அண்ணனுக்காகத்தான் நடிக்க வந்தேன்! சின்னத்திரை நடிகை ராதிகா ப்ரீத்தி



தமிழ் சீரியல்களின் தாய் வீடான சன் டி.வியில் பிரைம் நேரத்தில் ஒளிபரப்பாகும் ‘பூவே உனக்காக’  சீரியலின் நாயகிக்கு அறிமுகம் தேவையில்லை. அவரின் உண்மையான பெயரை விட சீரியலின் பெயரான ‘பூவரசி’ தான் மக்கள் மத்தியில் நீங்காமல் இடம் பெற்றுள்ளது என்று சொல்லலாம். சீரியல் நாயகி பூவரசியின் சொந்த பெயர் ராதிகா ப்ரீத்தி. ஊர் கர்நாடகா. அப்பா ஓய்வு பெற்ற ராணுவ வீரர், அம்மா இல்லத்தரசி, அண்ணன் கிரிக்கெட் வீரர். சீரியலில் நடிப்பதற்கு முன் “ராஜா  லவ்ஸ்  ராதா” என்ற கன்னட திரைப்படத்தில் அறிமுகமானவர், தமிழ்த் திரையுலகில் “எம்பிரான்” படம் மூலம் அறிமுகமாகிஉள்ளார்.

‘‘பத்தாம் வகுப்பு  படிக்கும் போது ஸ்லாம் புக்கில் நீங்க வருங்காலத்தில்  என்னவாகப் போகிறீங்கனு கேட்ட போது நான் ‘ஹீரோயின்’னு தான் எழுதினேன். அது தான் இன்று நிஜமாகியிருக்கிறது” என்கிறார் ராதிகா.‘‘சிறு வயதிலிருந்தே விளையாட்டில் தான் அதிக ஆர்வமாக இருந்தேன். த்ரோ பாலில் தேசிய அளவில் விளையாடி வெள்ளி பதக்கம் பெற்றிருக்கிறேன்.

கர்நாடகா கே.ஜி.எஃப் தான் சொந்த ஊராக இருந்தாலும் நான் தமிழ் பொண்ணு. பள்ளியிலும், எங்க ஏரியாவிலிருக்கும் எல்லோருக்கும் தெரிந்தவளாக இருந்தேன். அதனாலயே என்னை எல்லாம் ‘ஹீரோயின்’னு கூப்பிடுவாங்க. அந்த வார்த்தை கல்லூரி சேர்ந்து ஏழாவது மாதத்தில் நிறைவேறியது. கன்னட திரைப்படத்தில் அறிமுகமானாலும், அதற்கு அடுத்து தமிழ், தெலுங்கு, ஒடிசா போன்ற மொழிகளில் ஆறு படங்களுக்கு மேல் நடித்திருக்கிறேன். அப்படி இருந்தாலும் தொடர்ந்து வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. காரணம் எனக்கு கிளாமர் இல்லாமல், ஹோம்லியாக நடிக்க ஆசை’’ என்றவர் வாய்ப்பு பெரியதாக அமையாத காரணத்தால், படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.

‘‘ஆறு படங்களில் நடித்த போது அம்மா தான் எப்போதும் என் கூட வருவாங்க. நடுவில் அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. அவங்கள பார்த்துக் கொள்வதற்காகவே நடிப்பை விட்டுவிட்டேன். படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பிச்சேன். பி.காம் முடிச்சேன். இதற்குள் அம்மாவும் நலமாக, மீண்டும் நடிக்க வாய்ப்புகள் தேடலாம்ன்னு போட்டோ ஷூட் செய்தேன். அந்த புகைப்படத்தை என்னுடைய காஸ்ட்யூமர் ‘பூவே உனக்காக’
சீரியல் மேனேஜருக்கு அனுப்பி வைத்தார். அவர் ஆடிஷனுக்கு வரச்சொன்னார்.

அங்க போன போது நிறைய பேர் வந்திருந்தாங்க. சினிமாவில் நடிச்சிருக்கேன். ஆனால் சீரியல் அனுபவம் கிடையாது. அம்மாவிடம் திரும்ப போயிடலாம்ன்னு சொன்னேன். அவங்க தான், இவ்வளவு தூரம் வந்தாச்சு. ஆடிஷன் கொடுப்போம். மேலும் உனக்கு நடிச்ச அனுபவம் இருக்கும். இது சின்னத்திரை... ஆனால் நடிப்பு எல்லாம் ஒன்னு தானேன்னு என்னை சமாதானம் செய்தாங்க. நான் உள்ளே போனவுடனே பூவரசி கதாபாத்திரத்திற்கு ஏற்ற நபர் நீங்கதான்னு சொல்லி அக்ரிமென்ட்டே போட்டுட்டாங்க. எனக்கு அப்ப சீரியலில் நடிக்க சுத்தமா விருப்பமில்லை.

அம்மாவிடம் அக்ரிமென்ட் ஒத்துக்கிட்டதுக்கு சண்டை வேற போட்டேன். அப்ப அம்மா சொன்ன ஒரே விஷயம். கிளாமர் இல்லாமல் ஹோம்லியா நடிக்க இது தான் சரியான இடம். மேலும் நேரடியா மக்கள் மனதில் உன்னால இடம் பிடிக்க முடியும்ன்னு சொல்லி சம்மதிக்க வச்சாங்க’’ என்றவர் ‘பூவே உனக்காக’ சீரியலின் அனுபவங்களை பகிர்ந்தார்.

“ஆரம்பத்திலிருந்தே நிறைய ஸ்ட்ரகில் இருந்தது. செகெண்ட் லீட் கதாபாத்திரத்தில் நடிச்ச இரண்டு, மூணு பேர் மாறினாங்க. ஷூட்டிங் ஆரம்பிச்சு ஒன்றரை வருஷம் கழிச்சு தான் டெலிகாஸ்ட் ஆக ஆரம்பிச்சது. பக்கத்தில் இருக்குறவங்க, சொந்தக்காரங்க எல்லாரும், சீரியல்ல நடிக்கிறன்னு சொன்ன இன்னும் ஏன் டெலிகாஸ்ட் ஆகலன்னு கிண்டலா கேட்க ஆரம்பிச்சாங்க. ஆனா, அதுக்கெல்லாம் சேர்த்து வச்சு பதில் சொல்றது மாதிரி இன்றைக்கு டி.ஆர்.பில ஃபர்ஸ்ட்ல இருக்கோம்.

இதுக்கு முக்கிய காரணம் தயாரிப்பாளர்களின் நம்பிக்கை, எங்களோடு வேலை பார்த்த எல்லோருடைய உழைப்பும் தான். இந்த சீரியலுக்கு நிறைய இயக்குநர்கள் மாறுனாங்க. ஒவ்வொருத்தர்கிட்டயும் ஒவ்வொரு வித்தியாசமான அனுபவம். நிறைய விஷயங்கள் கத்துக்க முடிந்தது. ஒரு பக்கம் நல்லா இருந்தது, கஷ்டமாவும் இருந்தது.

இரண்டுமே சேர்ந்ததுதானே வாழ்க்கை! எல்லா தரப்பினரும் அவர்களுள் ஒருத்தியா என்னை பார்ப்பது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. ஷூட்டிங் போகும் போது சின்ன பசங்க எல்லாம் ‘பூவாச்சி அக்கா…’னு கூப்பிடும் போது மனசுக்கு நெகிழ்ச்சியா இருக்கும். கிராமங்களுக்கு ஷூட் போகும் போது அவங்க காட்டுற அன்பெல்லாம் பார்க்கும் போது, நடிகையாக எனக்கு கிடைத்த பெரும் அங்கீகாரமா பார்க்கிறேன்” என்று கூறும் ராதிகா, நடிப்பு தவிர விளையாட்டிலும் கில்லியாம்.

‘‘த்ரோ பாலில் சர்வதேச அளவில் தேர்வாகி மலேசியா போக வேண்டி இருந்தது. அப்பா அனுமதிக்கல. அப்படி போயிருந்தா இன்று நடிகையா உங்க முன்னாடி இருந்திருக்க மாட்டேன். பேட்மின்டனில் வீட்டுக்கு தெரியாமல் ஸ்டேட் லெவல் வரைக்கும் போனேன். கல்லூரியில் சேர்ந்த பிறகு விளையாட்டுக்கு போகக் கூடாதுனு அப்பா ஸ்ட்ரிட்டா ரூல்ஸ் போட்டாங்க. நடிப்பதற்குமே பல கட்டுப்பாடுகளோடுதான் வந்தேன். எல்லோரும் சொல்றமாதிரி வழக்கமான கதையா இருந்தாலும், அப்பா ஆர்மிங்கிறதுனால கொஞ்சம் கட்டுப்பாடு அதிகம். எங்களை ஸ்ட்ரிட்டாதான் வளர்த்தார். அப்பா முன் நின்னு பேசவே மாட்டேன்.  

என்னுடைய அண்ணனுக்காகத்தான் நடிக்கவே வந்தேன். அவன் கிரிக்கெட்டில் இருந்ததுனால நிறைய செலவு ஆகிட்டே இருந்தது. அப்பாவால செலவு பண்ண முடியல. அதனால கிரிக்கெட் விட்ருனு சொல்லும் போது அவனால தாங்கிக்கவே முடியல. ‘கிரிக்கெட் இல்லாம லைஃபே இல்லை’னு அவன் சொல்லும் போது, நான் ஏதாவது அவனுக்கு உதவி செய்யணும்ன்னு தோணுச்சு. அதே சமயம் என் குடும்பத்திற்கும் செய்யணும்ன்னு தான் நடிக்கவே வந்தேன். சொல்லப் போனா இது என்னோட ஆசையும் கிடையாது.

எல்லோருமா சேர்ந்து எனக்குள்ள உருவாக்குன ஆசை. நடிப்பு துறையில் பெரிய ஆளாகி அண்ணாவகிரிக்கெட்டர் ஆக்கிட்டு சினிமாவை விட்டு நின்னுடுவேனு தான் உள்ளே வந்தேன். அப்படி வந்த எனக்கு சினிமா பத்தி தெரிஞ்சுக்கவே ஒன்றரை வருஷம் ஆச்சு” என்று கூறும் ராதிகாவின் கனவே  தமிழ்த் திரை உலகில் நடிக்க வேண்டும் என்பதுதான்.

அன்னம் அரசு