அக்கா கடை- அந்த மூன்று வருடம்!நெற்றி நிறைய குங்குமப் பொட்டு, வாய் நிறைய சிரிப்புடன்... ‘வாங்க ஐயா என்ன சாப்பிடுறீங்க... மாமிக்கு இரண்டு பஜ்ஜி பார்சல் செய்யட்டுமா?’’ என்று மிகவும் அன்போடு உபசரிக்கிறார் கிர்த்திகா.
இவர் சென்னை மயிலாப்பூரில் தன் வீட்டு வாசலிலேயே கடந்த ஏழு வருடமாக பஜ்ஜி, வடை, போண்டா, பக்கோடா மற்றும் சுண்டல் வியாபாரம் செய்து வருகிறார். மாலை நாலரை மணிக்கு இவர் கடையை திறந்த அடுத்த நிமிடம் வேலையை விட்டு வீட்டுக்கு செல்பவர்கள், பள்ளி மாணவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் அவரின் வடை, பஜ்ஜியை சாப்பிட அலை மோதுகிறார்கள்.

‘‘நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னை மயிலாப்பூரில் தான். அதிகம் படிக்கவில்லை. எட்டாம் வகுப்பு வரை தான் படிச்சிருக்கேன். எங்க அம்மா அப்பா இருவருமே உணவு சார்ந்த தொழில் தான் செய்து வந்தாங்க. அவங்களும் பஜ்ஜி, வடை, டிபன் கடைன்னு மூணு கடை வச்சு நடத்தினாங்க. நான் பள்ளி விட்டு வந்ததுமே, நேரா கடைக்கு போயிடுவேன். அப்ப ஆள் வச்சு தான் சமையல் செய்து வந்தோம். அதனால, அங்கு மாஸ்டர் வடை மற்றும் பஜ்ஜி போடும் பக்குவத்தை பார்ப்பேன்.

சில சமயம் அவரிடம் கேட்டு நானும் எங்க கடையிலேேய பஜ்ஜி மற்றும் வடை போடகத்துக்கிட்டேன். இதற்கிடையில் என்னுடைய 17 வயசில் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு. என் கணவரின் வீடும் மயிலாப்பூர் தான். அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பைண்டிங் வேலைப் பார்த்து வந்தார். எனக்கு ஒரு தம்பி, அவன் ஒரு நிறுவனத்தில் சூப்பர்வைசரா வேலைப் பார்க்கிறான். எனக்கும் கல்யாணமானதால, அம்மாவால, மூணு கடையும் பார்த்துக்க
முடியல. இப்ப அவங்க வெறும் வடை மற்றும் பஜ்ஜி கடையை தான் நடத்தி வராங்க’’ என்றவரின் வாழ்க்கையில் ஒரு பெரிய இடி விழும் என்று அப்போது அவர் எதிர்பார்க்கவில்லை.

‘‘அன்பான கணவர், இரண்டு குழந்தைகள், கையைக் கடிக்காத வருமானம் என்று என் வாழ்க்கை எந்த ஒரு பிரேக் இல்லாமல் நகர்ந்து கொண்டு இருந்தது. ஆனால் அது கடவுளுக்கு பிடிக்கவில்லையோ என்னவோ. ஒரு பெரிய ஸ்பீட் பிரேக்கை என் வாழ்க்கையின் பயணத்துக்கு நடுவே அமைத்து என்னை ஸ்தம்பிக்க வைத்துவிட்டார். மூணு வருஷம் முன்பு என் கணவரின் நாக்கில் சின்ன கொப்புளம் போல் ஏற்பட்டது. நான் ஆரம்பத்தில் சூடுனால ஏற்பட்ட கட்டியாக இருக்கும்ன்னு நினைச்சேன்.

ஆனால் அது சரியாகல. வலியும் அதிகமா இருந்தது. அவரால் எதையுமே சாப்பிடவோ அல்லது முழுங்கவோ முடியல. உடனே டாக்டரை அணுகி சிகிச்சை பெற்றோம். அவங்க பார்த்திட்டு அது புற்றுநோயாக இருக்கலாம்ன்னு சொன்னாங்க. அதை கேள்விப்பட்டதும் எனக்கு என்ன செய்வதுன்னு தெரியல. என்னை சுற்றி எல்லாமே இருண்டு போனது போன்ற உணர்வு ஏற்பட்டது.

அந்த நேரத்தில் அழுவதை தவிர வேற எதுவும் தோணவும் இல்லை. எங்க வீட்டில் எனக்கு ஆதரவுன்னு யாரும் இல்லை. அம்மா, அப்பா, மாமனார், மாமியார் எல்லாரும் வயசானவங்க. அவங்களால ஓடியாடி எதும் செய்ய முடியாது. அதே சமயம் இப்படி ஆகிவிட்டதேன்னு சும்மாவும் இருக்க முடியாது. போராட வேண்டும் என்று முடிவு செய்தேன்’’ என்றவர் அதற்கான வேலையில் துரிதமாக இறங்க ஆரம்பித்துள்ளார்.

‘‘என் கணவருக்கு நாக்கில் வந்திருக்கும் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிட்டதால், குணமாக்க முடியும்ன்னு சொன்னாங்க. ஆனால் இரண்டு லட்சம் செலவாகும்ன்னு சொன்ன போது நான் கொஞ்சம் அதிர்ந்து போனேன். என் கணவரின் வருமானம் கிடையாது. என்னுடைய கடை வருமானம் தான். என்னுடைய நிலையை எடுத்துச் சொன்னேன். உடனே அவர்கள் அடையார் புற்றுநோய் மருத்துவமனைக்கு போக சொன்னாங்க.

அங்குள்ளவர்கள் என் நிலையை புரிந்து கொண்டு இலவசமாக சிகிச்சை அளிக்க முன்வந்தாங்க.  முதல் கட்ட சிகிச்சை ஆரம்பிச்சதுமே என் கணவரின் உடல் நிலையில் மாற்றம் தெரிந்தது. கிட்டத்தட்ட மூணு வருஷம் மருத்துவமனை, வீடு, கடைன்னு நான் ஒரு ஆளா எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டேன். அவருக்கு புற்றுநோய்க்கு ரேடியேஷன் சிகிச்சை கொடுத்தாங்க.

இதனால் அவருக்கு மேலே கீழேன்னு 16 பற்களை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கதிர்வீச்சினால் தொண்டையிலும் பாதிப்பு ஏற்பட்டது. புற்றுநோய் முற்றிலும் குணமாயிடுச்சு. ஆனால் அவரால் நம்மைப் போல் எல்லா உணவினையும் சாப்பிட முடியாது. வெறும் லிக்விட் உணவுகள் தான். பால், பழச்சாறு, கஞ்சின்னு சாப்பிட முடியும்.

பற்கள் இல்லை என்பதால் எதையும் மென்று சாப்பிட முடியாது, நம்மைப் போல் சரியாக பேசவும் முடியாது. தொண்டையில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால் சாதம் கூட அவரால் முழுங்க முடியாது. இப்ப நல்லா ஆயிட்டார். ஆனால் கிட்டத்தட்ட மூணு வருஷம் அவரால் எந்த வேலையும் செய்ய முடியல. வீட்டில் தான் இருந்தார். சரியான உணவு இல்லாததால் உடலும் ஒத்துழைக்கல. மூணு வருஷம் அவரின் வருமானம் கிடையாது, என்னிடம் இருந்த நகைகள் கொண்டு தான் அவருக்கு சிகிச்சையை பார்த்தேன். வீட்டு செலவுக்கு கடையில் வரும் வருமானம் தான்’’ என்றவர் பஜ்ஜி கடையை ஆரம்பித்தது பற்றி விவரித்தார்.

‘‘சின்ன வயசில் இருந்தே அதே சூழலில் இருந்து பழகியதால், திருமணமான பிறகு ஏதாவது ஒன்னு செய்யணும்ன்னு நினைச்சேன். என் கணவரிடம் சொன்ன போது அவரும் சம்மதம் கொடுத்தார். என் மாமியார் வீடு முன்பு இடம் இருக்கும், கல்யாணமாகி ஒரே வாரத்தில் நான் கடை போட ஆரம்பிச்சேன். ஆரம்பத்தில் அம்மாவின் கடையில் இருந்து பலகாரம் வாங்கி வந்து இங்கு விற்பனை செய்து வந்தேன். சுவையா இருக்கு. சூடா இல்லைன்னு வாடிக்கையாளர்கள் வருத்தப்பட்டாங்க.

அம்மாவிடம் இது பற்றி சொன்ன போது அவங்க தான் நீ தனியா கடைப் போடுன்னு தைரியம் சொன்னாங்க. முதல்ல எனக்கு பயமா இருந்தது. ஒரு வேளை சரியா இல்லைன்னா... என்ன செய்றதுன்னு. அம்மா தான் சொல்லிக் கொடுத்தாங்க. எப்படி கடையை நடத்தணும். என்ன உணவு போட்டா நல்லா விற்பனையாகும்ன்னு அம்மா சொல்லி தான் இந்த கடையை ஆரம்பிச்சேன்.

இப்ப எட்டு வருஷமாகுது. பஜ்ஜி, மசால் வடை, கீரை வடை, காலிஃபிளவர் பகோடா, உளுந்து வடை, போண்டா சுண்டல்... ன்னு செய்து வருகிறேன். முதலில் ஒரு கிலோவுக்கு தான் பொருட்களை வாங்கினேன். இப்ப ஐந்து கிலோவிற்கு பொருட்களை வாங்கி செய்றேன். வடை மாவோ, பஜ்ஜி மாவோ எதையுமே நான் மறுநாள் வரை எடுத்து வைப்பது இல்ைல. கடை போடும் நாட்களில் நானே நேரடியாக மளிகை கடையில் பருப்பு, பஜ்ஜிக்கான மாவு வாங்கி வந்து செய்ேவன். ஃபிரஷ்ஷாக கொடுப்பதால், உணவும் தரமாக இருக்கிறது.

என்னுடைய வேலை தினமும் காலை பதினோறு மணிக்கு ஆரம்பிக்கும். பசங்கள பள்ளிக்கு அனுப்பிட்டு கடைக்கு போய் தேவையான ெபாருட்களை வாங்கி வந்திடுவேன். என் மாமியார் வடைக்கு மாவும், சட்னியும் அரைச்சு தந்திடுவாங்க. எல்லாம் தயாராக மாலை நாலு மணியாயிடும், நாலரை மணிக்கு கடையை ஆரம்பிச்சா, இரவு ஒன்பது மணி வரை இயங்கும்.

இப்போது என் கணவரின் உடல் நிலையும் தேறிவருவதால், அவரும் வேலைக்கு போக ஆரம்பித்துவிட்டார். மாலை நேரத்தில் சில மணி நேரம் எனக்கு உதவுவார். ஆனால் அவரால் அதிக நேரம் இருக்க முடியாது என்பதால் நான் தான் கடையை முழுக்க முழுக்க பார்த்துக் கொள்கிறேன். கடையை ஆரம்பிச்ச போது பத்து பேர் தான் சாப்பிட வருவாங்க. இப்ப குறைந்தபட்சம் 60 முதல் 70 பேர் தினசரி சாப்பிட வராங்க. ஒரு நாளைக்கு எல்லா செலவும் போக ரூ.800 வரை லாபம் கிடைக்கும்’’ என்றவர் தனி நபராகத்தான் இன்றும் போராடி வருகிறார்.

‘‘என் கணவருக்கு உடல் நிலை சரியில்லாத போது, நான் மட்டுமே தனி ஆளாதான் என் குடும்பத்தை பார்த்துக் கொண்டேன். என் மாமியார் வயசானவங்க. அவங்கள நிறைய வேலை செய்ய சொல்ல முடியாது. அதனால் எல்லா பொறுப்பையும் நானே ஏற்றுக் கொண்டேன். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் மூன்று முறை நான் மருத்துவமனை, வீடுன்னு பயணம் செய்ய வேண்டி இருக்கும்.

அவருக்கு எல்லாமே நீராகாரம் என்பதால் காலையில் சென்று பால் பழச்சாறு வாங்கி கொடுத்திட்டு வருவேன். மறுபடி வீட்டுக்கு வந்து கடைக்கு தேவையான பொருட்களை தயார் செய்திட்டு மதியம் மறுபடியும் அவருக்கு உணவு கொடுத்துவிட்டு மாலையில் கடையை பார்த்துக் கொள்வேன். கடை மூட ஒன்பது மணியாயிடும். அதன் பிறகு அவருக்கு தேவையானதை கொடுத்திட்டு நான் வீட்டுக்கு வர இரவு பதினோறு மணியாயிடும். இப்படித்தான் அவரின் சிகிச்சை காலம் முழுக்க கழிந்தது.

இரண்டு இடமா அலைவது கஷ்டமாகத்தான் இருந்தது. பாதி இரவுகள் அழுகையுடன் தான் கழியும். என் வாழ்க்கையின் மொத்த சந்தோஷமே என் குடும்பம் தான். அதில் சின்ன கீரல் விழுந்தாலும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. என்னுடைய எல்லா நேரத்திலும் இந்த கடை தான் எனக்கு முழு சப்போர்ட்டா இருந்தது.

கடை மட்டும் இல்லைன்னா... நான் என்ன செய்து இருப்பேன்னு தெரியல. அவரின் மருத்துவ செலவு, குழந்தைகளின் பள்ளி செலவுக்காக வாங்கிய கடன் இருக்கு. அதையும் கொஞ்சம் கொஞ்சமா அடைச்சிட்டு இருக்கேன். இப்ப இவரும் வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டார். அதனால் இன்னும் ஒரு சில மாதங்களில் கடன் எல்லாம் அடைச்சிட்டு காலை நேரத்தில் டிபன் கடையும் போடலாம்ன்னு முடிவு செய்து இருக்கேன்.

மேலும் இதையே கொஞ்சம் பெரிய அளவில் செய்யணும்ன்னு எண்ணம் இருக்கு. நான் படிக்கல. என் பசங்க நல்லா படிக்கிறாங்க. அவங்களுக்கு ஒரு நல்ல பாதையை அமைச்சு தரணும்’’ என்றார்  தன்னம்பிக்கையுடன் கிர்த்திகா.

ப்ரியா

ஜி.சிவக்குமார்