பெண்களுக்கு ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பான வாழ்க்கையை கொடுக்க வேண்டும்!



பெண்கள் சொல்லவும், பேசவும் தயங்கும் ஒரு சில விஷயங்களில் மாதவிடாயும் அதற்காக பயன்படுத்தும் நாப்கின்களும் அடங்கும். நாம் தொழில்நுட்பத்தை நோக்கி நகர்ந்தாலும் இந்த ஒரு விஷயம் குறித்து மட்டும் இன்றுவரை பெண்கள் மத்தியில் ஒரு தயக்கம் இருக்கத்தான் செய்கிறது. 
பெண்கள் பேச தயக்கப்படும் இந்த சானிட்டரி நாப்கின்களை தயாரிப்பதில் பெண்களுக்கு இணையாக ஆண்களுக்கும் முக்கிய பங்கு உள்ளது என்பதை நிரூபித்து காட்டியுள்ளனர் கோயம்புத்தூரை சேர்ந்த நண்பர்கள் நிவேதா மற்றும் கௌதம்.   
 
‘‘இது எங்களுடைய கல்லூரி கடைசி வருஷ ப்ராஜெக்ட். அதையே நாங்க ஒரு ஸ்டார்டப் நிறுவனமாக இப்போது உலக அளவில் கொண்டு சென்று இருக்கிறோம்’’ என்று பேசத் துவங்கினார் நிவேதா. ‘‘நானும் கௌதமும் 2013ல் இருந்தே நண்பர்கள். கல்லூரி கடைசி வருஷ ப்ராஜெக்ட்டுக்காக புளிச்சக்கீரையை பயன்படுத்தி துணிகள் தயாரிக்க வேண்டும் என்பதுதான். நாங்களும் அதனை வைத்து ஷர்ட், லெக்கின்ஸ் போன்ற உடைகளை தயாரித்தோம். 

புளிச்சக்கீரை மக்கும் தன்மை கொண்டதால், இதனை வைத்து வேற என்ன பொருள் தயாரிக்கலாம் என யோசிக்கும் போதுதான் கௌதம் சானிட்டரி பேட்ஸ் தயாரிக்கலாம் என்ற யோசனை சொன்னார். எனக்கும் அந்த யோசனை சரியாக  பட்டது. புளிச்சக்கீரை தண்டை வைத்து பல ஆய்வுகளை செய்தோம். புளிச்சக்கீரை தண்டிற்கு ஈரப்பதத்தை உரிந்து கொள்ளும் தன்மை உள்ளது.

இதை பயன்படுத்தி பேட்ஸ் தயாரித்தால் ஈகோ- ப்ரண்ட்லியாக இருக்கும், சருமத்திற்கு மென்மையானது. அதனால் இது சரியாக இருக்குன்னு நானும் கௌதமும் முடிவு செய்தோம். அடுத்தகட்டமாக இதற்கான முயற்சியில் ஈடுபட்டோம். வெற்றிகரமா எங்களுடைய கல்லூரி இறுதி ஆண்டு ப்ராஜெக்டும் முடிஞ்சது. இந்த ப்ராஜெக்ட்டுக்காக எங்களுக்கு நான்கு விருதுகள் கிடைச்சது. அந்த விருதுதான் எங்களை மேலும் ஊக்குவித்தது’’ என்றவரை தொடர்ந்து பேசத் துவங்கினார் கௌதம்.

‘‘கல்லூரி முடித்த உடன், நானும் நிவேதாவும் சானிட்டரி பேட்ஸ் தயாரிக்க இருப்பதாக வீட்டில் சொன்ன போது அவங்க யாருமே சம்மதிக்கல. படிச்சி முடிச்சிட்டு நல்ல நிறுவனத்தில் வேலைக்கு போகணும்னு அவங்க நினைச்சாங்க. நாங்க இப்படி சொன்னா யார்தான் சரின்னு சொல்லுவாங்க. அதனால் நிவேதா முதுகலை படிக்க துவங்கினார். நான் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். இருந்தாலும் நாங்க இருவரும் எங்களின் ஆய்வினை விடலை.

எங்களின் ப்ராஜெக்ட்டுக்கு நான்கு விருதுகள் மட்டுமல்லாமல் பணப்பரிசும் கிடைச்சது. அதில் இருந்து ஒரு தொகையை எடுத்துதான் எங்களின் கனவு தொழிலுக்கு
முதலீடாக செலுத்த துவங்கினோம். நிவேதாவின் கல்லூரி இறுதியாண்டின் போதே எங்களின் சானிட்டரி பேடுக்கான சாம்பிள் பேக் விற்பனைக்கு தயாராக இருந்தது. ஆரம்பத்தில் 5000 பாக்கெட்டுகளைதான் தயாரித்தோம். தற்போது மாதத்திற்கு லட்சம் பாக்கெட்டுகள் தயாரிக்கிறோம்’’ என்றார் கௌதம்.

‘‘எங்களின் தயாரிப்பு யுனிட் மூன்று இடங்களில் உள்ளது. பேடிற்கு தேவையான மூலப் பொருட்களை முன்றாவது உற்பத்தியாளர்களிடம் கொடுத்துதான் இதை தயாரிக்கிறோம். ஆரம்பத்தில் இதற்கென தனியாக ஒரு இயந்திரம் வாங்க வேண்டும் என முடிவு செய்தோம். 

ஆனால் அதற்கான பணத்தில் பல லட்சம் பேட்களை உற்பத்தி செய்யலாம் என முடிவு செய்து, ஏற்கனவே மற்ற பேட்களை தயாரிக்க பயன்படுத்தப்படும் இயந்திரத்திலேயே எங்களுடைய பிலிஸ் பேட்ஸும் தயாரிக்க துவங்கினோம். இதனால் நாங்க அந்த தயாரிப்பிற்கான கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும். எங்க நாப்கினின் சிறப்பம்சம் இது முழுக்க முழுக்க இயற்கை பொருளால் தயாரிக்கப்படுகிறது.

எளிதில் மக்கும் தன்மை கொண்டது. ரசாயனமற்றது. மற்ற பேட்கள் மற்றும் மென்சூரால் கப்களை காட்டிலும், குறைவான கார்பன் வெளியேற்றம் செய்யக்கூடியது என எங்களின் ஆய்வில் நாங்க நிரூபித்துள்ளோம். இயற்கையானதோ அல்லது பிளாஸ்டிக் துகள்கள் கொண்டது என எதுவாக இருந்தாலும் ஒரு சானிட்டரி பேட்களை நான்கு முதல் ஆறு மணி நேரத்திற்கு மேல் பயன்படுத்தக்கூடாது. 

அதையும் மீறி பயன்படுத்தினால் பல பக்க விளைவுகள் ஏற்படும் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். எங்களின் பேடினை ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை பயன்படுத்தலாம் என்றாலும், நாங்க பெண்க ளின் பாதுகாப்பு கருதி ஆறு மணி நேரம் தான் பயன்படுத்த சொல்கிறோம்’’ என்ற நிவேதா இதற்கான தயாரிப்பு முறை குறித்து விளக்கம் அளித்தார்.

‘‘கல்லூரியில் புளிச்சக்கீரையில் கிடைக்கும் இயற்கை நார் பொருளை வைத்து துணி தயாரிக்க மட்டும்தான் சொன்னாங்க. நாங்கதான் அதையும் தாண்டி அதன் மூலம் என்ன செய்ய முடியும் என்று ஆய்வு செய்து நாப்கின்களை எங்களின் ப்ராஜெக்டிற்காக தயாரித்தோம். 

நம் நாட்டில் வருடத்திற்கு ஒரு டன்னிற்கு மேல் நாப்கின்கள் தயாரிக்கப்படுகிறது. அதை இயற்கையாக கொடுக்க விரும்பினோம். மேலும் சாதாரண நாப்கின் பயன்பாட்டால் பெண்கள் என்னென்ன பிரச்னைகளை சந்திக்கிறார்கள் என்று ஆய்வு செய்து அதை ஒவ்வொன்றாக சரி செய்து ஒரு முழுமையான பொருளாக தயாரித்தோம்.

அதன் பிறகு அதனை மக்களிடம் மார்க்கெட்டிங் செய்ய எங்களுக்கு ஒரு வருட காலமானது. ஆரம்பத்தில் எங்க குடும்பத்தில் யாரும் எங்களின் இந்த திட்டத்தை ஆதரிக்கவில்லை. ஆனால் எங்களின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி மற்றும் எங்களை நம்பி 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருப்பதை தெரிந்த பிறகு எங்க வீட்டில் எங்களுக்கு முழு ஆதரவு கொடுத்தாங்க. எங்களிடம் 40க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்றாங்க. 

அதில் பெரும்பாலானவர்கள் பெண்கள்தான். நாங்க இதை தயாரிக்க முக்கிய காரணம் இயற்கையான முறையில் பாதுகாப்பான, ஆரோக்கியமான வாழ்க்கையை பெண்களுக்கு வழங்க வேண்டும் என்பதுதான்’’ என்ற நிவேதா மற்றும் கௌதம் இருவரும் தங்களின் தயாரிப்பிற்காக பல விருதுகளை பெற்றுள்ளனர்.

காயத்ரி காமராஜ்