சாதிக்க மனம் இருந்தால் போதும்!



பிப்ரவரி 1,2,3 தேதிகளில் மும்பை, நாசிக் நகரின் மிலிட்டரி கேம்பசில், தேசிய அளவிலான மூத்தோர்களுக்கான தடகளப் போட்டி நடைபெற்றது. இதில்  800 மீட்டர் ஓட்டப்பந்தயம், 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், 1000 மீட்டர் நடைபயணம் ஆகிய போட்டிகளில் தங்கப்பதக்கமும், 100 மீட்டர்  ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் பெற்று வெற்றி வாகை சூடியுள்ளார், 72 வயதான மேரிஜாய்.  

கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் காமராஜபுரம் தான் அவர் வசிக்கும் ஊர். இவரது கணவர் அருணாசலம். திருமணம் நடைபெற்ற நான்கு  ஆண்டுகளிலே கணவரை பறிகொடுத்தார் மேரிஜாய். இரண்டு வயது மகன், ஒரு வயது மகளு டன் வாழ்க்கையை வாழ வேண்டும் என்றவருக்கு  தொண்டு நிறுவனம் ஒன்று சமூக சேவைப்பணியை வழங்கியது.

இதற்காக அவருக்கு மாத ஊதியம் ரூ.100. அந்த வருமானத்தில் தான் குடும்பத்தை பராமரித்து வந்தார் மேரிஜாய். அந்த காலக்கட்டத்தில் அரசு  மருத்துவமனைகள் கிடையாது. வீடுகளில்தான் பெரும்பாலாக பிரசவம் நடக்கும். சேவைப்பணியில் இருந்தவர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட  பிரசவங்களை பார்த்துள்ள மேரிஜாய், பனிரெண்டாம் வகுப்பு மட்டுமே படித்துள்ளார்.

ஆண்டுகள் உருண்டோட மகன் சொந்தமாக தொழில் ஆரம்பித்தார். மகளை மணமுடித்து கொடுத்தார். தன் கடமைகளை முடித்த மேரிஜாய், மகன்,  மருமகள், பேரப்பிள்ளைகளோடு வசித்து வருகிறார். இவருக்கு சின்ன வயசில் இருந்தே ஒரு கனவு இருந்தது. பி.டி. உஷா போல் ஓட்டப்பந்தயத்தில்  பங்கு பெற்று வெற்றிப் பெறவேண்டும் என்பது தான் அவரின் நீண்ட கால கனவாக இருந்தது. சாகும் முன்பு இதில் சாதிக்க வேண்டும் என்றிருந்தவர்  அதற்கான வேலையை தன் 68 வயதில் துவங்கியுள்ளார்.

தடகளப்போட்டியில் எவ்வாறு பங்கு பெற்றீங்க?

‘‘எனக்கு சின்ன வயசில் இருந்தே விளையாட்டு போட்டியின் மேல் தனி ஆர்வம் உண்டு. ஆனால் அப்ப இருந்த சூழ்நிலையில் என்னால் அதில் ஈடுபட  முடியவில்லை. படிப்ப, கல்யாணம், குழந்தைகள்ன்னு என்னுடைய வாழ்க்கை நகர ஆரம்பித்தது. என்னைப் பற்றி யோசிக்க அப்போதே எனக்கு நேரம்  கிடைக்கல. அதில் நான் அப்போத கவனமும் செலுத்தல. எனக்கான கடமைகளை முடித்த பிறகு தான் நான் எனக்காக சுவாசிக்க துவங்கினேன். 50  வயதில வீராங்கனை பி.டி.உஷாவால் சாதிக்க முடியும் போது, என்னால் முடியாதான்னு எண்ணம் ஏற்பட்டது.

2014ம் ஆண்டு செப்டம்பர் மாசம் தேதி சரியா ஞாபகம் இல்ல. பேப்பர்ல ஒரு விளம்பரம் பார்த்தேன். 7 ஸ்டார் காமராஜர் தொண்டு நிறுவனமும்,  சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனமும் சேர்ந்து மூத்தோர்களுக்கான தென்னை மரம் ஏறும் போட்டி அறிவிச்சாங்க. இது பற்றி என் மகனிடம் சொன்ன  ேபாது... அவன், ‘உங்க விரும்பம் எதுவோ, அப்படியே செய்யுங்க’’ன்னு சொல்லிட்டான். அப்புறம் என்ன... 28 அடி உயரம் ஏறணும். நானோ 30 அடி  உயரம் ஏறி, தேங்காய் பறிச்சிட்டேன். அதுல எனக்கு முதல் பரிசு கிடைச்சது. அதுல இருந்து எனக்கு எந்த விளையாட்டு போட்டினாலும்  கலந்துக்கணும்னு ஆர்வம் ஏற்பட்டுச்சு.

அதனால் எங்கு போட்டி அறிவிக்கிறாங்கன்னு தினசரியில பார்த்துக் கொண்டே இருப்பேன். கடந்த ஆண்டு அக்டோபர் மாசம் மூத்தோர் தடகள சங்கம்  சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் பூண்டியிலுள்ள தனியார் கல்லூரியில் போட்டி நடத்தினாங்க. அதுல 5000 மீட்டர் நடை போட்டியில் 3வது இடமும், 100  மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடமும் வந்தேன். அதன் பிறகு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில்  மாநில அளவிலான மூத்தோர் தடகளப் போட்டி நடைபெறுவது குறித்து தினசரியில் படிச்சேன்.

படிச்சதும் என் கால்கள் அமைதியாக இல்லை. உடனே அந்த போட்டியில் பங்குபெற்றேன். மாநில அளவில் நடை பெற்ற அந்த போட்டியில் 100, 400  மற்றும் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதல் பரிசு பெற்றேன். இதன் மூலம் தேசிய அளவிலான தடகளப்போட்டிக்கு தேர்வானேன். கடந்த மாதம்   மூத்தோர் களுக்கான தேசிய தடகளப்போட்டி மும்பை நாசிக்கில் உள்ள மிலிட்டரி கேம்பசில் நடந்தது. அதில் 1000 மீட்டர் நடைப்பயிற்சியில்  முதலிடமும், 800 மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் முதல் பரிசான தங்கப்பதக்கமும், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப்பதக்கமும்  கிடைத்தது.’’

தேசிய தடகளப்போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில் அடுத்த என்ன செய்யப்போறீங்க?

‘‘என் நோக்கமே, உலகளவிலான போட்டியில் பங்கேற்கணும். அதில் வெற்றிப் பெற்று நம் நாட்டிற்கு புகழைத் தேடி தரணும்.’’

வருங்கால சந்ததியினருக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?

‘‘முதல்ல என் வயசில உள்ளவங்களுக்கு நான் சொல்றேன். 50 வயது ஆனதும், நமக்கு வயசாச்சு, கிடைக்கும் உணவை சாப்பிட்டு வீட்டுல ஒரு  மூலையில படுத்துக்கிடக்கணும் என்கிற முடிவுக்கு வராதீங்க. நம்மால முடியும். சாதிக்க வயசு முக்கியமல்ல, மனசு தான் முக்கியம். அதை  வைராக்யமா எடுத்து செயல்ல இறங்குங்க வெற்றி நிச்சயம். எண்ணமும், செயலும் ஒன்றானால் எல்லோரும் சாதிக்க முடியும்.

இளம் பெண்களே, அம்மா உங்களுக்கு வயசாச்சு, நீங்க சும்மா இருங்கன்னு அவங்களை மேலும் நோயாளியாக்க வேண்டாம். நாங்க கீழே விழுந்து  எங்களின் கைக் காலை உடைத்துக் கொள்ள மாட்டோம். காரணம் உங்களை விட எங்களின் உடலை பற்றி நாங்கள் நன்கு புரிந்து வைத்து இருக்கோம்.  மேலும் இன்றைய காலக்கட்டத்தில் எல்லாரையும் விட ஆரோக்கியத்திற்கு நாங்க அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். எங்களால் எதுவும் செய்ய  முடியாது என்று நினைக்க வேண்டாம். எங்களுக்கும் மனம் உண்டு, அதில் எண்ணம் உண்டு. வைராக்கியம் உண்டு.’’

உங்களது காதல் திருமணமா?

‘‘இல்லை, பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்தான். என் அத்தை பையனைத்தான் நான் திருமணம் செய்து கொண்டேன்’’ என்று  புன்முறுவலோடு நம்மிடம் இருந்து விடைபெற்றார் மேரி ஜாய்.


சு.இளம் கலைமாறன்
படங்கள்: மணிகண்டன்