நியூஸ் பைட்ஸ்



மாதவிடாய்க்கு விடுமுறை

உணவு டெலிவரி செய்யும் பிரபல நிறுவனமான சோமேடோ (Zomato) தன்  ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுமுறை அளிக்கப்போவதாக அறிவித்துள்ளது. தன்  நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து பெண்கள், திருநங்கைகளுக்கும் வருடத்திற்கு பத்து நாட்கள் மாதவிடாய் விடுமுறையை சோமேடோ அளித்துள்ளது.

பெண்கள் சிலருக்கு மாதவிடாய் காலத்தில் அதீத உடல் வலி மற்றும் பிற உபாதைகளிலும் அவதிப்படுவது உண்டு . இதனால், பெண்கள் மாதவிடாயைக் களங்கமாகவோ அவமானமாகவோ நினைக்காமல், வெளிப்படையாக இந்த விடுமுறைக்கு விண்ணப்பிக்கலாம் என சோமேடோ தலைமை நிர்வாக அதிகாரி கூறியுள்ளார்.

ஸ்காட்லாண்ட் பள்ளிகளில்  LGBTQ+ வரலாற்றுப் பாடங்கள்

உலகிலேயே  முதன்முறையாக ஸ்காட்லாண்டில், குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே சமத்துவத்தைக் கற்றுக்கொடுக்கும் நோக்கத்தில், அங்கு பள்ளிகளில் LGBTQ+ சமூகத்தின் வரலாறு, போராட்டங்கள் குறித்த பாடங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இச்சட்டம், LGBTQ+ மாணவர்களும் இச்சமூகத்தின் ஒரு முக்கிய அங்கம்தான் என்பதைப் பறைசாற்றுவதோடு,  LGBTQ+ மாணவர்களுக்குப் பள்ளிகளில் பாதுகாப்பான ஓர் உணர்வையும்
அளிக்கும் என அரசாங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

எல்லைக் கோட்டில் பெண் ராணுவ வீரர்கள்

இந்திய வரலாற்றில் முதல் முறையாகக் காஷ்மீரில், இந்தியா- பாகிஸ்தான் எல்லைக் கோட்டில் (LoC) பெண் ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அசாம் ரைஃபிள்ஸ் குழுவைச் சேர்ந்த இந்த பன்னிரண்டு பெண்களையும், பெண் அதிகாரி ஒருவரின் தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டு எல்லைக்கு அனுப்பப்படுவர் என அறிக்கை தெரிவிக்கிறது.

அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர்

அமெரிக்காவில் நவம்பர் 3ல் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபராக இருந்த ஜோ பிடன் போட்டியிடுகிறார். இவர், தனது துணை அதிபர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை தேர்ந்தெடுத்துள்ளார். கமலா ஹாரிஸின் தாய் இந்தியாவைச் சேர்ந்தவர், தந்தை ஜமைக்காவைச் சேர்ந்தவர். கமலா இத்தேர்தலில் வெற்றி பெற்றால், அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராகவும், நாட்டின் முதல் இந்திய-அமெரிக்க மற்றும் ஆப்பிரிக்க துணைத் தலைவராகவும் பெருமை சேர்ப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றில் இரண்டு பெண்களுக்கு வன்கொடுமை

வியட்னாமில் மூன்றில் இரண்டு பெண்கள் பாலியல், உளவியல், உடல் ரீதியாக எனப் பல வகையில் கொடுமையை அனுபவிக்கின்றனர் என ஆராய்ச்சி தெரிவித்துள்ளது. 15-64 வயதான 6000 பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த முடிவுகள் கிடைத்துள்ளது.  பெண்கள் உடல் ரீதியாகத் தாக்கப்படும் கொடுமைகள் குறைந்திருந்தாலும், பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இந்த ஆய்வு அதிர்ச்சி தகவல்களைத் தெரிவிக்கிறது. இந்த அறிக்கைக்குப் பின், பெண்களின் பாதுகாப்பிற்கும் வளர்ச்சிக்கும் திடமான சட்டங்கள் வகுக்க வேண்டும் என ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

பெண்களுக்கு சொத்தில் சம உரிமை

உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ள தீர்ப்பில், 2005 இந்து வாரிசு சட்டம் பெண்களுக்கும் சொத்தில் ஆண்களைப் போல சம உரிமையை வழங்குகிறது. இச்சட்டம் இயற்றப்படுவதற்கு முன்னரான காலகட்டத்திற்கும், இச்சட்டத்தின் நிபந்தனைகள் பொருந்தும் என்ற அதிரடி தீர்ப்பை நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு அறிவித்துள்ளது. 2005ல் இச்சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே பெற்றோர்கள் இறந்திருந்தாலும், அவர்களது சொத்தில் பெண்களுக்கு உரிமை உண்டு எனத் தீர்ப்பு வழங்கப்பட்டு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஸ்வேதா கண்ணன்