ஆடு தொடா இலையும் அதன் அற்புதமும்!



வாசகர் பகுதி

நம் வீட்டுத் தோட்டத்தின் காவலாக இருக்கும் பல செடிகளில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இதை எல்லாம் நம் முன்னோர்கள் மருந்தாகவே  பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர். எப்போது நாம் நகர வாழ்க்கைக்கு மாறினோமோ... அன்று முதல் நாம் அனைத்தையும்  மறந்துவிட்டோம். அப்படிப்பட்ட மருத்துவ குணம் கொண்ட ஆடு தொடா இலை மற்றும் வசம்பை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

*    காச நோய் குணமாக ஆடாதொடை இலையை கஷாயம் செய்து, தேன் கலந்து சாப்பிட்டு வரலாம்.
*    ஆடாதொடை வேர், கண்டங்கத்திரி வேர் பொடியினை சம அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் வலிகள்  குறையும்.
*    நுரையீரலில் ஏற்பட்டுள்ள புண் குணமாக மருதம்பட்டை, ஆடாதொடை பொடி இவற்றை வெள்ளாட்டுப் பாலில் கலந்து குடிக்கலாம்.
*    சளித்தொல்லை குறைய ஆடாதொடை இலை, வெற்றிலை, துளசி, தூதுவளை இவைகளை எடுத்து லேசாக அரைத்து வேகவைத்து தேன்  கலந்து சாப்பிட வேண்டும்.
*    ஆடாதொடை இலையையும், சங்கிலையையும் எடுத்து தண்ணீரில் போட்டு காய்ச்சிக் குடித்து வந்தால் அஜீரணம் மற்றும் வாயுவினால்  ஏற்படும் வயிற்று வலி குறையும்.

விஷத்தன்மையை முறிக்கும் வசம்பு!

பல்வேறு நன்மைகளை கொண்ட வசம்பிற்கு, பிள்ளைவளர்த்தி என்ற பெயர் உண்டு. இது குழந்தைகளின் நரம்புகள் பலம்பெற்று மூளை சிறப்பாக  செயல்பட உதவுகிறது. வீடுகளில் கட்டாயம் வசம்பு வைத்திருப்பார்கள். குறிப்பாக பிறந்த கைக்குழந்தைக்கு தினமும் வசம்பை உரசி வாயில்  வைப்பதுண்டு. காரணம் குழந்தை சாப்பிடும் உணவாலோ அல்லது அலர்ஜியாலோ விஷத்தன்மை குழந்தைக்கு பரவக் கூடாது என்பதற்காக  கொடுக்கப்படும்.

*    வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி  விடும். இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.
*    வசம்பு எப்பேர்ப்பட்ட கொடிய விஷத்தன்மையையும் போக்கக்கூடியது. அதனால் கட்டாயம் வீட்டில் வசம்பு வைத்திருக்க வேண்டியது  அவசியம். வசம்பை விஷம் அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டு, மூன்று டீஸ்பூன் கொடுத்தால் உள்ளிருக்கும் விஷம் முழுக்க வெளியே வந்து  விடும்.
*    வசம்பை பயன்படுத்தி சளி, இருமல், செரிமான பிரச்னைகளை போக்கும் மருந்து தயாரிக்கலாம். ஒரு பாத்திரத்தில் வசம்பு பொடி கால்  ஸ்பூன் எடுக்கவும். இதனுடன் சிறிது கடுக்காய் பொடி, சுக்குப்பொடி, மிளகுப்பொடி, திப்பிலி பொடி, பனங்கற்கண்டு ஆகியவற்றை சேர்க்கவும். பின்னர்,  ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்தால், நெஞ்சக கோளாறு, சளி, இருமல் குணமாகும்.
*    செரிமானத்தை சீராக்கும் சக்தி வசம்பிற்கு உண்டு. இது வயிறு உப்புசத்தை போக்கி, நரம்புக்கு பலம் தரக்கூடியது. வயிற்றில் உள்ள  காற்றை வெளியேற்றி வயிற்று வலியை போக்கும். அல்சரை ஆற்றக்கூடியது. மருந்தே ஆனாலும், அதனை அளவோடு சாப்பிட்டால் தான் நன்மையை  தரும்.

- மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.