பானையும் உடையக்கூடாது ரிங்கும் கீழே விழக்கூடாது!



கற்றக் கலையை அப்படியே மேடையில் அறங்கேற்றுவது ஒரு வகை. கற்றக்கலையை மெருகேற்றி மக்கள் ரசிக்கும் வகையிலும் தனித்துவமாகவும் அதற்கு ஒரு புது வடிவம் கொடுத்து மேலும் சிறப்பாக கொடுப்பது மற்றொரு ரகம். இதில் இரண்டாவது வகையை சேர்ந்தவர்தான் கோடீஸ்வரி கண்ணன். மிலிட்ரி, போலீஸ், டாக்டர், வக்கீல், பரதம், மருத்துவம் என்று பரம்பரை பரம்பரையாக தொழில் செய்பவர்களை பார்த்திருக்கிறோம். ஆனால் பின்னணி எதுவும் இல்லாமல் பரதம் கற்றவர், அத்தோடு நில்லாமல், அந்தக் கலையையே எவ்வாறு மாற்றி அமைக்கலாம் என்று யோசித்து கின்னஸ் சாதனை வரை சென்றிருக்கிறார் கோடீஸ்வரி கண்ணன்.

‘‘ஒரு முறை நான் ராணுவ துறையின் ஆண்டு விழாவின் நடன நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்காக சென்றிருந்தேன். விழா நீண்ட நேரமாக நடந்தது. எனக்கு மேடை கிடைக்குமா கிடைக்காதா? என்ற சந்தேகமும் ஏக்கமும் இருந்தது. ஒருவேளை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று என்னை அனுப்பிவிடுவார்களோ? என்ற தயக்கம் இருந்தது. நீண்ட நேரத்திற்கு என்னுடைய நடன நிகழ்ச்சிக்கான மேடை கிடைத்தது. நிகழ்சிக்கு வந்தவர்களில் பாதி பேர் சென்று விட்டார்கள்.
இருந்தாலும் எனக்கான ஒரு மேடை என்று கிடைக்கும் போது, அதை மறுக்க முடியவில்லை. இருந்தாலும் அந்த இக்கட்டான நிலையில் மேடை ஏறினேன். அங்கு தான் முதல் முறையாக பரதமும் ரிங் டான்ஸ்சும் இணைந்தபடி என்னுடைய நிகழ்ச்சியை நடத்தினேன். பார்வையாளர்கள் குறைவாக இருந்தாலும், என்னுடைய நடன நிகழ்ச்சி பலரை வெகுவாக கவர்ந்தது.

நீண்ட நேர நிகழ்ச்சி நடந்திருந்தாலும், அந்த அலுப்பை மறந்து என்னுடைய நடனத்தை ரசித்தார்கள். என்னுடைய முதல் மேடை நிகழ்ச்சி என்பதால் நானும் பெஸ்டாக கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். இது புது முயற்சி என்றாலும், பார்வையாளர்களை கவரும் என்று நம்பிக்கை எனக்குள் இருந்தது. அதே சமயம் பலர் நிகழ்ச்சிக்கு பிறகு சென்றுவிட்டதால், எஞ்சி இருப்பவர்களை மகிழ வைக்க வேண்டும் என்ற உறுதியுடன் தான் மேடையில் ஏறினேன். என் புது முயற்சியை மக்கள் ரசித்தது மட்டுமில்லாமல் நல்ல வரவேற்பும் கிடைத்தது’’ என்று கூறும் கோடீஸ்வரி தன்னுடைய ஆறு வயதில் இருந்தே பரதக் கலையை பயின்று வருகிறார்.

‘‘பரதக்கலையை முறையாக பயின்று சலங்கை பூஜை மற்றும் அரங்கேற்றமும் செய்தேன். அதன் பிறகு ஒரு நிகழ்ச்சியில் பங்கு பெற வேண்டும் என்பதற்காகவே ரிங் டான்ஸ் கற்றுக் கொண்டேன். பரதம் மற்றும் ரிங் டான்ஸ் இரண்டையும் ஆரம்பத்தில் தனித்தனியாக தான் மேடையில் அரங்கேற்றி வந்தேன். இது எல்லாரும் செய்வது தானே என்று தோன்றியது. இரண்டு கலையைக் கொண்டு என்ன வித்தியாசம் செய்யலாம்ன்னு சிந்தித்தேன்.

அப்போது தான் இரண்டையும் கலந்த ஒரு ப்யூஷன் நடனமா கொடுத்தால் என்ன என்று தோன்றியது. பின்பு  ரிங் டான்ஸையும் பரதத்தையும் இணைத்து புதுவிதமாக  உருவாக்கினேன். வெஸ்டர்ன், ஃபோக் டான்ஸ், பட்டர்ஃபிளை, சிவ தாண்டவம், ஃபயர் டான்ஸ் என்று வெரைட்டி வெரைட்டியாக ரிங் டான்ஸும் பரதமும் சேர்த்து நிகழ்ச்சி நடத்தியுள்ளேன். இதற்காக தினமும் ஒரு மணிநேரம் பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளேன்’’ என்றவர் தான் சாதனை புத்தகத்தில் இடம் ெபற்றதைப்பற்றி விவரித்தார்.

‘‘2016ம் ஆண்டு இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் என்னுடைய நடனம் இடம் பெற்றது. அதில் மூன்று மணி நேரம் தொடர்ந்து பானை மேல் நின்று ரிங் டான்ஸ் மற்றும் பரதம் ஆடினேன். பானையும் உடையக்கூடாது அதே சமயம் ரிங்கும் கிழே விழக்கூடாது. இந்த சாதனை மத்திய அரசின் அங்கீகாரம் ெபற்ற யுனிக்ஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது. அதன் பிறகு இரண்டரை இஞ்ச் ஆணி படுக்கை மேல் 47 நிமிஷம் பக்திப் பாடல்களுக்கு நடனமாடினேன். 2018ல் கையில் ஜக்லிங் பந்துகள், இடுப்பில் ரிங் சுழல 57 வினாடிகள் நடனமாடினேன். இவை எல்லாமே என்னுடைய சாதனைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

ரிங் டான்ஸை குழந்தைகள் செய்வதை பார்த்திருப்போம் பார்ப்பதற்கு எளிமையாக இருந்தாலும் அதை செய்வது மிகவும் கடினம். அதுவும் பரதத்துடன் சேர்த்து செய்வது மிகவும் கடினம். காரணம் இடுப்பில் சுற்றும் வளையம் கீழே விழாமல் கவனமாக இருக்கணும். அதே சமயம் பரத நடனத்திலும் அபிநயங்கள் சரியாக பிடிக்க வேண்டும். இதில் ஒரு சின்ன பிழை ஏற்பட்டாலும் அது மொத்த நடனத்தையும் பாதிக்கும். இரண்டிலுமே நம்முடைய கவனம் இருக்கணும்.

தற்போது ரிங் டான்ஸ் மற்றும் பரதம்  என இரண்டு கலைகளையும் பள்ளி, கல்லூரியில் வகுப்பு எடுத்து வருகிறேன். தற்போது கொரோனா காலம் என்பதால், ஆன் லைனில் பயிற்சி கொடுத்து வருகிறேன். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் ரிங் டான்ஸ் பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் இது ஒரு நல்ல பயிற்சி என்றார்.

சூர்யா