நியூஸ் பைட்ஸ்



பெங்களூரில் 16,000 சி.சி.டிவி கேமராக்கள்

நிர்பயா உதவித் தொகை மூலம் விரைவில் பெங்களூர் முழுவதும் சி.சி.டிவி கேமராக்கள் பொருத்த இருப்பதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. பெங்களூரில் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, நகரம் முழுவதும் 16,000 சிசிடிவி கேமராக்கள், பாதுகாப்பு விளக்குகளுடன் அவசர உதவிக்கான பட்டன்களுடனும் பொருத்தப்படவுள்ளது. பெண்கள் அவசர உதவி தேவைப்படும் போது, அருகிலிருக்கும் சி.சி.டிவி கேமராவுடன் கூடிய அவசர உதவி பட்டனை அழுத்தியதும், அது அருகிலிருக்கும் காவல் நிலையத்திற்குத் தகவல் அனுப்பி, சத்தமான சைரன் ஒலியையும் எழுப்பும். உடனே காவலர்கள் விரைந்து வந்து பாதிக்கப்பட்டவரை மீட்பர் என்று கூறப்படுகிறது.

சுவர்களை அலங்கரித்த காலணிகள்

துருக்கியில் சமீபத்தில் 440 ஹீல்ஸ் காலணிகள், ஒரு தொண்டு நிறுவனத்தின் கட்டிட சுவர் மீது பொருத்தப்பட்டது. இது புது மாதிரியான சுவர் அலங்காரம் எல்லாம் கிடையாது. துருக்கியில் 2018ம் வருடம், குடும்ப வன்முறையால் கணவர்களால் கொல்லப்பட்ட பெண்களின் எண்ணிக்கைதான் இது. துருக்கியில் அதிகரித்துவரும் குடும்ப வன்முறைக்கு எதிராக மக்களின் கவனத்தை ஈர்க்க இந்த புதுமையான விழிப்புணர்வு முயற்சியை, vahit tuna என்ற கலைஞர் நிகழ்த்தினார்.  

ஹிஜாப் அணிய எதிர்ப்பு

ஈரானில் பெண்கள் கண்டிப்பாக ஹிஜாப் எனப்படும் முக்காட்டை அணிய வேண்டும் என்பது கட்டாய அரசியல் சட்டம்.
அங்குப் பெண்கள் ஹிஜாப் இல்லாமல் வெளியே சென்றால் சிறைத் தண்டனை விதிக்கப்படும். பல வருடங்களாக இந்த சட்டம் இருந்து வந்த நிலையில், சமீப ஆண்டுகளாக பெண்கள், இந்த சட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். கட்டாய ஹிஜாப் சட்டத்தை திருத்தி, விருப்பமுள்ளவர்கள் ஹிஜாப் அணியலாம் என்ற சட்டத்தை அமல்படுத்த கோரி, பல பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். பள்ளி மாணவிகளும், ஹிஜாப் அணியாமல், திரும்பி நின்று, புகைப்படம் எடுத்து, நூதன போராட்டங்கள் செய்து வருகின்றனர்.

ஸ்பெஷல் விடுதி

சுற்றுலா செல்லும் பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. ஸ்பெயின் நாட்டின் மல்லோர்காவில் பெண்கள் மட்டுமே தங்குவதற்கான ஸ்டார் ஹோட்டல் இப்போது இயங்கி வருகிறது. ரூஃப்டாப் நீச்சல் குளம், பெண்களுக்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு ஸ்பா வசதிகளும் உள்ளன. தனியாக சுற்றுலா செல்ல விரும்பும் பெண்களுக்கும், அடிக்கடி வேலை நிமித்தமாக ஸ்பெயின் செல்லும் பெண்களுக்கும் இந்த விடுதி ஒரு வரப்பிரசாதம்.

இரண்டில் ஒரு பெண்ணுக்கு ரத்த சோகை

Streedhan என்ற அமைப்பு விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பெண்கள் ஆரோக்கியத்திற்கு கவனம் செலுத்தி ஊட்டச்சத்து மிகுந்த உணவுப் பழக்கத்துக்கு மாற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இந்தியாவில் இரண்டில் ஒரு பெண், இரும்புச்சத்து குறைபாட்டால் ரத்தசோகை பிரச்னைக்கு ஆளாகிறார். இதனால் சத்தான உணவை உண்டு ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை தர #InvestInIron என்ற ஹேஷ்டாக்குடன் காணொளியை வெளியிட்டுள்ளது. இதையடுத்து பிரபல பாலிவுட் நடிகைகளும் சத்தான பழங்களுடன் செல்ஃபி எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

நேசமிகு மேரி

ஆறு முறை உலக குத்துச்சண்டை சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம், இந்தியாவில் அதிகம் பாராட்டப்படும் பெண்களின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார். பாலிவுட் நட்சத்திரங்கள் தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா போன்ற அதிகம் ரசிகர்கள் கொண்டவர்களை பின்னுக்குத் தள்ளி, முதலிடம் பிடித்திருக்கிறார் மேரி கோம். இவரை அடுத்து, கிரண்பேடி இரண்டாவது இடத்திலும், லதா மங்கேஷ்கர்
மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

பார்வையற்ற பெண் சப்-கலெக்டர்

மும்பையின் உல்லாஸ் நகரைச் சேர்ந்தவர் ப்ரன்ஜல் பட்டில். ஆறு வயதில், பார்வை இழந்தவர் பார்வையற்றோர் பள்ளியில் சேர்ந்து, 12-ம் வகுப்பில் 85 சதவிகித  மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். பி.ஏ முடித்துவிட்டு  எம்.ஃபில் படித்துக்கொண்டே சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி 773-வது ரேங்க்கில் வெற்றிபெற்றார். அடுத்த ஆண்டு, மறுபடியும், ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதி 124-வது இடத்தைப் பிடித்து இந்திய வரலாற்றில் முதல் முறையாக பார்வையற்ற முதல் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி என்று புகழ்பெற்றார். கடந்த சில மாதங்களுக்கு முன், எர்ணாகுளம் உதவி கலெக்டராகப் பணிபுரிந்த ப்ரன்ஜல், கடந்த வாரம் திருவனந்தபுரம் துணை கலெக்டராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஸ்வேதா கண்ணன்