்களிலும் அஸ்மின் சக்கைப்போடு போடுகிறார்.

செவ்வேளின் தயாரிப்பிலும் கேசவராஜனின் இயக்கத்திலும் வெளிவந்த ‘பனைமரக்காடு’ திரைப்படத்தில் இசையமைப்பாளர் விமல் ராஜாவின் இசையில் ‘உயிரிலே உன் பார்வையால் பூ பூத்ததே’ என்ற பாடலை எழுதியிருக்கின்றார். இயக்குநர் சு.வரதகுமார் இயக்கிய ‘வல்லைவெளி’ திரைப்படத்தில் ஜெயந்தனின் இசையில் ‘எங்கோ பிறந்தவளே’ என்கிற பாடலை எழுதியிருக்கின்றார். இயக்குநர் ப.சிவகாந்தனின் இயக்கத்தில் வெளிவரவுள்ள ‘கடன்காரன்’ திரைப்படத்தில் ஜெயந்தனின் இசையில் ‘பச்ச முத்தம்’ என்ற கிராமிய பாடலை எழுதியுள்ளார். பாடல்கள் எழுதுவது மட்டுமல்ல; ரந்தீர்கபூர், அனுஷ்கா சர்மா நடித்த ‘பம்பாய் வெல்வெட்’ இந்தித் திரைப்படத்திலும் ஒரு காட்சியில் நடித்திருக்கிறார்.

அடுத்த இதழில்

பாடலாசிரியர் கொத்தமங்கலம் சுப்பு