கருக்கலைப்பு விதிகள்!



19ம் நூற்றாண்டில் உலகெங்கிலும் தாய்வழி இறப்புகளே அதிகமாக இருந்தது. அந்த இறப்புகளுக்கு பல பாதுகாப்பற்ற கருக்கலைப்புகள்தான் காரணம். கருக்கலைப்பு மிகவும் கட்டுப்

படுத்தப்பட்ட இடங்களில், பாதுகாப்பற்ற கருக்கலைப்பினால் ஏற்படும் தாய் இறப்பு விகிதம் அதிகமாக இருந்தது. 
இதைப் பற்றிய பிரச்னைகள் வருவதை கவனித்த உலக சுகாதார நிறுவனம் கருக்கலைப்புக்கான தடைகளை நீக்கியது. இதனால் இறப்பு விகிதம் குறைந்தது. மேலும் கருக்கலைப்பு சட்டங்களும் அந்தந்த நாடுகளில் நடைமுறைக்கு வந்தது. இதில் ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்த நாடுகளின் வளர்ச்சிக்கேற்பவும், அந்த சட்டங்களில் உள்ள குறைகளை சரி செய்யவும், மருத்துவ துறையின் வளர்ச்சியை பொருத்தும் அந்த சட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது.

‘‘கடந்த 30 ஆண்டுகளில் சுமார் 60 நாடுகள் தங்கள் கருக்கலைப்புச் சட்டங்களை மிகவும் தாராளமாக்கியுள்ளன. கருச்சிதைவுகள், முழுமையடையாத கருக்கலைப்பு, கரு மரணம் மற்றும் கர்ப்பத்தைத் தொடர வேண்டாம் என்று முடிவு செய்யும் பெண்களுக்கு கருக்கலைப்பு கவனிப்புக்கான விழிப்புணர்வையும் சிகிச்சைகளையும் கொடுப்பது அவசியம். பெண்களின் உடல் ஆரோக்கியம் மிகவும் அவசியம்.

அவர்களின் உடலில் ஏற்படும் நோய்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் மட்டுமில்லாமல், கருக்கலைப்பு அவசியமாகும் போது அதனையும் பாதுகாப்பான முறையில் மருத்துவரின் ஆலோசனையோடு செய்வது அவசியம். அதற்கு கருக்கலைப்பு குறித்த சட்டத் திட்டங்களை பொதுவாக அனைத்து பெண்களும் தெரிந்து கொள்வது அவசியம். இதன் மூலம் தேவையற்ற கருக்கலைப்பு, அதனால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய உடல் பாதிப்பினை தவிர்க்க முடியும்’’ என்கிறார் மகப்பேறு மருத்துவர் டெல்பின் சுப்ரியா.

‘‘கருக்கலைப்பில் இரண்டு வகைகள் இருக்கிறது. பெண்களின் கரு ஆரோக்கியமாக இல்லாத பட்சத்தில் அது தானாகவே கலைந்துவிடும். அடுத்து சுயமாக பெண்கள் முன்வந்து செய்வது. கருவின் வளர்ச்சி எட்டு வாரங்களுக்குள் இருந்தால் மருத்துவரை அணுகி கருக்கலைப்பு செய்து கொள்ளலாம். எட்டு முதல் 26 வாரங்கள் என்றால் இரண்டு மருத்துவர்களின் ஆலோசனை பேரில்தான் கருக்கலைப்பு செய்ய வேண்டும்.

அதற்கு மேல் போனால் கருக்கலைப்பு செய்ய மாட்டோம். 26 வாரங்கள் தாண்டிய பிறகு சில சமயம் கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சியில் பாதிப்பு அல்லது உடல் ரீதியான பிரச்னை என்று தெரிய வந்தால் மட்டுமே மருத்துவரின் ஆலோசனையுடன் கருக்கலைப்பு செய்ய முடியும். அவ்வாறு செய்யப்படும் கருக்கலைப்புக்கு குறிப்பிட்ட சிகிச்சை முறைகள் உள்ளன.

அதன் மூலம் கரு தானாகவே கலைய தொடங்கினால் கருவின் வளர்ச்சி குறித்து ஸ்கேன் செய்து மேலும் கரு வளர்வதற்கான சாத்தியங்கள் இல்லை என்று அறிந்த பிறகுதான் மருந்து மாத்திரைகள் கொடுத்து கருக்கலைப்பு செய்வோம். சில சமயம் அவர்கள் எட்டு மாத கர்ப்பமாக இருப்பார்கள். ஆனால் கருவின் வளர்ச்சி ஐந்து மாதமாகத்தான் இருக்கும் அல்லது இதயத் துடிப்பு இருக்காது. அதன் அடிப்படையில் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம். கடைசியாக குழந்தை வேண்டாம் என்று வரும் தம்பதியினருக்கு செய்யலாம்.

கருக்கலைப்பு என்பது அவர்களுடைய உரிமை என்றுதான் சொல்கிறது சட்டம். அதனால் அந்த கரு வேண்டுமா வேண்டாமா என்பதை தம்பதியினர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று சட்டம் அறிவுறுத்துகிறது. மருத்துவரான நாங்கள் முடிந்தவரை அவர்களுக்கு ஆலோசனை சொல்லி கருக்கலைப்பை தடுப்பதற்கான யோசனைகள் சொல்வோம். அதையும் தாண்டி அவர்கள் வேண்டாம் என்று நினைத்தால், அது அவர்களுடைய உரிமை என்பதால் அதனை செய்ய சட்டம் அனுமதிக்கிறது.

இதில் பெண் 18 வயதிற்கு மேல் இருப்பது அவசியம். 18 வயதிற்கு கீழ் உள்ள பெண்கள் கருக்கலைக்க முற்பட்டால், அவர்கள் போக்சோ சட்டத்தின் படி கைது செய்யப்படுவார்கள். ஸ்கேன் செய்யும் போதே அந்தக் குழந்தை நன்கு வளர்ச்சி அடையுமா என்று தெரிந்து கொள்ளலாம். அவ்வாறு கருவிலேயே வளர்ச்சியில் குறை இருந்தும், பிறந்த பிறகும் அதே குறையில் தான் அவர்கள் வளர்வார்கள் என்று தெரிந்த தம்பதியினர்தான் பெரும்பாலும் கருக்கலைப்பினை தேர்வு செய்கிறார்கள்.

அவ்வாறு திட்டமிடுபவர்களும் எட்டு வாரங்களுக்குள் அதனை செயல்படுத்த வேண்டும். நாட்கள் நீடித்தால், சிலருக்கு அதிக ரத்தப்போக்கு அல்லது தொற்று ஏற்படலாம். அவர்களின் உடல்நிலைப் பொருத்து அதற்கான சிகிச்சை அளிக்கலாம். D&C சிகிச்சை முறையும் தற்போது மருத்துவ துறையில் நடைமுறையில் உள்ளது. 

இதனால் சிலருக்கு மாதவிடாய் பிரச்னை ஏற்படும். அதனையும் மருத்துவரின் ஆலோசனையுடன் தகுந்த சிகிச்சை பெறலாம். கருக்கலைப்பு செய்து கொண்டாலும் மீண்டும் அவர்களுக்கு குழந்தை பிறக்காது என்றில்லை... அவர்கள் ஆரோக்கியமாக தங்களை பார்த்துக் கொண்டால், மீண்டும் கருத்தரிக்கலாம்.

கருக்கலைப்பு ஒருவரின் உரிமை என்பதால், அதற்கான விழிப்புணர்வோடு இருப்பது அவசியம். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சுயமாக மாத்திரை போட்டுக் கொண்டால் அது உயிருக்கு ஆபத்தாகவும் முடியும். அதனால் பெண்கள் கருத்தரிப்பு சார்ந்த எந்தப் பிரச்னையாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம்’’ என்கிறார் மகப்பேறு மருத்துவர் டெல்பின் சுப்ரியா.

மா.வினோத்குமார்