தமிழில் பொறிக்கப்பட்ட இயேசு போதனைகள்!



 வாசகர் பகுதி

*கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இயேசு கிறிஸ்து பிறந்து 335 ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கியது.

*எத்தியோப்பியாவில் உள்ள கிறிஸ்தவர்கள், டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுவதில்லை. காரணம் இங்கு ஒரு ஆண்டுக்கு பதின்மூன்று மாதங்கள் வழக்கில் உள்ளன. ஜனவரித் திங்கள் 7-ம் தேதிதான் இவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறார்கள்.

*கம்யூனிச நாடுகளில் போலந்து நாட்டு மக்கள் மட்டும் மிக விமரிசையாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.

*இயேசு பிறந்த பெத்லகேம் நகரின் எல்லா வீட்டுக் கதவுகளிலும் சிலுவை வரையப்பட்டிருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் இயேசு பிறந்த இடமான தொழுவத்தின் வடிவமைப்பு வைக்கப்பட்டிருக்கும்.

*ரஷ்யாவில் கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு பதில் பாட்டிதான் சிறுவர் சிறுமிகளுக்குப் பரிசுகளை அளிப்பார். கிறிஸ்துமஸ் பாட்டியின் பெயர் பாபுஸ்கா.

*கிறிஸ்துமஸ் அன்று காலை உணவான கிறிஸ்துமஸ் கேக்குக்கு ‘ப்ளம்புட்டிங்’ என்று பெயர். உலர்ந்த திராட்சையும், மாவும், வெண்ணெயும், சர்க்கரையும் கொண்டு இதைச் செய்வது மரபு. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து நாட்டு மன்னன் ஒருவன் கிறிஸ்துமஸுக்கு முன்தினம் வேட்டைக்குச் சென்றதால் குறிப்பிட்ட நேரத்தில் திரும்ப முடியாத நிலையில் காட்டிலேயே நண்பர்களுடன் விருந்துண்ண நினைத்தான்.
சமையல்காரன் தன் கையிலிருந்த அனைத்துப் பொருள்களையும் கலந்து சமைத்தான் என்பது வரலாறு. அதுவே இன்று கிறிஸ்துமஸ் அன்று உபயோகிக்கும் புட்டிங் கேக்.

*பெத்லகேமில் ஏராளமான தேவாலயங்கள் இருப்பினும் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று சர்ச் ஆப் நேட்டி விடி என்ற ஆலயமே. இது, இயேசு பிறந்த தொழுவத்தின் மேல் கட்டப்பட்டதாகும்.

*ஜெருசலத்தில் ஒலிவ மலையிலுள்ள புராதன சர்ச்சில் இயேசு நாதரின் போதனை வரிகள் 68 மொழிகளில் பொறிக்கப்பட்டுள்ளன. அதில் தமிழிலும் உள்ளது.

*ஒவ்வொரு கிறிஸ்துமஸ் பண்டிகையின்போதும் நார்வே நாட்டு அரசாங்கம் கிறிஸ்துமஸ் மரம் ஒன்றை இங்கிலாந்து அரசுக்கு பரிசாக வழங்குவது வழக்கம். இந்த நடைமுறை இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு இருந்தே வழக்கத்தில் உள்ளது. போரில் நார்வேக்கு இங்கிலாந்து உதவியதால் இந்த நன்றிக்கடன்.

*இத்தாலியில் கிறிஸ்துமஸ் மரத்திற்குப் பதிலாக மரப்பிரமீடுகளை பழங்களால் அலங்கரிப்பது வழக்கம். இவர்கள் கிறிஸ்துமஸ் பரிசாக காய்ந்த பருப்பு வகைகளை தருவது வழக்கம்.

*உக்ரைன் மக்கள் கிறிஸ்துமஸ் அன்று சிலந்தி வலையைக் கண்டால் அதிர்ஷ்டம் வரும் என்று நம்புகிறார்கள்.

- ஆர்.ஜெயலெட்சுமி, நெல்லை.