தோழியருக்கான சனிப் பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்-ஜோதிடமணி வசந்தா சுரேஷ்குமார்



நிகழும் சார்வரி வருடம் மார்கழி மாதம் 11-ந்தேதி 26-12-2020 சனியன்று பின்னிரவு 4.49 (விடிந்தால்) 27-12-2020 ஞாயிறு அன்று உத்திராடம் 2 ஆம் பாதம் மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார். 27 நட்சத்திரத்தில்  பிறந்த தோழியருக்கு என்னென்ன நற்பலன்களை அள்ளித்தர காத்திருக்கின்றார் எனக் காண்போம்.

1. அசுவினி: வெளிப்படையாய் மனதில் பட்டதைப் பேசும் தன்மையும், எவருக்கும் உதவி செய்யும் பண்பான குணமும் கொண்ட தங்களுக்கு ஜீவனஸ்தானம் என்னும் பத்தாம் வீட்டில் குரு நீச்சம் பெற்று, சனி ஆட்சியாய் நீச்ச பங்க ராஜயோகமாய் சஞ்சாரம். எனவே தேக நிலையில் நல்ல தெளிவும், முன்னேற்றமும் காண்பீர்கள். பணவரவில் இருந்துவந்த தடைகள் நீங்கி பொருளாதார நிலை சீராகும். சகோதரர்களின் ஆதரவினால் மனம் நிம்மதி பெறும். உத்தியோகத்தில் இருந்து வந்த சிறு, சிறு பிரச்னைகள் நீங்கி மேலதிகாரி களின் பாராட்டைப் பெறுவீர்கள். இல்வாழ்க்கையில் இன்பங்கள் வந்து எட்டிப் பார்க்கும். செவ்வாய் அன்று பாலவிநாயகரை தரிசிக்க பாவங்கள் விலகும்.

2. பரணி: சாதிப்பதே தன் வாழ்வின் குறிக்கோள் என மனதில் வைராக்கியம் பூண்டு எடுத்த செயலை முடிக்கும் வரையில் ஓயாத வெற்றி ராணிகளான தங்களின் உத்தியோகஸ்தானம்  எனும் பத்தாம் வீட்டில் குருவும், சனியும் நீச்ச பங்க ராஜ யோகமாய் சஞ்சரிக்கும் வண்ணம் பெயர்ந்துள்ளார். எனவே அதிர்ஷ்டக்காற்று உங்களை நோக்கி வீசும் ஒரு நல்ல நேரமாய் அமைய உள்ளது. எனவே முகத்தில் வசீகரமும், பொலிவும் என வளைய வருவீர்கள். புதிய தொழில் அமையும் நல்ல நேரமிது. பணமுடை தீரும். கடன் சுமைகள் குறையும். இல்லத்தில் சுபிட்சம் வந்து எட்டிப்பார்க்கும். ஞாயிறு அன்று காளியம்மன் தரிசனம் காரிய வெற்றி தரும்.

3. கிருத்திகை: தெய்வ அனுக்கிரகம் அமையப்பெற்றவர்களும், உதவி செய்யும் உத்தம குணமும், தயாள மனமும் கொண்ட நல்ல திறமைசாலிப் பெண்மணிகளான தங்களுக்கு சனிபகவான் இப்பெயர்ச்சியினால் (1-ம் பாதம் 10-ம் வீடும்), 2, 3, 4-ம் பாதம் ரிஷப ராசிக்கு 9-ம் வீட்டிற்கு பிதுர்ஸ்தானத்தில் நீச பங்க ராஜயோகமாய் சஞ்சாரம். எனவே மனம் உற்சாகம் அடையும். முகம் பொலிவும், தெளிவும் பெறும். தந்தையின் மூலம் நிதி நிலைமை உயரும். புதிய சொத்துக்கள் அமையும். இல்லத்தில் ஓர் நிம்மதியும், சந்தோஷமும் வந்து மகிழ்விக்கும். ஞாயிற்றுக்கிழமையன்று ஷண்முகரை சேவிக்க தடைகள் நீங்கும்.

4. ரோகிணி: எப்போதும் கலகலப்பாய் சிரித்துப்பேசும் தன்மையான குணமும், உதவி செய்வதில் உங்களுக்கு நிகர் நீங்களே எனும்படியான தயாள மனமும் கொண்ட பண்பாளிகளான தங்களுக்கு சனிபகவான் பிதுர்ஸ்தானம் எனும் 9-மிடத்தில் ராஜயோகத்துடன் சஞ்சரிக்கின்றார். எனவே காரியத்தடைகள் யாவும் விலகி ஓடும். வெற்றிப்பாதையில் அடி எடுத்து வைப்பீர்கள். தேக நலம் சீராகும். தந்தையின் மூலம் பிதுர் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கி ஓர் தொகை கைக்கு வந்து சேரும். அசையாச் சொத்துக்கள் வாங்கத் திட்டமிடுவீர்கள். மக்களின் கல்வியில் முன்னேற்றம் கண்டு மகிழ்வீர்கள். குடும்ப ஒற்றுமையும், மகிழ்வையும் காண்பீர்கள். திங்கட்கிழமை திருமலையப்பனை தரிசனம் செய்ய வாழ்வில் நல்ல திருப்பம் வரும்.

5. மிருகசீரிடம்: சுய முயற்சியினால் வாழ்வில் முன்னேறத்துடிக்கும் நற்பண்புகளின் நாயகிகளான தங்களுக்கு (12-ம் பாதம் ரிஷப ராசி 9-மிடமும்) 3, 4-ம் பாதம் மிதுன ராசிக்கு அஷ்டமஸ்தானம் என்னும் 8-மிடம் குருவும், சனியும் நீச பங்க ராஜ யோகமாய் சஞ்சாரம். எனவே எண்ணிய செயல்களில் பல தடைகள் வரினும் பொறுமையுடன் செயல்பட்டு செய்து முடிப்பீர்கள். உடல்நலனில் கவனம் இருத்தல் அவசியம். தேவைக்கேற்ப பண வரவுகள் அமையும். சகோதரிகளின் நல் ஆதரவால் சொத்து வாங்க முயற்சிப்பீர்கள். யோசித்து செயல்படுதல் நன்று. உத்தியோகப் பெண்மணிகட்கு பணிச்
சுமைகள் கூடுதலாகும். பொறுப்புக்கள் அதிகம். எனவே உடல் சோர்வும், அசதியும் வரக்கூடும். வாய் வார்த்தைகளில் கவனம் தேவை. சனியன்று சனீஸ்வரர் சேவை நலம் தரும்.

6. திருவாதிரை: நெஞ்சில் உறுதியும், மனோ திடமும் கொண்டு எண்ணிய செயலை திட்டமிட்டு மதிநலத்தால் சாதித்துக்காட்டும் விவேகப் பெண்மணிகளான தங்களுக்கு அஷ்டமஸ்தானம் எனப்படும் எட்டாமிடத்தில் குரு நீச்சம், சனி ஆட்சியாய், நீச, பங்க ராஜயோகமாய் சஞ்சரிப்பதால் எச்செயலிலும் பொறுமையுடன் செயலாற்ற பெருமைகள் வந்து சேரும். தனவரவில் இழுபறிநிலை தென்படும். உடல்நலனில் கவனம் தேவை. அவசியமற்ற தொலைதூரப் பயணங்களைத் தவிர்த்தல் நன்று. உறவினர்களிடையே விட்டுக்கொடுத்து நடத்தல் பின்னாளில் நன்மைகள் வரக்கூடும். சிலருக்கு பணியிடை மாற்றங்கள் வரலாம். உங்களின் குடும்ப நலன் தங்களின் கைகளில்தான். ஞாயிறு அன்று கருமாரியம்மன் தரிசனம் கவலைகள் விலகி ஓடும்.

7. புனர்பூசம்: சிரித்துப்பேசுவதில் சமர்த்தும், நகைச்சுவை உணர்வுகள் அதிகமும் கொண்ட பண்பான பெண்மணிகளான தங்களுக்கு 1, 2, 3-ம் பாதம் மிதுன ராசிக்கு 8-மிடமும், 4-ம் பாதம் கடக ராசிக்கு சப்தமஸ்தானம் என்னும் ஏழாமிடத்தில் நேர்பார்வையுடனும் குருச்சந்திர யோகமும், நீச்ச பங்க ராஜ யோகம், (குரு நீசம், சனி ஆட்சி) என சஞ்சாரம். எனவே உடல் வனப்பும், தெளிவும் வந்து சேரும். பண வரவிற்கு புதிய வழிகள் தென்படும். பொருளாதார நிலைமை உயரும். கடன் பாக்கிகள் வீடு தேடி வரும். கலைத்துறையினர்கள் புதிய வாய்ப்புக்களால் நன்மை அடைவீர்கள். பயணங்கள் அமையும். மகான்களை தரிசிப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி கண்டு மகிழ்வீர்கள்.
வியாழக்கிழமையன்று தட்சிணாமூர்த்தியை சேவிக்க விருப்பம் நிறைவேறும்.

8. பூசம்: எப்போதும் வேகமாய் செயல்படும் இயல்பும், திறமைகள் அதிகம் கொண்ட அதிர்ஷ்டக்காரப் பெண்மணிகளான தங்களுக்கு இச்சனிப்பெயர்ச்சி சப்தமஸ்தானம் எனப்படும் நேர் பார்வை கொண்ட ஏழாம் வீட்டில் ஆட்சியாயும், குருச்சந்திர யோகத்துடன், நீச்ச பங்க ராஜ யோகமாயும் சஞ்சாரம். எனவே நினைத்த செயல்கள் எதுவாயினும் விரைந்து முடிக்கும் நேரம். பொருளாதார நிலை மேன்மையாகும். வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும். தேகம் தெம்பும், வசீகரமாகவும் தென்படும். தாய் வீட்டின் ஆதரவால் சொத்து வாங்குவீர்கள். சிலரின் திருமணம் உடனே முடிவாகும். இல்லத்தில் மங்கள நிகழ்வால் சந்தோஷம் வந்து எட்டிப்பார்க்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேர்ந்து மகிழ்வீர்கள். திங்கட்கிழமையன்று காமாட்சியை தரிசிக்க திருப்பங்கள் வரும்.

9. ஆயில்யம்: முன்யோசனைகள் அதிகம் கொண்ட அறிவு ஜீவிகளும், எதையும் மதிநுட்பத்தினால் செய்து முடிக்கும் திறமைகள் கொண்ட விவேகப் பெண்மணிகளான தங்களுக்கு சனிபகவான் இப்பெயர்ச்சியினால் களத்திரஸ்தானம் எனப்படும் சப்தமஸ்தானத்தில் நேர் பார்வையாய் 7-ம் வீட்டிற்கு பெயர்ச்சி ஆகின்றார். அத்துடன் 7-ல் குருபகவான் நீச்சம், சனி ஆட்சி என்று நீச்ச பங்க ராஜ யோகமாய் சஞ்சாரம். எனவே உங்களின் எண்ணங்கள் செயல் வடிவம் பெறும் இனிய நேரம். பண வரவிற்கான வழிகள் தென்படும். உடல் ஆரோக்கியம் தெளிவு பெறும். மாணவிகள் அதிக மதிப்பெண்களைப்பெற்று முதலிடம் பிடிப்பீர்கள். இல்லறம் நல்லறமாய்த் திகழக்கூடும். சனிக்கிழமையன்று சனீஸ்வரரை தரிசிக்க சங்கடங்கள் விலகும்.

10. மகம்: நட்பிற்கு இலக்கணமாய்த்திகழும் பண்பான தங்களுக்கு இச்சனிப்பெயர்ச்சி கடன், பிணி, பகை, சத்ருஸ்தானம் எனப்படும் 6-மிடம் சஞ்சாரம், அத்துடன் குருவுடன் இணைந்து நீச்ச பங்க ராஜயோகம் ஏற்பட்டுள்ளது. எனவே எண்ணிய எண்ணங்கள் ஒவ்வொன்றாய் நிறைவேறும். புதிய தொழில் ஆரம்பிக்க நட்பு வட்டம் கை கொடுக்கும். வரவேண்டிய பழைய பாக்கிகள் வந்து சேரும். உறவினர்களின் மத்தியில் பெருமையுடன் பேசப்படுவீர்கள். தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும். புதிய சொத்துக்கள் வாங்க முயற்சி செய்வீர்கள். தாயாரின் மூலம் நன்மைகள் வந்து சேரும். உத்தியோக முயற்சிகள் வெற்றியாகும். சுபமங்கள நிகழ்வினால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். திங்கட்கிழமையன்று சிவபெருமானை தரிசிக்க சிறப்புக்கள் கூடும்.

11. பூரம்: செய்யும் செயலை கண்ணும் கருத்துமாய் செய்து முடிக்கும் விவேகப் பெண்மணிகளான தங்களுக்கு ரோகஸ்தானம், சத்ருஸ்தானம் எனப்படும் ஆறாமிடத்தில் குரு நீச்சம் பெற்றும், சனிப்பெயர்ச்சியால் ஆட்சி பெற்று நீச்ச பங்க ராஜ யோகமாய் சஞ்சாரம். இதன் பயனால் உங்களின் கனவுகள், ஆசைகள், எண்ணங்கள் நிறைவேறும் ஓர் இனிய நேரம். தேகம் பொலிவாகும். தனவரவில் முன்னேற்றமும், பொருளாதார நிலையில் ஏற்றமும் காட்டும். நட்பு வட்டம் மூலம் நன்மைகள் வந்து சேரும். வீடு, வாகனம், நவரத்தினங்கள் என சேரும். மனதில் உற்சாகம் பிறக்கும். திருமணம், விருந்து, பார்ட்டி, என கலந்துகொள்வீர்கள். பிரிந்த உறவுகள் ஒன்றாகும் தருணம். சிலரின் தடைபட்ட திருமணம் கூடும். இல்லத்தில் மகிழ்ச்சி கூடுதலாகும். வெள்ளிக்கிழமையன்று மகாலட்சுமியை தரிசிக்க மங்களம் உண்டாகும்.

12. உத்திரம்: உயர்ந்த எண்ணங்களும், நல்ல நோக்கங்களுடன் செயல்படும் செயல்திறமை அதிகம் கொண்ட வீரப்பெண்மணிகளான தங்களுக்கு இச்சனிப்பெயர்ச்சி 1-ம் பாதம் சிம்ம ராசிக்கு 6-மிடத்திலும், 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசிக்கு பூர்வ புண்ணியஸ்தானம், புத்திரஸ்தானம் எனப்படும் 5-ம் வீட்டிலும் நீச்ச பங்க ராஜயோகமாய்ச் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் நல்ல தெளிவும், சுறுசுறுப்பும் உண்டாகும். நிதிநிலைமை சீராக பொருளாதார நிலையில் முன்னேற்றம் காட்டும். சகோதரிகளால் நன்மை பெறுவீர்கள். தாய் வீட்டின் மூலம் அனுகூலம் பெறுவீர்கள். சுபநிகழ்வுகள் கூடிவரும். இல்லம் பெருமை பெறும் நேரம். ஞாயிறு அன்று சூரிய பகவானை தரிசிக்க சுபிட்சம் வந்து சேரும்.

13. அஸ்தம்: அன்பிற்கு மட்டும் தலை வணங்கும் தன்மையான குணம் கொண்ட பண்பான பெண்மணிகளான தங்களுக்கு இச்சனிப்பெயர்ச்சி (5-மிடம்) புத்திரஸ்தானம், பூர்வ புண்ணியஸ்தானம் என்னும் வீட்டிற்கு பெயர்ச்சியாகின்றார். இவ்வாண்டு குரு நீச்சம், சனி ஆட்சி பெற்றும் நீச்ச பங்க ராஜயோகமாய் சஞ்சரிப்பதால் எதிலும் வெற்றி வாகையை சூடுவீர்கள். நினைத்த செயல்கள் யாவும் ஒவ்வொன்றாய் நிறைவேறும். தேகம் பளிச்சென்று மின்னும். மனதில் புதுவிதமான தைரியமும், உற்சாகமும் பிறக்கும். பண வரவில் இருந்த தடைகள் நீங்கி சரளமான பண வரவிற்கு வழிகள் தென்படும். பிதுர் சொத்துக்கள் மூலம் அனுகூலம் பெறுவீர்கள். சிலருக்கு அரசுப்பணியில் வேலை கிட்டும். இல்லத்தில் சுபிட்சம் தென்படும். திங்கட்கிழமை வரதரை தரிசிக்க வாழ்வு வளமாகும்.

14. சித்திரை: உயர்ந்த நோக்கங்களும், மனதில் தெளிவான எண்ணங்களுடன் செயல்பட்டு வெற்றி வாகை சூடும் வீரமங்கைகளான உங்கள் ராசியின்படி 1, 2-ம் பாதம் கன்னிக்கு 5-மிடத்திலும், 3, 4-ம் பாதம் துலாம் ராசிப் பெண்மணிகட்கு சுகஸ்தானம் என்னும் நான்காமிடத்திற்கு அர்த்தாஷ்டமச் சனியாய் சஞ்சாரம். எனவே எதிலும் பதட்டம் கூடாது. புதிய முயற்சிகளில் ஈடுபடும் நேரம் யோசித்து செயலாற்றுதல் நலம் அளிக்கும். வாகனங்களில் பயணிக்கும்போது சாலையின் விதிகளை மதித்து நடப்பது நன்று. தேக நலனில் கவனம் இருக்கட்டும். தனவரவிற்கு பஞ்சமிராது. தடைபட்டு வந்த திருமணம் சிலருக்கு கைகூடும். மகப்பேறு வேண்டி நிற்போர் வெற்றி காண்பீர்கள். இல்லம் சுபிட்சமடைய இறைவழிபாடு செய்யுங்கள். செவ்வாய் அன்று செல்வ கணபதியை தரிசிக்க நலமுண்டு.

15. சுவாதி: எவருக்கும் உதவி புரியும் உத்தம குணமும், தொண்டு நலம் கொண்ட மனமும் உடைய தியாகப் பெண்மணிகளான தங்களுக்கு இச்சனிப்பெயர்ச்சி மாதுர்ஸ்தானம் எனப்படும் நான்காம் வீட்டிற்கு அர்த்தாஷ்ட சனியாயும், குரு நீச்சம், சனி ஆட்சி நீச்ச பங்க ராஜயோகமாய் சஞ்சாரம். எனவே உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். பணவரவில் தடைகள் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு. எனவே எதிலும் நிதானத்துடன் செயல்படுதல் உசிதம். கோபம் கூடாது. தேவையற்ற தொலைதூரப்பயணங்களை கூடுமானவரை தவிர்த்தல் நலம். சிலருக்கு பணியிட மாற்றங்கள் வரலாம். மேலதிகாரிகளிடம் பணிவு காட்டுதல் நலமளிக்கும். இல்லறம் சிறப்பு பெற இறைவழிபாட்டை மேற்கொள்ளவும். ஞாயிறு அன்று கருட தரிசனம் கவலைகளை நீக்கும்.

16. விசாகம்: நயமுடன் இனிமையாய்ப் பேசி காரியம் சாதிப்பதில் வெகு திறமைசாலிப் பெண்மணிகளான தங்களுக்கு இச்சனிப்பெயர்ச்சி 1, 2, 3-ம் பாதம் துலா ராசிக்கு 4-மிடத்திற்கும், 4-ம் பாதம் விருச்சிக ராசிக்கு 3-மிடத்திற்கும் சஞ்சாரம். எனவே மனதில் தெம்பும், புதுவிதமான தைரியமும் வந்து சேரும். தேக ஆரோக்கியம் சீரடையும். பண வரவில் இருந்துவந்த தடைகள் நீங்கி சரளமான பணவரவிற்கு வழிகள் தென்படும். சிலருக்கு திருமண யோகம் கூடிவரும். உத்தியோக முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். சிலருக்கு பணிச்சுமைகள், பொறுப்புக்கள் கூடுதலாகும். மக்களின் கல்வி முன்னேற்றம் திருப்தி அளிக்கும். இல்லத்தில் குழப்பங்கள் நீங்கி அமைதியைக் காண்பீர்கள். வியாழக்கிழமையன்று குருபகவான் தரிசனம் குறைகள் தீரும்.

17. அனுஷம்: ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்று தன் காரியத்தில் கண்ணாய் நின்று செயல்படுபவர்களும், உயர்ந்த நோக்கங்கள், பரந்த மனப்பான்மையுடன், தொண்டு நலம் புரியும் வெற்றியின் ராணிகளான உங்களை சுமார் 8 ஆண்டுகள் திக்குமுக்காடச்செய்த சனிபகவான் தங்களை மகிழ்விக்க மூன்றாமிடம் எனும் தைரியஸ்தானத்தில் ஆட்சி பெற்றும், குருவுடன் இணைந்து நீச்ச, பங்க ராஜயோகமாய் சஞ்சாரம் செய்வதால் எதிலும் வெற்றி முகம்தான். தேகம் சீராகும். பண வரவு இரட்டிப்பாகும். சகோதரர்களால் நன்மையுண்டாகும். வீடு, வாகனம் சேரும். ஆன்மிகப்பயணம் கூடும். விருந்தில் கலந்துகொள்வீர்கள். இல்லத்தில் சுபநிகழ்வுகள் கூடிவரும். பிதுர் சொத்தினால் அனுகூலம் பெறுவீர்கள். சனிக்கிழமையன்று லட்சுமி நரசிம்மரை தரிசிக்க சந்தோஷம் வரக்கூடும்.

18. கேட்டை: எதையும் தாங்கும் மனோதிடமும், எதிரிகளையும் எளிதில் மன்னிக்கும் மனோபாவமும் உடைய தன்மையான பெண்மணிகளான தங்களுக்கு சனிப்பெயர்ச்சி சகோதரஸ்தானம், தைரியஸ்தானம் என்னும் 3-ம் வீட்டிற்கு ஆட்சி பெற்றும், குரு நீசம் பெற்றுள்ளவருடன் இணைந்து நீச்ச பங்க ராஜயோகமாய் சஞ்சாரம். எனவே தங்கள் நீண்டநாளைய தடைபட்ட செயல்கள் வெற்றியாகும். உடல்நலம் தெம்பாகும். பணவரவு அதிகரிக்கும். சிலர் புதிய வங்கிக்கணக்கைத் தொடங்குவர். சகோதர, சகோதரிகள் ஆதரவுக்கரம் நீட்டுவர். பிதுர் சொத்துக்கள் மூலம் ஒரு பெருந்தொகை கைக்கு வந்து சேரும். புதிய வீடு அமையும் வாய்ப்பு உண்டு. மக்களால் மகிழ்ச்சி உண்டு. செவ்வாய் அன்று மாமல்லபுரம் நிலமங்கைத் தாயார் தரிசனம் நினைத்த காரியம் ஜெயமாகும்.

19.மூலம்: கலகலப்பான சுபாவமும், எடுத்த செயலை முடிக்கும் வரையில் ஓயாமல் போராடி வெற்றி பெறும் செயல் ராணிகளான தங்களுக்கு இச்சனிப் பெயர்ச்சி தனஸ்தானம், வாக்கு, குடும்பம் என்னும் இரண்டாம் வீட்டில் ஆட்சி பெற்றும், ராசிநாதனான குருபகவானுடன் இணைந்து நீச்ச பங்க ராஜயோகமாய் சஞ்சாரம். எனவே தேகம், மனம் சீராகும். தனவரவில் முன்னேற்றம் உண்டாகும். சகோதரிகள் மூலம் ஆதாயம் கிடைக்கப்பெறுவீர்கள். விருந்து, உபசாரங்களில் கலந்துகொள்வீர்கள். உங்களின் நெடுநாளைய ஆசைகள் பூர்த்தியாகும் நேரம். தாய் வீட்டின் அன்பைப் பெறும் அற்புதமான நேரமிது. கடன் சுமைகள் குறையும். மேலதிகாரிகள் பாராட்டும் வண்ணம் நடந்துகொள்வீர்கள். சனியன்று ஆஞ்சநேயரை தரிசிக்க ஆற்றல்
பெருகக்கூடும்.

20. பூராடம்: நேருக்கு நேர் நின்று எவரையும் துணிவுடன் எதிர்கொள்ளும் திறமைசாலிப் பெண்
மணிகளான தங்களுக்கு இச்சனிப்பெயர்ச்சி குடும்பஸ்தானம் என்னும் இரண்டாமிடத்தில் ஆட்சி பெற்று குருவுடன் இணைந்து நீச்ச பங்க ராஜயோகமாய் சஞ்சாரம். எனவே நினைத்த காரியம் யாவும் ஜெயமாகும். பொருளாதார நிலை உயரும். புதிய தொழில் ஆரம்பிக்க நட்பு வட்டம் கை கொடுக்கும். தேகம் பளிச்சிடும். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். குடும்பத்தினரிடையே இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கி ஒற்றுமையாகும் தருணம். சிலருக்கு அரசாங்க வேலை கிட்டும். மாணவிகட்கு அயல்நாடு சென்று கல்வி பயில அழைப்புக்கள் வரக்கூடும். இல்லறம் நல்லறமாகும். வெள்ளிக்கிழமை மீனாட்சி தரிசனம் வெற்றி வந்து சேரும்.

21. உத்திராடம்: நட்பிற்கு இலக்கணமாய் விளங்கும் பரோபகாரச் சிந்தனையும், சிரித்துப்பேசி காரியம் சாதிப்பதில் சாமர்த்தியமும் கொண்ட வெற்றிப்பெண்மணிகளான தங்களுக்கு இச்சனிப்பெயர்ச்சி 1-ம் பாதம் தனுர் ராசிக்கு இரண்டாம் வீட்டிலும், 2, 3, 4-ம் பாதம் மகர ராசிக்கு ஜென்மச்
சனியாய், ராசிநாதனான சனிபகவான் ஆட்சியாய், குருவுடன் இணைந்து நீச்ச பங்க ராஜயோகமாய் சஞ்சரிப்பதால் உடல்நலம் பொலிவடையும். தனவரவில் இருந்து வந்த தடைகள் நீங்கி சரளமான பணவரவில் நிதி நிலைமை சீரடையும். மனதில் புதுவிதமான தைரியம் பிறக்கும். மகான்களை தரிசிப்பீர்கள். தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வீர்கள். இல்லத்தில் சுபமங்கள நிகழ்வால் மகிழ்வு உண்டு. ஞாயிறு அன்று பைரவரை வணங்க
எதிரிகள் தொல்லைகள் நீங்கும்.

22. திருவோணம்: அன்பிற்கு மட்டுமே தலை வணங்கும் பண்பான குணமும், எந்த நிலையிலும் மனம் தளராமல் உறுதியுடன் நின்று செயலாற்றி வெற்றிக்கனியை தட்டிச்செல்லும் செயல் ராணிகளான தங்களுக்கு இச்சனிப்பெயர்ச்சி ஜென்மச்சனியாய் ஆட்சி பெற்றும், ராசியில் குரு நீச்சமாயும் நீச்ச பங்க ராஜயோகமாய் சஞ்சாரம். எனவே தேக நிலையில் நல்ல தெளிவும், வசீகரமும் ஏற்படும். தனவரவில் நல்ல திருப்பமும், பொருளாதார முன்னேற்றமும் உண்டாகும். விருந்து உபசாரங்களில் கலந்துகொள்வீர்கள். சித்தர்களின் தரிசனம் கிடைக்கும். கடன் சுமைகள் தீரும். பிதுர்க்கள் மூலம் நன்மைகள் வந்து சேரும். புதிய வீடு, வாகனம் என சொத்துக்கள் அமையும். இல்லத்தில் ஒற்றுமை மேலோங்கும். திங்கட்கிழமையன்று சோமநாதரை தரிசிக்க திருப்பங்கள் வந்து சேரும்.

23. அவிட்டம்: அன்பால் அனைவரையும் வசப்படுத்தும் தனித்திறன் கொண்ட அழகின் சொந்தக்காரிகளான தங்களுக்கு இச்சனிப்பெயர்ச்சி 1, 2-ம் பாதம் மகர ராசிக்கு ஜென்மத்திலும், ஏழரைச்சனியாயும், 3, 4-ம் பாதம் கும்ப ராசிக்கு 12- வீட்டில் தலைச்சனியாய் சஞ்சாரம். எனவே தேகத்தில் தெம்பும், தைரியமும் என வளைய வருவீர்கள். பணவரவிற்கு தடையிராது. புதிய உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். கலைத்துறைப் பெண்களின் நீண்டநாளைய ஆசைகள் நிறைவேறும். தடைபட்டு வந்த திருமணம் திடீரென்று முடிவாகும். சிலருக்கு இடமாற்றம் வரலாம். தேவையற்ற தொலைதூரப் பயணங்களை தவிர்த்தல் நலம். தெய்வ வழிபாடுகள் நிறைவேறும். இல்வாழ்வில் நிம்மதி தென்படும். செவ்வாய்க்கிழமையன்று துர்க்கையை சேவிக்க துன்பங்கள் விலகி ஓடும்.

24. சதயம்: உழைப்பால் உயர்ந்த இடத்தைப் பிடிக்கும் போராளிப் பெண்மணிகளான சிரித்த முகத்தின் மூலம் எதையும் சாதிக்கும் திறமை
சாலிகளான தங்களுக்கு இச்சனிப்பெயர்ச்சி ஏழரையாண்டு சனியாய் ஆரம்பம். தலைச்சனியாய் 12-மிடத்தில் ஆட்சி பெற்று, குருவுடன் இணைந்து நீச்ச பங்க ராஜயோகமாய் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானம் தேவை. அவசரத்தினால் நட்டம் உண்டாகும். பொருளாதார நிலையில் இழுபறி நிலை உண்டாகும். பொறுமையுடன் செயல்பட நன்மையுண்டு. உத்தியோகத்தில் இடமாற்றம், பணிச்சுமைகள் வந்து சேரும். உடல் அசதியும், சோர்வும் வரலாம். எனவே இறைவழிபாட்டில் கவனம் செலுத்துதல் நன்று. வாய் வார்த்தைகளில் கவனம் தேவை. புதன்கிழமை விஷ்ணு தரிசனம் விருப்பம் நிறைவேறும்.

25. பூரட்டாதி:  நட்பிற்கு இலக்கணமாய்த்திகழும் நல்ல உள்ளமும், வெளிப்படையாய்ப் பேசும் குணமும் கொண்ட பண்பாளிப்பெண்மணிகளான உங்களுக்கு இச்சனிப்பெயர்ச்சி 1, 2, 3-ம் பாதம் கும்ப ராசிக்கு 12-ம் வீட்டிலும், 4-ம் பாதம் மீன ராசிக்கு 11-ம் வீடான லாபஸ்தானத்தில் சனிபகவான் ஆட்சி பெற்றும், ராசிநாதன் குருபகவான் பதினொன்றாம் வீட்டில் நீச்சம் பெற்று நீச்ச பங்க ராஜயோகமாய் சஞ்சாரம். எனவே எண்ணிய செயல்களில் வேகத்துடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். உடல்பலம், மனபலம் உண்டாகும். தனவரவு இரட்டிப்பாகும். புதிய வங்கிக்கணக்கைத் தொடங்குவீர்கள். புதிய வீடு, வாகனம் சேரும். இல்வாழ்வு நல்வாழ்வாய் மலரும். வியாழன் அன்று தட்சிணாமூர்த்தி தரிசனம் தடைகள் நீங்கும்.

26. உத்திரட்டாதி: எதிலும் முதன்மை பெற்றுத்திகழும் அறிவு ஜீவிப் பெண்மணிகளான உங்களின் அறிவாற்றல் திறமையினால் வெற்றிக்கொடி நாட்டும் ஜெயராணிகளான தங்களுக்கு இச்சனிப்பெயர்ச்சி லாபஸ்தானம் என்னும் பதினொன்றாம் வீட்டில் ஆட்சி பெற்றும், ராசிநாதன் குருநீச்சம் பெற்றும் நீச்ச பங்க ராஜயோகமாய் சஞ்சாரம். எனவே தேகநலன் கூடும். உடலில் வேகமும், விவேகமும் என வளைய வருவீர்கள். முகம் வசீகரமாகும். பணமுடை தீரும். நிதி நிலைமை உயரும். எதிலும் வேகமாய் செயல்படுவீர்கள். சிலர் புதிய வீட்டிற்கு குடிபோவீர்கள். குலதெய்வப்பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு உத்தியோகத்தில் வேலைச்சுமைகள் கூடுதலாகும். இல்வாழ்வு நல்வாழ்வாய் மலரும். சனியன்று சனீஸ்வரர் தரிசனம் சலனங்கள் விலகும்.

27. ரேவதி:  பொதுத்தொண்டில் ஆர்வமும், சமூகநல விரும்பிகளான பரந்த மனப்பான்மையுடன் செயல்படும் உத்தமப் பெண்மணிகளான தங்களுக்கு இச்சனிப்பெயர்ச்சி அதிர்ஷ்டங்களை அள்ளித்தர உள்ளது. லாபஸ்தானம் என்னும் பதினொன்றாம் வீட்டில் ராசியாதிபதியான குருவுடன் இணைந்து நீச்ச பங்க ராஜயோகமாய் சஞ்சரிப்பதால் எடுத்த காரியம் யாவுமே ஜெயம்தான். புதிய தொழில் ஆரம்பிக்க எல்லா வகையிலும் நன்மைகள் கிட்டும். நட்பு வட்டம் வந்து கை கொடுக்கும். நிதி நிலைமை உயரும். பொருளாதாரத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வு பெறுவீர்கள். சிலருக்கு மகப்பேறு அமையும். இல்வாழ்வு இன்ப வாழ்வாகும். புதன்கிழமையன்று ரங்கநாதரை தரிசிக்க புகழ் வந்து சேரும்.