திருக்குறள் 44ஆம் அதிகாரம்!



இந்த ஆண்டு நடக்கவுள்ள இண்டியன் பனோரமா ஃபிலிம் பெஸ்டிவலில் 26 இந்திய மொழிப் படங்கள் திரையிடப்படுகின்றன. அதில் தேர்வாகியுள்ள ஒரே தமிழ்ப் படம் ‘குற்றம் கடிதல்’. அந்த வகையில் தமிழ் சினிமாவுக்கு இன்னொரு மகுடத்தைச் சூட்டி இருக்கிறார் இயக்குனர் பிரம்மா ஜி. யாரிடமும் உதவியாளராக வேலை செய்யாததும், முதல் படம் என்பதும் இவரைப் பற்றிய ஆச்சர்ய தகவல்கள்.

“இது சோஷியல் டிராமா திரில்லர். வெவ்வேறு துறைகளில் இருக்கும் வெவ்வேறு வயதுடைய நான்கு பேர் ஒரு சம்பவத்தின் அடிப்படையில் ஒரே அணியில் சேருகிறார்கள். அவர்களின் ஒரு நாள் போராட்டம்தான் படம். பாவல், ராதிகா பிராச்சி, சாய் ராஜ்குமார், அஜய் என இதில் நடித்திருக்கும் முக்கால்வாசிப் பேருக்கு இதுதான் முதல் படம். அதேபோல் இசையமைத்திருக்கும் ஷங்கர் ரங்கராஜனும், கேமராமேன் மணிகண்டனும் புதியவர்கள்தான்.

புதுமுகங்களை வைத்து வேலை வாங்குவது கஷ்டமான காரியம். ஏன்னா, அவர்களிடம் இருக்கும் ஒரிஜினல் திறமையை வெளிக் கொண்டுவருவது சவாலான விஷயம். அதற்கு என்னுடைய தயாரிப்பாளர்கள் ஜே.எஸ்.கே.பிலிம் கார்ப்பரேஷன் சதீஷ்குமார், கிறிஸ்டி சிலுவப்பா உறுதியாக இருந்தார்கள். திருக்குறளில் 44ஆவது அதிகாரத்தில் குற்றத்தைத் தவிர்ப்பதைப் பற்றி திருவள்ளுவர் சொல்லி யிருக்கிறார். அந்தக் குறளுக்கும் என்னுடய கதைக்கும் பொருத்தமாக இருந்ததால்தான் ‘குற்றம் கடிதல்’ என்று டைட்டில் வைத்தேன்” என்கிறார் பிரம்மா ஜி.