மனசுக்குள் கிருமி!



அன்று காலை இன்ப அதிர்ச்சி... "சார் நான் ரஜினி உதவியாளர் ஜெயராமன் பேசுறேன்..." என்றது அந்த தொலைபேசிக் குரல். ரஜினியை தெரிந்தவர்களுக்கு ஜெயராமனை கண்டிப்பாகத் தெரியும். 25 ஆண்டுகளுக்கும் மேலாக ரஜினியின் உதவியாளராக அவரது நிழலாக இருந்தவர்.

 ரஜினிதான் அழைக்கிறார் போல... நமக்கு இன்னிக்கு நல்ல நாள் என்று ஆவலாக தொடர்ந்து கேட்டால்... "அண்ணே! நான் சாரோட ஆசீர்வாதத்துல 'கிருமி'ன்னு ஒரு படம் தயாரிக்கிறேன். நம்ம ஷூட்டிங் பார்க்க வரமுடியுமா? போரூர் பக்கம் ஒரு தையல் கம்பெனில ஷூட்டிங். வாங்க" என்றார். கிளம்பிப் போனோம்.

ரெடிமேட் ஆடைகள் தைக்கும் பெரிய தையல் கூடம் அது. சுமார் 60 லிருந்து 70 பேர் கர்ம சிரத்தையாக வேலை செய்து கொண்டிருந்தார்கள். அந்த தையல்கூடத்தின் ஒரு ஓரத்தில் பட யூனிட் இருந்தது. நம்மைப் பார்த்ததும் ஓடிவந்தார் ரஜினி ஜெயராமன். "வாங்கண்ணே வாங்க. இது ஜெயராமன், இது பிருத்விராஜ், இது ராஜேந்திரன். நாங்கெல்லாம் ஒண்ணா சேர்ந்து தான் இந்தப் படத்தை தயாரிக்கிறோம். இது இயக்குனர் அனுசரண். நமக்கு வேண்டிய பையன்தான். ஆஸ்திரேலியாவுல சினிமா படிச்சிட்டு வந்திருக்கு. அவர் சொன்ன கதை ரொம்ப அற்புதமா இருந்திச்சு. அதான் தயாரிக்கிறதா முடிவு பண்ணிட்டோம்" என்றார்.

'எதுக்கு இந்த இடம்?' என்று சந்தேகம் கேட்டோம்... "கதாநாயகி ரேஷ்மி மேனன் இந்த தையல்கூடத்துல வேலை செய்றாங்க. அவரைப் பார்க்க தினமும் ஹீரோ கதிர் வருவாப்ல. இரண்டு பேருக்கும் லவ்வும் நடக்கும், சண்டையும் நடக்கும். அந்த சீனைத்தான் இப்போ எடுத்திட்டிருக்கோம்" என்றார் இயக்குனர் அனுசரண். இதற்கிடையில் ஷாட் ரெடியாக அங்கேயே அமர்ந்தோம். அப்போதுதான் உற்றுப் பார்த்தோம். அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த பெண்களில் ரேஷ்மியும் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தார். ஒரு துளி மேக்அப் இல்லாமல் ரொம்ப யதார்த்தமான, பாந்தமான... எளிமையான அழகு.

எல்லாம் ரெடியாக... இயக்குனர் ஆக்ஷன் சொன்னதும் எல்லா தையல் மிஷின்களும் சேர்ந்து ஒலியெழுப்ப, நேராக வந்தார் கதிர். ரேஷ்மி மேனனி டம் சென்று ஏதோ சொல்ல, அவர் முறைக்க, இருவரும் காரசாரமாக பேசிக்கொள்வது மாதிரி நடித்தார்கள். (இந்த இடத்தில் வசனம் கிடையாது. மிஷின் சத்தத்தில் அவர்கள் பேசுவது கேட்காதாம்.) பின்னர் இருவரும் வெளியே எழுந்து செல்லும் காட்சி படமானது. ஷாட் முடிந்ததும் நேராக இயக்குனரிடம் வந்த ரேஷ்மி, "சார் மானிட்டர் பார்த்துக்கட்டுமா?" என்றார். எடுத்த சீனை ரீவைண்ட் பண்ணிக் காட்டினார் இயக்குனர்.

"ரொம்ப திருப்தியா இருக்கு சார். சாங்குலயாவது கொஞ்சம் மேக்அப் போட்டுக்கலாமா?" என்று அவர் அப்பாவியாகக் கேட்க, "நோ மேக்-அப்" என்று அனுப்பி வைத்தார் "ரேஷ்மி நடிப்புல பின்றாங்க. ஆனா மேக்-அப் போடாம நடிக்கிறதுல தயக்கம் இருக்கு. அதான் ஒவ்வொரு சீன் எடுத்ததும் மானிட்டர் பார்த்து திருப்தி அடைஞ்சுக்கிறாங்க" என்றார்.

கிருமி என்ன சொல்லுது என்றால், "ஒவ்வொரு மனுஷன் மனசுக்குள்ளேயும் கிருமி இருக்கு. ஹீரோவுக்கும் அப்படித்தான். வேலை இல்லாம இருந்தவனுக்கு நல்ல வேலை கிடைக்குது. அந்த வேலையை வைத்து குறுக்கு வழியில் எப்படி முன்னுக்கு வரலாமுன்னு பார்க்கறான். அதுக்காக தீய வழியைத் தேர்ந்தெடுக்கிறான். இதை செய்ய வைப்பது அவனுக்குள் இருக்கும் கிருமி. அதனால் என்ன பலனை அடைகிறான் என்கிற கதை" என்றார். கிருமி நல்லா வேலை செய்யுற மாதிரிதான் தெரியுது.

-மீரான்