ஒரு பட்டனில் வீடு தேடி வரும் பட்டாசுகள்!



தீபாவளி கொண்டாட்டம் ஆரம்பிச்சாச்சு... இப்போது இருந்தே பண்டிகைக்கான பலகாரம் என்ன செய்யலாம், எங்கு வாங்கலாம்னு திட்டமிட ஆரம்பித்து இருப்போம். பலகாரத்திற்கு அடுத்து நாம் வாங்க வேண்டும் என்று நினைப்பது பட்டாசுகள் தான். வானத்தில் பூவாய் தெளிப்பது முதல் காதினை கிழிக்கும் ஆட்டோ பாம் வரை எல்லா பட்டாசுகளின் சத்தமும் அன்று முழுதும் நம் காதில் கேட்டுக் கொண்டே இருக்கும். பண்டிகை நாளையொட்டி பட்டாசு கடைகள் பல இடங்களில் இருப்பது வழக்கம்.

ஆனால் அங்கு நம் விரும்பும் பட்டாசுகளை பல கூட்ட நெரிசலுக்கு நடுவே தேர்வு செய்ய வேண்டும். அப்படி தேர்வு செய்தாலும் நாம் விரும்பும் பட்டாசுகள் கிடைக்காமலும் போக வாய்ப்புள்ளது. இந்த நெருக்கடி இனி தேவையில்லை. நீங்கள் விரும்பும் பட்டாசுகள் அனைத்தும் தரமானதாகவும் குறைந்த விலையில் ஆன்லைனில் வாங்கும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. இனி நீங்கள் விரும்பும் பட்டாசுகள் உங்கள் வீடு தேடி வரும். அப்பறம் என்ன தீபாவளியை ஒலி ஒளியுடன் கொண்டாடலாம்.

அஜந்தா பயர்வர்க்ஸ்

1974ம் ஆண்டு சிவகாசியில் துவங்கப்பட்டு, 43 ஆண்டுகளாக பட்டாசு துறையில் இருக்கும் இவர்கள் இந்தியாவின் முன்னணி பட்டாசு நிறுவனங்களில் ஒன்று. சர்வதேச பட்டாசு சங்கத்தில் இருப்பதால், தென்னிந்தியா முழுக்க இவர்களின் வாடிக்கையாளர்கள் பரவியுள்ளனர். தற்போது, தென்னிந்தியா மட்டும் இல்லாமல் இந்தியா முழுக்க உள்ள வாடிக்கையாளர்களுக்காகவே ஆன்லைன் முறையினை துவங்கியுள்ளனர். அனைத்து ரக பட்டாசுகளும் ஆன்லைனில் பெற்றுக் கொள்வதற்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் விரும்பும் பட்டாசினை தேர்வு செய்தால் போதும் வீட்டிற்கே பட்டாசு உங்களை தேடி வரும்.

கிரிப்ஸ் கிராக்கர்ஸ்

சிவகாசி என்றாலே பட்டாசு தான் நினைவுக்கு வரும். அங்கு பல நிறுவனங்கள் பட்டாசுகளை தயாரித்து வந்தாலும் தரமானதை பார்த்து வாங்க வேண்டும். அப்படிப்பட்ட தரமான பட்டாசுகளை கிரிப்ஸ் கிராக்கர்ஸ் ஆன்லைன் முறையில் விற்பனை செய்து வருகிறது. இவர்கள் பட்டாசு தொழில் மட்டும் இல்லாமல் மளிகை மற்றும் உணவு சார்ந்த பொருள்கள் குறித்த தொழிலில் கடந்த 27 வருடமாக உள்ளனர். ஃபேன்சி பட்டாசுகள் முதல் அனைத்து பட்டாசுகளும் மொத்த விலையில் இங்கு அணிவகுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் ஆர்டர் கொடுத்த பிறகு அதற்கான கட்டணத்தை செலுத்திவிட்டால் போதும்.

பட்டாசுகள் வீடு தேடி வரும். தமிழ்நாடு என்றால் குறைந்த பட்சம் மூன்று ’முதல் எட்டு நாட்களுக்கும் டெலிவரி செய்யப்
படும். வேறு மாநிலங்கள் என்றால் 15 நாட்களுக்குள் கிடைத்துவிடும். ஒருவேளை சில காரணங்களால் ஆர்டரை கேன்சல் செய்ய நேரிட்டால், உங்களின் பணம் ஒரே வாரத்திற்குள் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

சிவகாசி பயர்வர்க்ஸ்

நீங்கள் வாங்கும் பட்டாசுகளுக்கு சரியான விலைப்பட்டியல் கொடுக்கும் முதல் மற்றும் தரமான இணையதளம் சிவகாசி பயர்வர்க்ஸ். இங்கு கொடுக்கப்பட்டுள்ள விலைப் பட்டியலையும் மற்ற கடையின் விலைப் பட்டியலையும் ஒப்பிட்டு பார்க்கும் வசதியுமுண்டு. மேலும் நீங்கள் செலுத்தும் பணம் விரயமாகாமல் தரமான பொருட்கள் கிடைத்தால் தீபாவளியை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடலாமே. மேலும் பலதரப்பட்ட நிறுவனங்களின் பட்டாசுகள் பற்றிய விவரங்களும் இங்கு இருப்பதால், அதை வாடிக்கையாளர்கள் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளலாம்.

மா பிரபாவதி ஸ்டோர்ஸ்

மொத்த விற்பனையில் ஆன்லைன் மூலம் பட்டாசினை பெற்றுக் கொள்ளும் இணையம் தான் மா பிரபாவதி ஸ்டோர்ஸ். இணையம் மூலம் பட்டாசினை விற்பனை செய்தாலும், இவர்களின் கடை பொகாரோவில் உள்ளது. மொத்த விற்பனையாளர் என்பதால், விலை குறைவாக இருந்தாலும் அதன் தரத்தில் எந்த வித காம்பிரமைஸ் செய்வதில்லை.  சொந்தமாக பட்டாசு நிறுவனம் நடத்தி வருவதால், மக்களின் தேவை அறிந்து புதுவகையான பட்டாசுகளை ஒவ்வொரு தீபாவளி அன்றும் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

எலிஃபேன்ட் பயர்வர்க்ஸ்

63 ஆண்டு காலமாக பட்டாசு துறையில் கோலூன்றி இருக்கும் நிறுவனம். இவர்கள் இப்போது ஆன்லைன் மூலம் பட்டாசினை மக்களுக்கு மொத்த விலையில் அளித்து வருகின்றனர். வாடிக்கையாளர்களுக்கு தரமான பொருட்களை கொடுக்க வேண்டும் என்ற தாரகமந்திரத்துடன் செயல்பட்டு வரும் இதன் இணையத்தில் பல விதமான பட்டாசுகள் உள்ளன. புஸ்வாணம், சங்கு சக்கரம், சாட்டை, சரம், ஃபேன்சி பட்டாசுகள்... என வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப உள்ளன. அவர்களின் பட்ஜெட் மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப ஆன்லைனில் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம்.

மெட்ராஸ் கிராக்கர்ஸ்

சென்னையின் முன்னணி ஆன்லைன் கிராக்கர் விற்பனை தளம். இங்கு பட்டாசுகள் அனைத்தும் மொத்த விற்பனையில் உள்ளதால், மற்றவர்களை விட குறைந்த விலையில் விரும்பும் பட்டாசுகளை குறிப்பாக சென்னைவாசிகள் பெற்றுக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தளமும் வாடிக்கையாளர்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டு இருப்பதால், யார் வேண்டும் என்றாலும், எளிதாக தேர்வு செய்து, ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம்.

பொதுவாக பட்டாசுகள் தீபாவளி அன்று தான் விற்பனைக்கு வரும். ஆனால் மெட்ராஸ் கிராக்கர்ஸ் இணையத்தில் 365 நாட்களும் பட்டாசுகள் விற்பனையில் உள்ளது. தீபாவளி மட்டும் இல்லாமல் இல்லத்தில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளான திருமணம், பிறந்த நாள் கொண்டாட்டம் மட்டும் இல்லாமல் கோயில் திருவிழாக்கள் மற்றும் இதர நிகழ்ச்சிகள் என அனைத்து விழாக்களுக்கும் பட்டாசு வெடிப்பது வழக்கம்.

இதற்காகவே அனைத்து நாட்களும் இங்கு பட்டாசுகள் அவரவர் தேவைக்கு ஏற்ப விற்பனையில் கிடைக்கிறது. இணையத்தில் ஆன்லைன் முறையில் பட்டாசுகளை வாங்கும் போது, நாம் பட்டாசு வாங்க கடை கடையாக ஏறி வரிசையில் நின்று வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு பட்டனை தட்டினால் போதும் நாம் விரும்பும் பட்டாசு நம் வீடு தேடி வரும். மேலும் ஒவ்வொரு பட்டாசுகள் குறித்த விவரங்களும் இங்கு கொடுக்கப்பட்டு இருப்பதால், வாடிக்கையாளர்கள் அவரவர் தேவைக்கு ஏற்ப பட்டாசுகளை வாங்கிக் கொள்ளலாம்.

குட்வில் பயர்வர்க்ஸ்

2000ம் ஆண்டு முதல் பட்டாசு தொழிலில் உள்ள குட்வில் பயர்வர்க்ஸ் தற்போது வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப ஆன்லைனில் தங்களின் விற்பனையை விரிவாக்கம் செய்துள்ளது. தரமான பொருட்களை நியாயமான விலையில் அனைத்து விழாக்களுக்கும் வழங்கி வருகிறது. தீபாவளி மட்டும் இல்லாமல், கல்யாணம், காதுகுத்து, திருவிழா என அனைத்து விசேஷங்களுக்கு ஏற்ப பட்டாசுகளின் ரகம் இதில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு பட்டாசு குறித்த விவரங்களை தெரிந்து கொண்டு ஆர்டர் அளிக்கலாம்.    இனி என்ன யோசனை... பட்டாசினை ஆன்லைனில் ஆர்டர் செய்யுங்க... தீபாவளியை ேகாலாகலமாக கொண்டாடுங்க..

கார்த்திக் ஷண்முகம்