ப்ரியங்களுடன்...மாதா பிதா குரு தெய்வம் என்பதற்கு ஏற்ப அம்பத்தூர் நகராட்சி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் எடுத்துக்காட்டு. இது மாதிரி ஒவ்வொரு பள்ளிக்கும் தலைமை ஆசிரியர் இருந்தால் போதும். மாணவ, மாணவியர் தேர்ச்சி விண்ணை எட்டும் என்பதில் சந்தேகமில்லை.
- பொன்னியம்மன் மேடு வண்ணை கணேசன், சென்னை.

‘‘கெட்டவங்க வாழலாம். நல்லா வாழ்ந்தவங்க கெடக்கூடாது’’ என்று அண்ணாமலை படத்தில் ரஜினி பேசும் வசனம் வரும். அப்படி நல்லா வாழ்ந்து வறுமை எனும் பாதாளத்தில் விழுந்தும் மனம் தளராது உழைத்து மீண்டும் வந்ததை விவரித்த திலகவதியின் பேட்டி மனதை நெகிழ வைத்துவிட்டது. வாழ்வில் வெற்றி பெற்ற அவருக்கு என் வாழ்த்துகள்!
- அயன்புரம் த.சத்தியநாராயணன், பட்டாபிராம்.

வாழ்வென்பது பெருங்கனவு... கண்ட கனவுகளும், நிஜமாகியவையும் கட்டுரையில் ஏவியேஷன் சேர்மன் தீபாவின் கனவுகளின் தகவல்கள் அருமை. கவலைகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு நம்மால் சாதிக்க முடியும் என்று நினைத்தால் ஒவ்வொரு பெண்ணுமே சாதனைப் பெண்களாக மாற முடியும் என்ற உணர்வு ஏற்பட்டது.
- வத்சலா சதாசிவன், சென்னை.

பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ எனும் பாடலுக்கு வாயசைத்து மிகச்சிறப்பாக மேல்நாட்டு நடனமாடிய சௌகார் ஜானகியை மறந்திட முடியுமா? இன்றும் வாழ்ந்து வரும் அம்மையார் பற்றிய கட்டுரை அருமை.
- ப.மூர்த்தி, பெங்களூரு.

முக்கனிகளில் முதற்கனியாகப் போற்றப்பட்டு வரும் மாம்பழத்தின் சுவை, மருத்துவப்பயன்கள் ஆகியன குறித்த தகவல்கள், மாம்பழம்போலவே தித்திப்பாக இருந்தன.
- வி.மோனிஷா பிரியங்கா, தில்லை நகர்.

30 வகை நவராத்திரி பலகாரங்கள் தயாரிப்பது குறித்த சமையற் குறிப்புகள் நவராத்திரி கொண்டாட்டத்தினை கொண்டாடிட வழிகாட்டியிருந்தன.
- கலைச்செல்வி வளையாபதி, கரூர்.

மண்ணில் மட்டுமல்லாது விண்ணில் சாதனை சரித்திரம் படைத்த மங்கைக்கோர் மகத்தான நல்வழிகாட்டி விண்வெளி சாகசப் பயண உதய கீர்த்திகா ஹாட்ஸ் ஆப்.
- கவிதா சரவணன், திருச்சி.

பழங்குடி மக்களின் வாழ்வாதாரம், உரிமை மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றை முன்வைத்து சூழலியல்வாதி ஷோபா மதன் தெரிவிக்கும் கருத்துக்கள் ஆழ்ந்த சிந்தனைக்குரியவை. கலைநயமிகுந்த செப்பு உலோகச்சிலைகள் வடிப்பதில் ஆர்வமும், தேர்ச்சியும் கொண்டுள்ள ‘சோழ மண்டல சிற்பி ஹேமலதா’ மென்மேலும் சாதனைகள் படைக்க வாழ்த்துகள்.
- வி.இராஜேஸ்வரி, போடிநாயக்கனூர்.

‘சியா’ விதையின் பயன்கள், அதனால் ஏற்படும் நல்விளைவுகளை ‘தோழி’ வழியாக மட்டுமே அறிந்தேன்.‘இட்லி சந்தை’ மாரிமுத்து குடும்பத்தினருக்கு வாழ்க்கையையும், கருங்கல்பாளையம் ஊர் மக்களுக்கு நல்ல உணவையும் கொடுக்கிறது. பாராட்டுக்கள்!
- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி