ஹிரோயினிஸம்



தன்மான தமிழச்சி!

ஜோதிகாவும், ஹன்சிகாவும் இடம்பெற்ற ‘ஹீரோயினிஸம்’ தொடரில் பரவை முனியம்மாவா என்று வாய்பிளக்காதீர்கள். இவர் இதுவரை எந்தப் படத்திலும் ஹீரோயினாக நடித்ததில்லைதான். ஆனால், மிகப்பெரிய ஹீரோயின்களுக்குக் கூட இல்லாத பல அரிய குணங்களும், தகுதிகளும் பெற்றவர். எனவேதான் இவரைப் பற்றி எழுதவேண்டியது தவிர்க்க இயலாததாகி விட்டது.

ஆரம்ப நாட்களில் சினிமாவுக்கும், பரவை முனியம்மாவுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. இழவு வீடுகளில், கோயில் திருவிழாக்களில் நாட்டுப்புறப் பாடல்களை இட்டுக்கட்டி பாடுவதுதான் அவரது தொழில். தொழில் என்றுகூட சொல்லக்கூடாது. அவருக்கு வாழ்க்கையே அதுதான். கோயிலில் கொடுக்கும் நெல்லும், இழவு வீடுகளில் கொடுக்கும் சிறு பணமும்தான் அவரது வாழ்வாதாரம். பரவையின் குரல் அக்கம் பக்கத்து ஊர்களுக்கும் பரவி மதுரை வரைக்கும் வந்தது. மதுரையில் இருந்து செயல்பட்ட உள்ளூர் ஆடியோ நிறுவனம் ஒன்று அவரது பாடலை கேசட்டில் பதிவு செய்து விற்றது. பரவையின் கால்ஷீட் கிடைக்காத இழவு வீடுகளில், கோயில்களில் இந்த கேசட்டுகள் ஒலிபரப்பானது. இப்படி தென் தமிழ்நாடு முழுவதும் பரவி அவரை சினிமாவுக்குக் கொண்டு வந்து சேர்த்தது.

மதுரை பக்கம் படப்பிடிப்புக்கு ேபான இயக்குனர் தரணி, பரவை முனியம்மாவின் பாடலை கேட்க நேர்ந்தது. அந்த கணீர் குரலை தன் அடுத்த படத்துக்கு பயன்படுத்த நினைத்தார். அவரை நேரில் பார்த்ததும் அவரையே திரையிலும் பயன்படுத்த முடிவு செய்தார். 2003ம் ஆண்டு பரவையின் ராஜாங்கம், ‘தூள்’ படத்திலிருந்து தூளாக துவங்கியது. “ஏ சிங்கம்போல நடந்து வாரான் செல்லப் பேராண்டி, அவனை சீண்டியவன் தாங்க மாட்டான் உதையிலதாண்டி...” என்று பாடியே அந்த தமிழ்ப் பாட்டி சினிமாவுக்குள் வந்தார்.

அறுபது வயதில் சினிமாவில் நடிக்க முடிவெடுத்த பிறகு அவர் போட்ட கண்டிஷன் என்ன தெரியுமா? “யாருக்கும் மனைவியாக நடிக்க மாட்டேன். என் கணவரையொத்த வயதுடையவர்களைத் தொட்டு நடிக்கமாட்டேன்” என்பதுதான். அதைக் கேட்ட தரணிக்கு என்ன தோன்றியதோ ெதரியாது. தமிழச்சிகளின் தன்மானம் இன்னும் செத்துப்போகவில்லை என்பதையே அவரது நிபந்தனை பறைசாற்றியது.

பரவைக்கு வாய்ப்புகள் குவிந்ததும், அவரைச் சுற்றி ஒரு ஜால்ரா கூட்டமும் உருவானது. பரவைக்கு முன்னால் “அம்மாவுக்கு 15 ரூபாய் சம்பளம் ெகாடுத்திடுங்க” என்று பேசுவார்களாம். அவர்கள் பேசுவது 15 லட்சம் சம்பளம். பரவை 15 ஆயிரம் என்று நினைத்துக் கொள்வாராம். இடைத்தரகர்கள் 15 லட்சத்தை வாங்கி அதில் 15 ஆயிரத்தைத்தான் அவரிடம் கொடுப்பார்களாம். அப்போது அவர் “இந்தா ராசா நீ ஒரு அஞ்சாயிரத்தை வச்சிக்கோ. உனக்கும் பிள்ளை குட்டிங்க இருக்குல்ல” என்று கொடுப்பாராம். அவர் ஏமாற்றப்பட்டதற்கு சிறு உதாரணம் இது.

பல உலக நாடுகள் பயணம், 50 படங்கள் வரை நடிப்பு, 2 ஆயிரம் மேடைகள் இத்தனைக்குப் பிறகும் திரும்பிப் பார்த்தால் பரவைக்குப் பின்னால் எதுவுமே இல்லை. இடைத் தரகர்களும், மானேஜர்களும் பிடுங்கியது போக மீதியை உறவென்று வந்து ஒட்டிக் கொண்ட கூட்டம் உறிஞ்சிக் கொண்டது.

தனித்து விடப்பட்ட பரவை முனியம்மா, 20 கிலோ இலவச அரிசிக்கு ரேஷன் கடையின் வரிசையில் காத்துக் கிடந்தார். கணவரின் மரணம், மனநலம் பாதிக்கப்பட்ட மகனைப் பற்றிய கவலை என்று லெளகீக வாழ்க்கை அவரை படுக்கையில் கிடத்தியது. அப்போதும் அவர் யாரிடமும் ஒரு பைசா கேட்டு நின்றது இல்லை. எல்லா முன்னணி நடிகருடனும் அவர் சேர்ந்து நடித்திருக்கிறார். யாரிடம் போய் நின்றாலும் நிச்சயம் உதவியிருப்பார்கள்.

ஆனால், அந்த தன்மான தமிழச்சிக்கு மனசு இடம் கொடுக்கவில்லை. அரசு ஆஸ்பத்திரியிலேயே ஆயுளை முடித்துக் கொள்ள நினைத்த போதுதான் ஒரு பத்திரிகையாளர் மூலம் அவர் நிலை உலகத்துக்கு தெரிய வந்தது. நடிகர், நடிகைகள் வரை ஓடிப்போய் உதவி செய்தார்கள். அரசாங்கமே உதவித்தொகை அறிவித்தது.

இன்று மனதும், உடலும் குணமாகி சகஜ நிலைக்குத் திரும்பியிருக்கிறார். பலரின் உதவியால் சேர்ந்து விட்ட பணத்தைத் தன் பேரனின் எதிர்காலத்துக்குக் கொடுத்து விட்டு, தன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து பாடிக் கொண்டிருக்கிறார் பரவை முனியம்மா.

- மீரான்