புளியோதரை மிக்ஸ்



என்னென்ன தேவை?

புளி - 100 கிராம் (புளியை நீர்விட்டு நன்றாக ஊறவைத்து கெட்டியான கரைசலாக எடுத்துக்கொள்ளவும்),
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு. 

தாளிக்க...

நல்லெண்ணெய் - 200 கிராம்,
கடுகு - 1 டீஸ்பூன்.
உளுந்தம் பருப்பு - 2 டீஸ்பூன்,
கடலைப் பருப்பு -  2 டீஸ்பூன்,
வேர்க்கடலைப் பருப்பு - 100 கிராம்,
வெள்ளை எள் - 1 டீஸ்பூன்,
மிளகு - 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 4,
கறிவேப்பிலை - சிறிது,
பெருங்காயத் தூள் - சிறிது.

வறுத்துப் பொடிக்க...

கடலைப் பருப்பு - 6 டீஸ்பூன் (எண்ணெய் விடாமல் வெறும் கடா யில் தனியாக வறுத்து, ஆறியதும் ஒன்றிரண்டாக மிக்ஸியில் பொடித்து வைக்கவும். இதை தாளிக்கும் போது பொடிகள் சேர்ப்பதற்கு முன்பு சேர்த்து வறுக்க வேண்டும்).
வெள்ளை எள் - 4 டீஸ்பூன் (எண்ணெய் விடாமல் வெறும் கடாயில் தனியாக வறுத்து, வெடித்து நிறம் மாறும் போது தனியாக எடுத்து மிக்ஸியில் பொடித்து வைக்கவும்).
கொத்தமல்லி விதை - 4 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 10 (எண்ணெய் விடாமல் வெறும் கடாயில் தனித்தனியாக வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் பொடித்து வைக்கவும்).
கடுகு - 2 டீஸ்பூன்,
வெந்தயம் - 2 டீஸ்பூன் (எண்ணெய் விடாமல் வெறும் கடாயில் தனித்தனியாக வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் பொடி செய்யவும்).

எப்படிச் செய்வது?

கடாயில் நல்லெண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்த ஒவ்வொன்றையும் அடுத்தடுத்துச் சேர்த்து வதக்கவும். கெட்டியாகக் கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைசலை சேர்க்கவும். மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும். புளிக்கரைசல் நன்றாகக் கொதித்ததும், தனியாக அரைத்து வைத்த வெள்ளை எள், கொத்தமல்லி விதை, காய்ந்த மிளகாய் பொடிகளைச் சேர்க்கவும். கடைசியாக கடுகு, வெந்தயப் பொடி சேர்க்கவும். புளிக்கரைசல் தயாராகி எண்ணெய் பிரிந்து வரும் போது நன்றாகக் கிளறி இறக்கவும். சுவை மணக்க புளிக்காய்ச்சல் தயார்.