நியூஸ் பைட்ஸ்



ஆண்கள் விளையாடுவதை ஈரான் பெண்கள் பார்க்கலாம்

38 வருடங்களில், ஈரான் பெண்கள், முதல் முறையாக ஆண்கள் விளையாடும் கால்பந்து போட்டியை, விளையாட்டு திடலில் நேரடியாக சென்று பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. FIFA அமைப்பு கொடுத்த அழுத்தத்திற்குப் பிறகு, இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த தடை இருந்தபோதும், சில ஃபுட்பால் ரசிகைகள் ஆண்கள் போல உடை அணிந்து, அடையாளத்தை மறைத்து விளையாட்டு திடலில் ஆட்டத்தை ரசித்திருக்கின்றனர். இப்போது, பெண்கள் கால்பந்து ஈரானில் பிரபலமாகியிருப்பதும், இந்த தடையை நீக்குவதற்கு வழிவகுத்திருக்கிறது.

கிரேட்டாவுக்கு நோபலுக்கு நிகரான விருது

அமெரிக்கா, நியுயார்க் நகரில் பருவநிலை குறித்த ஐ.நா மாநாடு நடைப்பெற்றது. இதில் உலகத் தலைவர்களை ஆவேசமாக கேள்வி கேட்டார். ஸ்வீடன் நாட்டைச் செர்ந்த 16 வயதான சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க். ‘‘நாம் அனைவரும் பேரழிவின் தொடக்கத்தில் இருக்கிறோம். பூமியின் சுற்றுச்சூழல் பேராபத்தில் இருக்கும் நிலையில் எல்லாரும் பணம், பொருளாதார வளர்ச்சி குறித்து பேசி வருகிறீர்கள்.

எவ்வளவு தைரியம் உங்களுக்கு?’’ என்று ஆவேசமாகவும் தைரியமாகவும் கேள்வி எழுப்பினார். அவரின் பேச்சு சமூகவலைத்தளங்களில் வைரலாகிய நிலையில் இந்தாண்டுக்கான ‘வாழ்வாதார உரிமை விருது’க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஸ்வீடன் மனித உரிமை விருதுக்கான தேர்வுக்குழு அறிவித்துள்ளது. இந்த விருது நோபல் விருதுக்கு நிகரானது என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் கல்லூரியில் ஆடை கட்டுப்பாடு சட்டம் வாபஸ்

ஹைதராபாத்தில் இயங்கி வரும் பிரபல பெண்கள் கல்லூரியில், மாணவிகள் கால் முட்டிக்கு கீழ் உடைகள் அணிந்து இருந்தால் தான் கல்லூரிக்குள் அணுமதிக்கப்படுகிறார்கள். சுடிதார் மற்றும் குர்தி போன்ற உடைகளை மட்டுமே இவர்கள் இனி அணிய வேண்டும். அதை கண்காணிப்பதற்கும் ஒருவரை பிரத்யேகமாக கல்லூரி நிர்வாகம் நியமித்துள்ளது பெண்கள் கல்லூரியாக இருக்கும் பட்சத்தில் இந்த சட்டத்தை எதிர்த்து மாணவிகள் மட்டும் இல்லாமல் பல தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. அதனைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகம், புதிய சட்டத்தை வாபஸ் பெற்றது.

நடித்தது போதும் எழுந்து நில்லுங்கள்

விராலி மோதி, அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். 2006ல் முதுகுத்தண்டில் ஏற்பட்ட பாதிப்பால், அவரால் மற்றவர்கள் போல் எழுந்து நிற்கவோ நடக்கவோ முடியாமல் போனது. அவரின் வாழ்க்கை முழுதும் வீல் சேரில் பயணம் என்றாகிவிட்டது. இந்த நிலையில் தில்லியிலிருந்து மும்பைக்கு செல்வதற்கு விமான நிலையம் வந்திருந்தார் விராலி.

சோதனை செய்த பாதுகாப்பு அதிகாரி, அவரை எழுந்து நிற்க கூறியுள்ளார். தான் ஒரு மாற்றுத் திறனாளி என்றும், எழுந்து நிற்க இயலாது என்று கூறிய போதும், அவர் விராலியிடம் ‘நாடகம் செய்தது போதும், எழுந்து நில்லுங்கள்’ என்று கூறி விவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த நிகழ்வை தன் சோசியல் மீடியாவில் பகிர்ந்த விராலிக்கு ஆதரவாய் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

தங்கம் வென்ற பெண் காவலர்

சமீபத்தில் தென்கொரியாவில் நடைபெற்ற, 9 ஆம் ஆசிய யோகா விளையாட்டு சாம்பியன்ஷிப்பில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த கல்யாணி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இவர் ஒரு போலீஸ் அதிகாரி என்பதும் குறிப்பிடத்தக்கது. கடுமையான வேலை பளுவிலும், தொடர்ந்து பயிற்சி எடுத்து, ஆசிய அளவில் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார் கல்யாணி.

இந்தியாவின் முதல் பெரிய திரையரங்கம்

ெசன்னையில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில், ஆந்திரா மாநிலம் சூலூர்பேட்டையில் இந்தியாவிலேயே முதல் முறையாக மிகப்பெரிய திரையரங்கம் ‘வி எப்க்’ துவங்கப்பட்டுள்ளது. 100 அடி நீளம், 54 அடி உயரத்தில் எட்ஜ் டூ எட்ஜ் முறையில் முதல் முறையாக இதன் திரை அமைக்கப்பட்டுள்ளது.

க்யூப் தொழில்நுட்பம் முறையில் அமைக்கப்பட்டு இருப்பதால் காட்சிகள் பிரம்மாண்டமாகவும் அருகில் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படும். ஓராண்டுகளில் தமிழ்நாடு மற்றும் கேரளாவிலும் இதுபோன்ற திரையரங்குகள் துவங்கும் எண்ணம் இருப்பதாக க்யூப் நிறுவன உரிமை
யாளர் ஜெயந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆண்களுக்கான ஆர்கானிக் உள்ளாடைகள்

கே.பி.ஆர் மில் நிறுவனம் ஆர்கானிக் முறையில் ஆண்களுக்கான உள்ளாடைகளை பேசோ என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளனர். டெக்ஸ்டைல் துறையில் 1984 முதல் இயங்கி வரும் இவர்கள் இந்த உள்ளாடைகளை கோவை, சென்னை, மதுரை, கொச்சினில் அறிமுகம் செய்துள்ளனர். மேலும் அனைத்து உள்ளாடைக் கடைகளிலும் இவை விற்பனையில் உள்ளன.

அடுத்த ஆண்டுக்குள் இந்தியா முழுதும் விற்பனை செய்ய உள்ளனர். முழுக்க ஆர்கானிக் முறையில் விளைவிக்கும் பருத்தி நூலில் இருந்து தயாரிக்கப்படுவதால், இது சருமத்திற்கு எந்த பாதிப்பினையும் ஏற்படுத்தாது. ஆண்களுக்கான உள்ளாடைகள், ஸ்போர்ட்ஸ் உடைகள் மற்றும் இரவு நேர உடைகளை அறிமுகம் செய்து இருக்கும் இந்த நிறுவனம் இன்னும் இரண்டாண்டுகளில் பெண்களுக்கான உள்ளாடைகளையும் அறிமுகம் செய்ய உள்ளனர்.