தேசிய கல்விக் கொள்கை 2020 பெண் குழந்தைகள் இடைநிற்றல் அதிகரிக்கும்!



கொரோனாவிற்கு அடுத்தபடியாக பல விஷயங்கள் இந்தியாவில் விவாதிக்கப்பட்டு வந்தாலும், சமீபத்தில் சூடு பிடித்திருப்பது ‘புதிய கல்விக் கொள்கை.’ 34 ஆண்டுகளுக்குப் பிறகு கஸ்தூரி ரங்கன் கமிட்டி ஆய்ந்து, அறிந்து அளித்த புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு தற்பொழுது ஏற்றுக் கொண்டுள்ளது.
புதிய கல்விக் கொள்கை குறித்து தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் ஆதரவு, எதிர்ப்பு என இரு வேறு கருத்துகள் வெளியிடப்பட்டு வருகின்றன. குறிப்பாக தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை, இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிப்பதாக குற்றச்சாட்டு வலுத்துள்ளது.  ஆனால், தமிழக அரசு “மும்மொழிக் கொள்கையினை தமிழ்நாட்டில் எப்போதும் அனுமதிக்காது. இருமொழி கல்விக் கொள்கையை மட்டுமே தொடர்ந்து பின்பற்றும்” என தெரிவித்தது.  

புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளோர் முன் வைப்பது, “பல அம்சங்கள் முற்போக்கானதாகவும், அனைத்து பிரிவினருக்கும் சமவாய்ப்பு (Equity and Equality) அளிக்கக் கூடியதாகவும், மனப்பாடம் செய்து ஒப்புவிப்பது, தேர்வு எழுதுவது, மதிப்பெண்கள் பெறுவது எனும் பழைய பஞ்சாங்க வழிமுறைகளை தவிர்த்து குழந்தைகளின் பன்முக அறிவுத் திறமையை வளர்ப்பதற்கு உரிய வாய்ப்புகளை புதிய கல்விக் கொள்கை உருவாக்கும்” என்கின்றனர்.

மேலும், ‘‘இதுவரை ஆசிரியரை மையப்படுத்தி இருந்த கல்வி முறைக்கு மாறாக, குழந்தையை மையப்படுத்தி அமைந்துள்ள (Child Centric) புதிய கல்வி முறை குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் மன அழுத்தத்தை வெகுவாக குறைக்கும்.  எந்தக் குழந்தையும் சமூக சூழ்நிலை காரணமாகவோ அல்லது பின்புலம் காரணமாகவோ, கல்வி கற்கும் வாய்ப்பை இழந்து விடக் கூடாது என்பதை உறுதி செய்கிறது. தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.

ஆதரவாக இவ்வாறு பல கருத்துக்கள் முன் வைத்தாலும், புதிய கல்விக் கொள்கையில் உள்ள சிக்கல்கள் பற்றி விளக்கினார் பேராசிரியர் அ.ராமசாமி.
‘‘தமிழகம் மட்டுமல்ல மற்ற மாநிலங்களிலும் பிரதானமாக எதிரொலிப்பது மும்மொழி தான். தற்போது தேர்தலுக்காக மும்மொழிக்கு எதிராக குரல் கொடுத்திருக்கும் அதிமுக அரசு, தேர்தலுக்குப் பின் என்ன நிலைப்பாட்டில் இருக்கப் போகிறார்கள் என்பது முக்கியம். மொழியை மட்டுமே கற்றுக் கொள்ள வேண்டும் என்று இருக்கும் மாணவர்களுக்கு இதில் எந்த பிரச்சினையும் இல்லை.    

நான் போலந்து நாட்டில் வேலை பார்க்கும் போது, அந்த மாணவர்களில் சிலர் மொழிகள் மட்டும் கற்றுக் கொள்ள வேண்டும் என்றிருந்தார்கள். டிகிரி முடிக்கும் போதே அவர்களின் தாய் மொழியான போலிஷோடு ஐந்து மொழிகளுக்கு மேல் தெரிந்து வைத்திருந்தார்கள். சோசலிச நாடாக இருந்த போது ரஷ்ய மொழி கற்று கொடுக்கப்பட்டது. 1990களுக்கு பிறகு ரஷ்ய மொழிக்கு பதில் தங்கள் தேவையின் நிமித்தமாக ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம்… என இதில் எது தேவையோ அதை கற்றுக் கொண்டனர். அதுவும் அவர்களது விருப்பத்தின் பேரிலே தவிர கட்டாயத்தினால் இல்லை.

மொழி என்பது படிப்பதற்கும், பேசுவதற்குமான கருவி. மற்ற நாடுகளில் மொழி  பாடத்திட்டத்தில் கட்டாயமாக்கப்படுவதில்லை. ஆனால், இங்கு அதை செயல்படுத்த முனைகின்றனர். அனைவரும் இந்தி கற்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்றனர். இதில் எங்கு சிக்கல் என்றால், தாய் மொழியோடு சேர்த்து இரண்டு மொழி படிக்கும் போது மாணவர்களுக்கு சிரமம் ஏற்பட்டு தேர்ச்சி பெறுவதில் சரிவு ஏற்பட வாய்ப்பு அதிகம். இதனால் இடைநிற்றல் அதிகமாகும்” என்று கூறும் அ.ராமசாமி, பாடத்திட்டத்தில் உள்ள குளறுபடிகளை விளக்கினார்.

‘‘5,8,10,12 என்றிருந்த பாடத்திட்டத்தில், தற்போது கிண்டர் கார்டனும் கட்டாயமாக்கப்படுகிறது. இதனால் மூன்று வயதிலிருந்து பள்ளி தொடங்குகிறது. அவர்களுக்கு 5 வயதில் ஒரு தேர்வு வைத்து முதல் வடிகட்டுதல் ஆரம்பமாகிறது. உயர் கல்விக்கு வருவதை தடுப்பதற்கான எல்லா வழிகளையும் செய்கின்றனர். ஐந்தாவது முடித்து ஆறாவது போகும் 11 வயதில், தொழிற்கல்விப் பாடங்களை அறிமுகப்படுத்துகின்றனர். ஒரு மாணவன் ஐந்தாவது முடித்ததும் அவனுக்கு சரியாக படிப்பு வரவில்லை என்பதால் ‘தொழிற்கல்விக்கு போ’ என்றால் எங்கு போவான். தற்போதைய வரைவில் எந்த மாதிரியான தொழிற்கல்வி என்பதையும் குறிப்பிடவில்லை.

அடுத்து கல்லூரிகளுக்கு பதில் பல்கலைக் கழகங்கள். இது ஐரோப்பாவில் இருக்கும் முறைதான். ஆனால் அங்கு வெற்றிகரமாக இருக்கிறது. நான் இருந்த வார்ஸா பல்கலைக் கழகம், வார்ஸா நகரில் மட்டும் 26 இடங்களில் அதனுடைய சென்டர்களை வைத்துள்ளது. அங்கு ஒரு மாணவர் விரும்பினால் 4 வருடத்தில் 2 டிகிரி கூட படிக்கலாம்.  இந்தியாவின் பல கிராமங்களில் கல்லூரிகள் ஆரம்பித்துவிட்டார்கள். அந்த கல்லூரிகள் எல்லாம் இனி இருக்காது. உதாரணமாக திருநெல்வேலியில் 10 கல்லூரிகள் இருக்கிறதென்றால் அதை மூன்று பல்கலைக் கழகங்களாக மாற்றுவார்கள். ஒரே அட்மிஷனாக இருக்கும்” என்று கூறும் அ.ராமசாமி, இங்கு தொழிற் கல்வியினால் என்ன மாதிரியான விளைவுகள் உண்டாகும் என்பதை கூறினார்.

‘‘தொழிற்கல்வியில் கூட இங்கு என்ன சிக்கல் என்றால் எல்லாமே சாதியுடன் அடையாளப்படுத்தி இருப்பதுதான். ஐரோப்பாவிலும் தொழிற்கல்வி இருக்கிறது. ஆனால், அங்கு நம் ஊர் மாதிரி சாதி சார்ந்திருப்பதில்லை.  இங்கு ஒரு 12 வயது மாணவனுக்கு ஆடு வளர்க்கலாம், தச்சு வேலை பார்க்கலாம், வேளாண்மை செய்யலாம்… என்று சாய்ஸ் கொடுத்தால் எதை தேர்வு செய்வான். ஏற்கனவே வீட்டில் பழக்கப்பட்ட வேலையைத் தானே…? இருந்தாலும்  முழுமையாக அப்படிதான் போகும் என்றும் சொல்ல முடியாது. முந்தைய வரலாறுகளின் கணிப்புதான் இது.  தற்போது கல்வி கொள்கை அறிவிப்புகளாக  மட்டுமே இருக்கிறது. அது செயல்வடிவமாகும் போதுதான் இன்னும் என்னென்ன பிரச்சினைகள் இருக்கிறது என்பது முழுமையாக தெரியும்” என்றார்.

“பெண்கள் கல்வி குறித்து, ‘நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் சமவாய்ப்பளிக்கும், உள்ளடக்கிய கல்வி’ என்ற தலைப்பின் கீழ் சில குறிப்புகள் கொடுத்திருந்தாலும்  தற்போதைய கல்விக்கொள்கை பெண் குழந்தைகள் இடை நிற்றலுக்கு அதிக இடம் கொடுக்கும்” என்கிறார் ஆசிரியர் புவனேஸ்வரி.
“25 மாணவர்களுக்கு கீழ் உள்ள பள்ளிகளை அருகில் உள்ள பள்ளிகளோடு ஒன்றிணைப்பதாக சொல்கிறார்கள்.

உயர்நிலை, மேல்நிலை, அங்கன்வாடி என எல்லாமே ஒரே இடத்தில் இயங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பொதுவாக 2 கி.மீ தொலைவிற்கு ஆரம்பப் பள்ளிகள் இருக்கிறது. இவ்வாறு இருக்கும் பள்ளிகளை எல்லாம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இணைக்கும் போது குழந்தைகள் பள்ளிக்கு வர முடியாத சூழல் உருவாகும். குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகும்.

ஒரு நாள் போல் எல்லா நாளும் பெற்றோர்களால் விட முடியாத நிலையில் உள்ள  குழந்தைகளின் படிப்பை பாதியில் நிறுத்துவதற்கான வாய்ப்பினை உருவாக்கி கொடுக்கிறது இந்த கல்விக் கொள்கை. அதே போல் தேர்வின் பயத்தினால் பல குழந்தைகள் பள்ளி வர சுணங்கும் போது 3,5,8 வகுப்புகளுக்கான தேர்வுகள் தேவைதானா? இதில் குறிப்பாக எட்டாம் வகுப்பு தேர்வின் போது பல பெண் குழந்தைகள் பருவம் அடையும் வயது, மாதவிடாய் நாட்கள் போன்ற காரணங்களால் தேர்வு எழுத வரமுடியாமல் இருக்கலாம். எங்கள் பள்ளியிலேயே இது போன்று நடந்திருக்கிறது. அப்படி வரவில்லை என்றால் என்ன மாதிரியான மதிப்பீடுகள் இருக்கும் என்பதும் தெளிவாக இல்லை.    

முக்கியமாக பெண் குழந்தைகள் ஊட்டச்சத்துக்கான சிறப்பு அறிவிப்புகள் ஏதும் இல்லை. 3 வயது முதல் 18 வயது வரை உள்ள இந்திய பெண் குழந்தைகள் சத்துக் குறைபாடுகள் உள்ளவர்களாகவே உள்ளனர். இது போக மலைவாழ் பள்ளிகளில் பெண்களுக்கென்று தனி விடுதிகள் இல்லை. அது பற்றியெல்லாம்  புதிய கல்விக் கொள்கையில் இல்லாதது ஏமாற்றமே” என்றார்.

அன்னம் அரசு