குறள் வடிவிலொரு திரை வாசகம்!



தன் பிள்ளை தன்னைப்போலவே கவிபுனைவான் என்பதை தீர்க்கமாக உணர்ந்திருந்த சாமி.பழநியப்பன், மகனுக்கு பாரதி என்று பெயரிட்டார். காரைக்குடி செக்காலையில் பிறந்த பாரதி, சென்னை கோடம்பாக்கத்தில் அரசுப்பள்ளிகளில் பிளஸ் டூ வரை படித்தார்.

 எட்டாம் வகுப்பு படிக்கும்போது, எழுதிய கவிதைகளை எடுத்துக்கொண்டு அப்பாவின் நண்பரான கவியரசு கண்ணதாசனைப் பார்க்கப் போயிருக்கிறார். 'நிறைய படிக்கணும், அப்புறம் எழுதணும்' என்று அனுபவ அறிவுரை சொல்லியிருக்கிறார் கவியரசு. படிக்கும்போதே இவர் எழுதிய கவிதை நூல் ' நெருப்புப் பார்வைகள்'. அந்தத் தொகுப்பைத் திருத்திக் கொடுத்ததுடன், அதுவரை பழ.பாரதி என்ற பெயரில் எழுதி வந்தவரை 'பழநிபாரதி' என மாற்றினார் கவிஞர் அறிவுமதி.

 'நம் ஊரில் பெரியவர்கள் எல்லாம் குழந்தைகள் போல எழுதிக்கொண்டிருக்கையில், ஒரு குழந்தை பெரியவர்களைப் போல எழுதுகிறான். அவன்தான் பழநிபாரதி' என்று அணிந்துரையில் குறிப்பிட்டு அறிவுக்கு ஊக்கமூட்டினார் கவிப்பேரரசு வைரமுத்து. சினிமா படத்தொகுப்புப் பணியில் ஈடுபட ஆர்வமாக இருந்த பழநிபாரதி அதற்கான தேர்வையும் எழுதினார். வாய்ப்புக் கிடைக்கவில்லை. தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தில், புத்தகக் கட்டுகளின் எண்ணிக்கையைக் குறித்துவைக்கும் வேலை கிடைத்தது.

 இவரது கவிதை நூலைப் படித்திருந்த வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜான், இவரைப் பற்றி விசாரிக்க, செய்து வரும் பணியைப் பற்றிச் சொல்லியிருக்கிறார் அப்பா சாமி.பழநியப்பன். 'கவிதை எழுதுகிறவன் கணக்கெழுதி வாழ்வதா?' என்று அக்கறையொடு கடிந்துகொண்டவர், பழநிபாரதியை அழைத்து, 'தாய்' பத்திரிகையில் துணை ஆசிரியராக பணியில் அமர்த்தினார். செய்தி சேகரிப்பதற்காக இலக்கியக் கூட்டங்களுக்குச் செல்லும்போதெல்லாம் இவரது நண்பர்கள் வட்டம் மாவட்டம் ஆனது. பத்திரிகையிலிருந்து விலகிய நேரத்தில் நண்பர் பேரமனூர் சந்தானம் இவரைப் பற்றி இயக்குனர் விக்ரமனிடம் சொல்லி யிருக்கிறார். கவிதைகளைப் படித்துப் பார்த்த விக்ரமன், 'பெரும்புள்ளி' படத்தில் பழநிபாரதியைப் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தினார்.

'இளமையின் விழிகளில் வளர்பிறைக் கனவுகள் பௌர்ணமி ஆகிறதே...' என்று கவனத்தை ஈர்க்கும் வார்த்தைகளைக் கையில் எடுத்தபடி திரைவலம் ஆரம்பித்த இவருக்கு 'நான் பேச நினைப்பதெல்லாம்', 'கோகுலம்' என அடுத்தடுத்த விக்ரமன் படங்களில் பாட்டெழுதும் வாய்ப்புகள் கிடைத்தன. 'கோகுலம்' படத்தில் அனைத்துப் பாடல்களையும் எழுதும் வாய்ப்பைப் பெறும் வல்லமை இவரது வார்த்தைகளுக்கு இருந்தது. அடுத்து, பொன்வண்ணன் இயக்கத்தில் 'அன்னை வயல்' படத்தில் இரண்டு பாடல்களை எழுதினார் பழநிபாரதி.

சுந்தர்.சி இயக்கிய 'உள்ளத்தை அள்ளித்தா' படத்தில் சிற்பியின் இசையில் இவர் செதுக்கிய அத்தனை பாடல்களும் கோபுரக் கலசங்களாகக் கொண்டாடப்பட்டன. 'அடடா பூவின் மாநாடா, அழகுக்கு இவள்தான் தாய்நாடா...' என்கிற இவரது வரிகளைக் குறிப்பிட்டு கவிதைத் தோழமையுடன் தோள்தட்டியிருக்கிறார் கவிஞர் வாலி. 'சிட்டுச் சிட்டுக் குருவிக்கு...' பாடல் இளம்பெண்களின் உடற்பயிற்சிக் கீதமாக உலா வந்தது.

'புதிய மன்னர்கள்' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இவர் எழுதிய 'எடுடா அந்த சூரிய மேளம், அடிடா நல்ல வாலிபத் தாளம்...' பாடல், புலவர்களையெல்லாம் புருவம் உயர்த்தவைத்தது.  'பூவே உனக்காக' படத்தில் எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் எழுதிய 'ஆனந்தம் ஆனந் தம் பாடும்...', ' சொல்லாமலே யார் பார்த்தது...' பாடல்களுக்குக் கிடைத்த பெருவெற்றியைத் தொடர்ந்து முழுநேரப் பாடலாசிரியராக ஒலிப்பதிவுக் கூடங்களில் நேரம் தேடினார் பழநிபாரதி.

'காதலுக்கு மரியாதை' படத்தில் இளையராஜாவும் இயக்குனர் பாசிலும் அத்தனை பாடல்களை யும் இவரை எழுத வைத்தனர். ‘என்னைத் தாலாட்ட வருவாளோ...’, 'ஆனந்தக்குயிலின் பாட்டு...', 'ஒரு பட்டாம்பூச்சி...', 'இது சங்கீதத் திருநாளோ...', பவதாரிணியுடன் இணைந்து விஜய் பாடிய 'ஓ பேபி பேபி...' பாடல்கள், ரசிகர்களின் காதுகளுக்கு மரியாதை கொடுத்தன.

 அந்த ஆண்டின் சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசு விருது பழநிபாரதிக்குக் கிடைத்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் தமிழக அரசின் 'கலைமாமணி' மற்றும் சிறந்த கலை வித்தகருக்கான 'கண்ணதாசன் விருது'கள் இவரது கவிதைக்கழுத்துக்கு கவுரவம் சேர்த்தன. உலகத் தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மலேசியாவில் வழங்கப்படும் 'இட்ஃபா' விருதும் இவரது கவிதைக்கரங்களுடன் கைகுலுக்கியிருக்கிறது.

'அருணாசலம்' படத்தில் 'மாத்தாடு மாத் தாடு..', 'அல்லி அல்லி அனார்கலி...' பாடல்கள் ரசிகரைப்போல ரஜினியையும் உற்சாகப்படுத்தின. 'நினைத்தேன் வந்தாய்' படத்தின் 'மல்லிகையே மல்லிகையே...' பாடல் சித்ரா-அனுராதா ஸ்ரீராம் இணைக்குரலில் இதயம் கவர்ந்தது. அஜித் நடித்த 'அவள் வருவாளா' படத்தில் 'சேலையில வீடுகட்டவா...' என்று கேட்டு ரசிகர்களின் காதுகளோடு சேர்ந்து வசித்தார்.

யுவன் சங்கர் ராஜா முதன்முதலாக இசையமைத்த 'அரவிந்தன்' படத்தில் 'ஆல் தி பெஸ்ட்...' என்று எழுதி அவருக்கு மறைமுக வாழ்த்தை மனதாரக் கூறினார். யுவன் இசையில் 'நந்தா' படத்தில் எழுதிய 'முன் பனியா முதல்மழையா...' பாடல் மெல்லிசைப் பாடல் வரிசையில் முன்னணியில் நின்றது. 'பூவெல்லாம் கேட்டுப்பார்' படத்தில் அத்தனை பாடல் களையும் எழுதி னார். 'இரவா பகலா...’, 'சென்யரீட்டா...' பாடல்கள் செவிகளை பரவசத்துடன் பதம் பார்த்தன.

இளையராஜா இசையில் 'அழகி' படத்தில் 'பாட்டுச்சொல்லி பாடச்சொல்லி...', 'ரமணா' படத்தில் 'வானவில்லே...' பாடல்கள் சாதனா சர்கத்தின் சிலீர் குரலில் செவிகளைக் குளிர்வித்தன. 'அழகி'யில் புஷ்பவனம் குப்புசாமி குரலில் வந்த 'குருவி கொடஞ்ச கொய்யாப்பழம்' இளம் ரசிகர்கள் மனதைக் குடைந்தது.

'ஜெயம்' படத்தில் ஆர்.பி.பட்நாயக் இசையில் எழுதிய 'கோடி கோடி மின்னல்கள்...', 'பிதாமகன்' படத்தில் இளையராஜா இசையில் 'இளங்காத்து வீசுதே...', 'பேரழகன்' படத்தில் யுவன் இசையில் 'அம்புலிமாமா அம்புலி மாமா...' , இளையராஜா இசையில் பிரகாஷ்ராஜின் 'உன் சமையலறையில்' படத் தில் எழுதிய 'இந்த பொறப்புத்தான்..' என பழநிபாரதியின் பாட்டுச்சாலைப் பயணம் தெளிவாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

மகளைப்பற்றி இவர் எழுதிய 'செடிமகள்' கவிதை, மதுரை காமராசர் பல்கலைக்கழக இளங்கலை வகுப்புகளுக்கு பாடமாக வைக்கப் பட்டுள்ளது. 'தனிமையில் விளையாடும் பொம்மை' கவிதைத் தொகுப்பு மனோன்மணி யம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு பாடமாக இருக்கிறது.

தொடர்ந்து இவருக்கு வாய்ப்பளிக்கும் இளையராஜா, 'இப்போது எனக்குப் பிடித்த இரண்டு கவிஞர்கள் பழநிபாரதியும் அறிவுமதியும்தான்' என்று ‘குமுதம்' பேட்டி யில் சொல்லியிருக்கிறார். 'நவீன இளைஞர்களின் பாடலாசிரியர்' என்று 'இந்தியா டுடே'  புகழ்ந்திருக்கிறது.

'தமிழ்நாட்டின் பெரும்பாலான தேநீர்க் கடைகள் பழநி பாரதியின் பாடல் களோடுதான் விடி கின்றன' என்று ஆனந்த விகடன் பூங்கொத்து கொடுத்திருக்கிறது. 'வாய்ப்பு தேடிப் போகமாட்டேங்கிறாரே' என்பது நண்பர்கள் இவர்மீது வைக்கும் ஆதங்கம் கலந்த அக்கறை. சிகரத்தை நோக்கிச் சிறகு விரிக்கும் இந்த சிட்டுக்குருவியின் செவிகளில் அதுமட்டும் கேட்பதாக இல்லை.

நெல்லைபாரதி