அறியப்படாத பெண் முதல் இஸ்லாமிய ஆசிரியர் ஃபாத்திமா ஷேக்



தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி பெண்களுக்கு கல்வி நிலையம் தொடங்கி சாதிக்கொடுமைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்த முதல் இஸ்லாமியப் பெண் ஆசிரியர் ஃபாத்திமா ஷேக். இவர் நமது இந்திய வரலாற்றில் இருந்து முற்றிலும் மறைக்கப்பட்டுள்ளார். புலே தம்பதிகளைப் போலவே ஃபாத்திமாவும் கல்விக்காக பல போராட்டங்களைச் சந்தித்து இருக்கிறார்.பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் புனேவில் பிறந்தவர் ஃபாத்திமா ஷேக். சாவித்ரிபாய் புலேயின் மிக நெருங்கிய தோழி இவர்.

1848ல் முதல்முறையாக புத்வார்பேட்டில் பள்ளி திறக்கப்பட்டபோது, முதல் பெண் ஆசிரியர் சாவித்ரியோடு ஃபாத்திமாவும் பணியாற்றியுள்ளார்.  சாவித்ரிபாய் புலேவின் படத்தில் அவர் அருகில் மற்றொரு பெண் அமர்ந்திருப்பார். அந்த பெண் வேறு யாருமல்ல. சாவித்ரிபாயின் நெருங்கிய தோழி ஃபாத்திமா ஷேக்தான் அது.

இந்தப் புகைப்படமே ஃபாத்திமா ஷேக் ஆசிரியராகப் பணியாற்றியதற்கு மிகப்பெரும் சான்றாகப் பார்க்கப்படுகிறது. தான் இல்லாவிட்டாலும் எல்லா வேலைகளையும் எந்த பிரச்சனையும் இல்லாமல் கையாள்வார் என்று வெளிப்படையாக சாவித்ரிபாய் புலே சொல்லியிருக்கிறார் என்றால், அந்த பெண் நிச்சயமாக முக்கியத்துவம் உள்ள பெண்ணாகத்தான் இருக்க வேண்டும்.

ஃபாத்திமா தமது நண்பர்களான ஜோதிராவ் புலே மற்றும் அவரது மனைவி சாவித்ரிபாய் புலேயுடன் இணைந்து தலித் கல்விக்கு வித்திட்டவர். தலித் - முஸ்லீம் கல்விச்சாலையை உருவாக்க அவர்கள் செய்த தியாகம் அதிகம். புலே தம்பதிகள் தாங்கள் தொடங்கிய பள்ளியை நடத்த உயர்சாதி வகுப்பினரால் தொடர்ந்து மிரட்டப்பட்டும், ஊர் நீக்கம் செய்யப்பட்டும் துணைக்கு ஆளில்லாமல் ஊரைவிட்டும் விரட்டப்பட்டனர். அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததோடு தங்கள் வீட்டின் ஒரு பகுதியையே பள்ளி துவங்குவதற்கு இடமாகவும் தந்து பாடமும் கற்பிக்க உறுதுணையாக நின்றவர் ஃபாத்திமா ஷேக்.

ஃபாத்திமாவின் அண்ணன் உள்மான் ஷேக்கால் புனேயின் கன்ஜ் பேட் பகுதியில் உள்ள வீட்டில் தான் இந்தியாவில் தலித் குழந்தைகளுக்கான முதல் பெண்கள் பள்ளி தொடங்கப்பட்டது. வெறும் 9 மாணவிகளை கொண்டு ஆரம்பித்த அப்பள்ளிக்காக மாணவிகளை வரவழைக்கக்கோரி சாவித்ரிபாய் புலேயுடன், ஃபாத்திமா ஷேக்கும் சேர்ந்து வீடு வீடாகச் சென்று, பெண்கள் கல்வி கற்க பாடசாலைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டனர். அப்போதைய மக்கள் இவர்கள் பேச்சுக்கு மதிப்பளிக்காமல், அடுப்பூதும் பெண்களுக்கு படிப்புத் தேவையா? எனக் கூறி முகத்தில் அரையாத குறையாக வாசல்கதவை அழுத்தமாகச் சாத்தி தாளிட்டனர். இந்து ஆதிக்கம் கொண்ட புனே சமுதாயத்தில், ஒரு முஸ்லீம் பெண் சிறுமிகளின் கல்விக்காக களப் பணியாற்ற எவ்வளவு அவமானங்களைச் சந்தித்திருக்க வேண்டும்.

ஆசிரியர் ஃபாத்திமா ஷேக் ஒரே நேரத்தில் ஜோதிபாய் புலே தொடங்கிய ஐந்து பள்ளிகளிலும் பணியாற்றிய தன்னலமற்ற ஆசிரியர் என்பதுடன், இந்தியா சுதந்திரம் பெற 150 வருடங்களுக்கு முன்பாகவே பெண்ணியத்திற்கு வித்திட்டவர் என்கிற பெருமையும் கொண்டவர். தலித் பெண்கள் பயிலுவதற்கான தனி நூலகத்தை தொடங்கி நடத்தியும் இருக்கிறார். 1856ம் ஆண்டிற்குப் பிறகு ஃபாத்திமா ஷேக் என்னவானார் என்றே யாருக்கும் தெரியவில்லை. அவரது பிறப்பு இறப்பு வருடம் கூடத் தெரியாத அளவிற்கு அவர் குறித்து ஆவணப்படுத்தாமலே வரலாற்றின் பக்கங்களில் ஆசிரியர் ஃபாத்திமா ஷேக் தொலைந்து போயிருக்கிறார்.

மகேஸ்வரி நாகராஜன்