ப்ரியங்களுடன்...உணவே மருந்து நலங்காக்கும் சீரகத்தின் பல்சுவை பலன்களை பட்டியலிட்டு நலம் பலம் கூட்டியது.
- கவிதா சரவணன், ஸ்ரீரங்கம்.

‘தோழி’யின் தீபாவளி ஸ்பெஷலே தனிதான். 2 புத்தகங்களால் அசத்தல். பட்டாசு முதல் பலகாரங்கள் வரை தோழி உள்ளே வந்ததும் வீடு நிறைஞ்சு தீபாவளியும் உள்ளே வந்தாச்சு. மனசும் மகிழ்ந்தது. ஆன்லைனில் கலக்கும் செட்டிநாடு காரைக்குடி காட்டன் சேலைகளின் அணிவகுப்பு தேர்வு செய்ய இயலாத மலைப்பு. தோழியருக்கான குருபெயர்ச்சி நட்சத்திர பலன்கள் பார்த்து அம்மா நகரவே இல்லை.
- தி.பார்வதி, திருச்சி.

அக்கா கடை ‘கவிதா’ படபடவென பொரியும் மத்தாப்பூ போல் என்ன அருமையான பேச்சு. அளவு கடந்த எதிர்பார்ப்பு இல்லையென்றால் கஷ்டங்களும் குறைவுதான் என்பது உணர்த்தப்பட்டது.
- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.

போக்குவரத்துக் காவலராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஹர்சிந்தர் சிங்கின் சமூகப்பணி விலை மதிப்பற்றது. அவரது தொண்டு வாழ்க வளர்க! அவரது ஆட்டோ ஆம்புலன்ஸ் திட்டம் நாடு முழுக்க பரவும் பட்சத்தில் பல உயிர்கள் காப்பாற்றப்படக்கூடும்.
- கலைச்செல்வி வளையாபதி, கரூர்.

நாம் எதைச் செய்தாலும் உடனே வெற்றியடைய வேண்டும் என்றுதான் காண்போம். வெற்றிக்காக வழிமுறையை கண்டறிந்து இதன் வழி சென்றால் கண்டிப்பாக வெற்றியடையலாம். எம்.சி.நந்தினி கூறியதைப் போன்று ஆர்வம் இருந்தால் நம்மால் செய்ய முடியும் என்று குறிக்கோளும் இருக்க வேண்டும்.எதையும் வீணாக்காமல் முறையாக கையாண்டால் அனைத்தும் தங்கமே! எதிர்காலத்தை மாற்றிய ஐஸ்குச்சிகள் பாராட்டுக்குரியவை...
- வண்ணை கணேசன், சென்னை.

கதாபாத்திரத்திற்கேற்ப மாறணும் என்று கூறி காமெடி நடிகர் சதீஷ் தந்த பேட்டி மிகவும் சுவையாக ரசிக்கும்படி இருந்த தீபாவளி ஸ்வீட் எனலாம்.
தமிழரின் பாரம்பரிய இசையான பறை கலையைக் கற்று அதில் ஆத்மார்த்த ஈடுபாடு கொண்டு இசைத்து வரும் மீனாட்சியின் பேட்டி அபாரம்! அவரது முயற்சியை ‘பறை’யடித்துப் பாராட்ட வேண்டும்.
- அயன்புரம் த.சத்தியநாராயணன், பட்டாபிராம்.

25 ஆயிரம் பாடல்களைப்பாடி, இன்றும் பாடிக்கொண்டிருக்கும் இசைக்குயில் லதா மங்கேஷ்கரின் கின்னஸ் சாதனை, அவர் கடந்து வந்த காலச்சுவடுகளை படித்து வியந்தோம்!
- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன் புதூர்.

என்.சி. வசந்த கோகிலம் பாடிய பாட்டுக்கள் எல்லோராலும் பாடப்பட்டு வரும் பாடல்கள், கட்டுரை இனிமை. மறக்க முடியுமா இவரை. இன்னொரு சுப்புலட்சுமியல்லவா?
- ராஜிகுருசுவாமி, சென்னை.

அட்டைப்படம்: யாஷிகா ஆனந்த்