செல்லுலாய்ட் பெண்கள்



பா.ஜீவசுந்தரி-56

நூற்றாண்டு வரலாறு ‘சினிமா ராணி’ டி.பி.ராஜலட்சுமி

தமிழின் முதல் பேசும் படத்தில் நடித்த, ’சினிமா ராணி’ என அழைக்கப்பட்ட, தமிழ்த் திரையுலகின் பல முதல் பெருமைகளுக்குச் சொந்தக்காரரான,  தமிழ் சினிமாவின் நூற்றாண்டுப் பெருமைக்குரியவரான டி.பி. ராஜலட்சுமியின் வாழ்க்கையைத் திரும்பிப் பார்ப்பது, ஏறக்குறைய தமிழின் கலாசார   அடையாளங்களில் ஒன்றாகவே ஆகிவிட்ட தமிழ்த் திரையுலகின் பாதையை மீண்டும ஒரு மறு ஆய்வுக்கு உட்படுத்துவது போன்றதேயாகும்.

அது சரி,  பேசாப் படங்களிலும் நடித்தவரான இவர் எவ்வாறு 50களின் வரிசையில் வந்தார் என்ற கேள்விக்கும் பதில் இருக்கிறது. ஆம்! செல்லுலாய்ட் பெண்கள்  தொடருக்குப் பெருமை சேர்ப்பதற்காகவே அவர் 1950ல் வெளியான ‘இதய கீதம்’ திரைப்படத்தில் நடித்து தன் திரையுலகின் பங்கை நிறைவு  செய்திருக்கிறார். 50களில் அவர் நடித்த ஒரே திரைப்படம் என்பதுடன் அதுவே அவரின் இறுதிப் படமும் ஆகும்.

பாய்ஸ் கம்பெனி அறிமுகமும் மௌனப் பட நடிப்பும்

தமிழில் பேசும் படங்கள் தயாரிக்கப் படுவதற்குப் பதினைந்து ஆண்டுகள் முன்னரே மவுனப்படங்கள் தமிழில் தயாரிக்கப்பட்டு வந்தன. அக்கால கட்டத்தின் மவுனப் படத் தயாரிப்பாளர்கள் சந்தித்து வந்த மிகப் பெரும் பிரச்சனை பெண் நடிகர்கள் தட்டுப்பாடு. ஆண் நடிகர்களே பெண்  பாத்திரங்களையும் ஏற்று நடிப்பது, ஐரோப்பியப் பெண்களை அல்லது ஆங்கிலோ இந்தியப் பெண்களைப் பெண் பாத்திரங்களை ஏற்கச் செய்வது  என்றுதான் ஆரம்ப காலங்களில் சமாளித்து வந்துள்ளனர்.

நம் இந்தியா போன்ற கட்டுப்பெட்டித்தனமான சமுதாய அமைப்பில் இந்தப் பிரச்சனையை மிக எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். நம் சமூகத்தில்  சமுதாயச் சடங்குகளில் கூட பெண்களுக்கு உரிய இடமில்லை. அவள் சமூக உற்பத்திக்கு அப்பாற்பட்ட பொதுவெளிகளில் அனுமதிக்கப்படுவதும்  இல்லை. இது பற்றிய இயக்குநர்களின் புலம்பல்களையும் அடிக்கடி கேட்க நேர்கிறது. இங்கு வெற்றிக்கொடி நாட்டும்  பெண் நடிகர்கள், பிற  மாநிலங்களுக்குச் சென்றால் வேறு மாதிரிதான் நடிக்க முடிகிறது.

தங்கள் விருப்பம் போல அவர்களால் நடிக்க முடிவ தில்லை. இப்போதும்கூட ஆண் கலைஞர்களுக்கு இணையான கவுரவமும் மதிப்பீடுகளும் பெண்  கலைஞர்களுக்குக் கிடைத்த பாடில்லை. பாய்ஸ் கம்பெனிகள் நடத்தப் பட்ட காலத்திலிருந்தே நடிகர் கள் தட்டுப்பாடு நீடிக்கிறது. சமுதாயத்தில்  மரியாதையும், வருமானமும்  இல்லாத தொழிலாக இருந்ததால் நடிப்பின் மீது அதீத காதல் கொண்டவர்கள் தவிர மற்றவர்களால் அதில் தொடர்ந்து  நீடிக்க முடிந்ததில்லை.

பெரும்பாலான பாய்ஸ் கம்பெனிகளில் ஆண் நடிகர்களே பெண் வேடமிட்டு வந்தனர். இச்சூழலில் மிக அபூர்வமாக ஒரு பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்து  கதாநாயகி வேடம் தாங்கிய முதல் பெண் டி.பி.ராஜலட்சுமி. தொடர்ந்து ஸ்பெஷல் நாடகங்களில் நடித்து ராஜபார்ட் நடிகரை விட அதிக சம்பளம்  வாங்கும் ஸ்பெஷல் நடிகையானார். இக்காலகட்டத்தில் தமிழில் மௌனப்படங்கள் சரளமாக வெளிவந்து சக்கைப்போடு போட்டுக் கொண்டிருந்தன.  டி.பி.ராஜலட்சுமி ‘கோவலன்’ என்ற மௌனப்படத்தில் மாதவியாக அறிமுகமானார்.

ஏழு வயதில் முடிந்து போன மண வாழ்வு

ராஜலட்சுமியின் பூர்வீகம் ஒருங் கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் அமைந்த சாலியமங்கலம். அக்கிராமத்தின் கர்ணம் பஞ்சாபகேச சாஸ்திரிகள் அஷ்ட  சகஸ்ர பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருடைய மனைவி மீனாட்சி அம்மாள். இவர்கள் குடும்பத்துடன் தஞ்சையில் வாழ்ந்து வந்தனர். இந்தத்  தம்பதிக்கு இரண்டு மகன்கள். ஒரே  மகள், அவர்தான் ராஜலட்சுமி. ஐந்து வயதிலேயே காதால் கேட்டதை அப்படியே பாடுவதும் கண்ணால் பார்ப்பதை  அப்படியே ஆடிக் காட்டுவதுமாக இருந்தாள் அந்தச் சிறுமி..

அக்கால பார்ப்பனக் குடும்பங்களின் வழக்கப்படி ஏழு வயதில் கல்யாணம், அது நடந்த நாள்தொட்டு சம்பந்திகளுக்குள் மனஸ்தாபம். இடையறாத  சச்சரவுகள். ஒரு கட்டத்தில் அது பெரும்பூசலாக வெடித்து, ஏழு வயதுக்குள் வாழாவெட்டியாகி புகுந்த வீட்டுக்குச் செல்லாமல், நிரந்தரமாக தாய்  வீட்டிலேயே தங்க நேர்ந்தது ராஜலட்சுமிக்கு. மகளின் சிதைந்து போன மண வாழ்க்கை பற்றிய கவலையில் சில மாதங்களில் பஞ்சாபகேச சாஸ்திரி  மறைந்தார். வாழ்க்கைப்பாட்டைத் தொடர வேண்டி மகளுடன் தாயார் திருச்சி மலைக்கோட்டைக்குப் பிழைப்புத் தேடி வந்தார். அப்போதெல்லாம் வாழ  வழியற்றவர்களுக்குப் புகலிடமாக நாடகக் கம்பெனிகள் இருந்தன.

பாய்ஸ் கம்பெனியின் முதல் நடிகையாக….

பதினோராவது வயதில் மகளை அழைத்துக்கொண்டு மதுரை சாமண்ணா பாய்ஸ் நாடகக் கம்பெனிக்கு வந்து, தமது மகளைச் சேர்த்துக் கொள்ளும்படி  வேண்டினார் தாயார். அப்போது தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் அங்கிருந்தார். ராஜலட்சுமியைப் பார்த்ததும் ‘பெண் களையாக இருக்கிறாள்; சேர்த்துக்  கொள்ளுங்கள்’ என்று சிபாரிசு செய்தார். மாதச் சம்பளம் 50 ரூபாய் எனப் பேசப்பட்டது. முதல் நாடகம் ‘பவளக்கொடி’. ஏற்ற வேடமோ புலேந்திரன்.  அதன் பிறகு படிப்படியான முன்னேற்றம்தான் ராஜலட்சுமிக்கு.

அதன் பின்னர் ஆரிய கான சி.எஸ். செல்லப்பா கம்பெனியில் 75 ரூபாய் சம்பளம். அப்புறம் மொய்தீன் சாயபு கம்பெனியில் மூன்று வருடங்கள். அதன்  பிறகு கன்னையா பிள்ளை கம்பெனி. அங்கும் முதல் பெண் நடிகை இவரே, ‘சீதா கல்யாணம்’ நாடகத்தில் எஸ்.ஜி. கிட்டப்பா -  ராமன்; டி.பி.ராஜலட்சுமி  - சீதை. அதன் பிறகு சுதந்திரமான ஸ்பெஷல் நாடகப் பெண் நடிகர். எந்த கம்பெனி வாய்ப்பளிக்கிறதோ, அங்கெல்லாம் நடித்தார்.

அதன் அடுத்தக்கட்டமாக திருச்சி டி.எஸ். நடராஜ பிள்ளை ஒப்பந்தத்தில் ஸ்பெஷல் நாடகங்களில் நடிப்பதற்காகச் சென்னை வந்தார் ராஜலட்சுமி.  அப்போது பிரபலமாக இருந்த மவுனப் படங்களைப் பார்ப்பதற்கும் ஆசைப் பட்டார்; பார்த்தார். அதன் தொடர்ச்சி யாக அடுத்தக்கட்டப் பாய்ச்சலாக ஏ.  நாராயணனின் ஜெனரல் பிக்சர்ஸ் கார்ப்பரேஷன் தயாரித்த ‘கோவலன்’ மவுனப் படத்தில் பேச்சு, பாட்டு எதுவும் இல்லாமல் நடிக்கும் வாய்ப்பும் வந்தது.  அடுத்து கே.சுப்பிரமணியத்தின் ‘உஷா சுந்தரி’, ராஜா சாண்டோவின் ‘இராஜேஸ்வரி’ படங்களிலும் நடித்தார்.

பேசும் படங்களின் முதல் நாயகியாய் இடம் பெற்றார்

“1931 ஆம் ஆண்டு பேசும் படங்களைப் பரீட்சார்த்தமாகத் தயாரிக்க வேண்டு மென்று பம்பாய் இம்பீரியல் கம்பெனியார் முயற்சி செய்து அதற்கு ஒரு  தமிழ் நடிகை தேவையென்று தேடியபோது அந்தச் சந்தர்ப்பம் ராஜலக்ஷ்மிக்குக் கிடைத்தது. அந்தப் படத்தில் இரண்டு கீர்த்தனைகளையும் இரண்டு  தேசிய கீதங்களையும் அவர் பாடினார். அத்துடன் ஒரு குறத்தி நடனமும் ஆடினார். அந்தப் பரீட்சையில் அவர்கள் வெற்றி கண்டார்கள் என்பதோடு  நாயகியும் வெற்றி பெற்றார் என்பதையும் குறிப்பிட வேண்டும்! அன்று முதல் அவர் பேசும் படத்தில் நடித்த முதல் நடிகை என்ற பெயர் பெற்று  சினிமா வரலாற்றிலும் இடம் பெற்றார்.

‘காளிதாஸ்’ படத்துக்காக நடந்த ஆடிஷன் குறித்து தமிழ் திரைப்பட ஆய்வாளர் அறந்தை நாராயணன் சேகரித்துத் தொகுத்தளித்த தகவல்கள்
மிக சுவாரசியமானவை.

“முதலில் ஒரு பாட்டைக் கொடுத்துப் பாடச் சொன்னார்களாம், டி.பி.ராஜலட்சுமி பாடினாராம். அப்புறம் - இன்னொரு பாடலைக் கொடுத்து  பாடிக்கொண்டே ஆடச்  சொன்னார்களாம், ‘எனக்கு ஆடத் தெரியாதே’ என ராஜலட்சுமி மறுத்தாராம். விடவில்லை, வற்புறுத்தினார்கள்.

“மன்மத பாணமடா
மாரினில் பாயுதடா!’
என்று பாடிக்கொண்டே கையைக் காலை உதறி டான்ஸ் ஆடினாராம்.
“ராஜலட்சுமியைக் குறத்தி டான்ஸ் ஆடச் சொன்னபோது நாடக மேடையில் பாடி வந்த,
ராட்டினமாம்- காந்தி
கை பாணமாம்’
- பாடலைப் பாடி ஆடினார்” என்று எழுதுகிறார்.

‘ராட்டினமாம்..’ பாடல் மதுரகவி பாஸ்கர தாஸ் எழுதியது. காங்கிரஸ் பேரியக்கத்தைச் சேர்ந்தவரான அவர் இதுபோன்ற பாடல்களைக் காலத்துக்கு ஏற்ப  எழுதி பிரதியில் சேர்ப்பதும் அதற்குப் பயிற்சி அளிப்பதும் வழக்கம். அக்காலத்தில் இப்பாடல்கள் பிரபலமாக விளங்கியதுடன் எல்பி ரிக்கார்டுகளாகவும்  விற்றுத் தீர்ந்துள்ளன. இதில் சில பாடல்களில் டி.பி.ராஜலட்சுமி பயிற்சி பெற்று நாடகங்களில் இடையிடையே பாடி வந்தார்.

இதனால் புகழும் அடைந்திருந்தார்.  எனவே, தமிழின் முதல் முயற்சியான காளிதாஸில் அக்காலகட்டத்தில் பிரபலமாகியிருந்த பாஸ்கர தாஸின்  பாடல்களும் இடம் பெற்றால் படம் பற்றிய தகவல்கள் மக்கள் மத்தியில் பிரபலமடைவதற்கு உதவியாக இருக்கும் என எண்ணி படத்தில் சேர்த்தனர்.  ராட்டினமாம் பாடல் தவிர ‘இந்தியர்கள் நம்மவர்களுக்குள் ஏனோ வீண் சண்டை..’ என்ற இந்து - முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தும் பாடலும் இடம்  பெற்றது.

பத்திரிகையின் மரியாதையற்ற போக்கு

‘காளிதாஸ்’ - 1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் நாள் சனிக்கிழமை சென்னை ‘சினிமா சென்ட்ரல்’ தியேட்டரில் திரையிடப்பட்டது. கதாநாயகி  வித்யாதரி (டி.பி.ராஜலட்சுமி) தமிழில் பேசுவார் - பாடுவார். கதாநாயகன் காளிதாஸ் தெலுங்கில் பதில் சொல்லுவார். வேறு சில துணை நடிகர்கள்  இந்தியிலும் பேசினார்களாம். காளிதாஸ் படம் வெளிவரும் முன்னதாகக் காண்பிக்கப்பட்ட சிறப்புக் காட்சியைத் தொடர்ந்து ‘சுதேசமித்திரன்’ நாளிதழ்  அப்படத்துக்கு ஒரு விமர்சனமும் எழுதியிருந்தது.

இம் முயற்சியைப் பெரிதும் வரவேற்கும் விதமாக எழுதப்பட்ட இந்த விமர்சனத்தில் “தென்னிந்திய நாடக மேடையில் கீர்த்தி வாய்ந்து சிறந்து  விளங்கும் மிஸ். டி.பி. ராஜலட்சுமி முதன்முறையாகச் சினிமாவில் தோன்றுவதை இவளை நாடக மேடையில் கண்ணுற்ற அனைவரும் பார்க்க இது   சமயமாகும். தமிழ், தெலுங்கு பாஷையில் தயாரிக்கப்பட்டுள்ள இப்பேசும்படம் சில வாரங்கள் இங்கு செல்லும் (ஓடும்) என்று எளிதில் சொல்லலாம்”  என எழுதியுள்ளது.

படம் பற்றி பெரிதும் பாராட்டி எழுதப்பட்டிருந்தாலும் தேசிய இயக்க நாளிதழ் என போற்றப்படும் ஒரு நாளிதழ் எவ்வளவு ஆணவமாகப் பாலினப்  பாகுபாட்டைக் கொண்டிருந்தது என்பதற்கும் சாட்சியமாக இருக்கிறது. தென்னிந்தியாவிலேயே புகழ் பெற்றவராக இருந்தாலும், பெண் என்றால் ‘அவள்’  என்ற ஒருமை அழைப்புதான். அவரது குரலுக்கு அளிக்கப்பட்ட மரியாதைகூட அவருக்கு அளிக்கப்படவில்லை.

அன்றைய காலகட்டத்தில் பெண் நடிகர்கள் பிரிட்டிஷ் அடக்குமுறைகளை எதிர்கொண்டவாறுதான் நாடகங்களின் மத்தியில் விடுதலைப் போராட்டப்  பாடல்களைப் பாடியுள்ளனர் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது. போராளிப் பெண் என்றாலும் அவர்கள் அடக்குமுறையைச் சந்தித்தாலும், சிறை  சென்றாலும் ‘அவள்’, ‘இவள்’தான். சமூகம் எவ்வாறு இருந்ததோ அதையே பத்திரிகையும் பிரதிபலித்திருக்கிறது.

தமிழ் சினிமாவின் முதல் வெற்றிப்படம் வள்ளித் திருமணம்

1933 ஆம் ஆண்டில் இரண்டு வள்ளித் திருமணங்கள் தயாரிக்கப்பட்டன. பம்பாய் ஈஸ்ட் இண்டியா கம்பெனியும், கல்கத்தா நியூ தியேட்டர் கம்பெனியும்  ஒரே நேரத்தில் தயாரிப்பில் ஈடுபட்டன. கல்கத்தா வள்ளி பெரும் வெற்றி பெற்றது. மிஸ் டி.பி. ராஜலட்சுமியும் அவரது புகழ்பெற்ற பாடல்களும்  படத்தில் இடம் பெற்றதும் கூட இந்த வெற்றிக்கு முக்கிய காரணங்கள். இப்படம்தான் அவருக்கு ‘சினிமா ராணி’ என்ற பட்டத்தையும் பெற்றுத் தந்தது.  தமிழின் முதல் வெற்றிப் படமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

‘வள்ளித் திருமணம்’, ‘குலேபகாவலி’, ‘தமிழ்த்தாய் அல்லது ‘மாத்ருபூமி’, ‘நந்தகுமார்’, ‘மதுரை வீரன்’, ‘ஜீவஜோதி’ ஆகியன குறிப்பிடத்தக்க வெற்றிப்  படங்கள். படம் மட்டும் வெற்றி பெறவில்லை. இப்படத்தில் தம்முடன் நாரதராக நடித்த டி.வி. சுந்தரத்தை முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.  அதாவது தனது பால்ய காலத்தில் 7 வயதில் யார் விருப்பத்துக்காகவோ நிகழ்ந்த முந்தைய திருமணத்தைச் சட்டப்படி முறித்துக்கொண்டு அவரை  மறுமணம் செய்துகொண்டார்.

எழுத்துலகிலும் தன் திறமையை நிரூபித்தவர்

அவரது காலகட்டம் மட்டுமல்ல, அதற்குப் பின்பும் கூட தமிழ்த்திரை உலகில் வெற்றிக்கொடி நாட்டிய கலைஞர்களுக்கும் ராஜலட்சுமிக்கும்  இடையேயான வேறுபாடுகளில் முக்கியமானது அவர் பன்முகப் பரிமாணம் கொண்டவர் என்பது. அதைவிட முக்கியமானது தொடர் வெற்றிகள்  அவரைச் சுற்றி உருவாக்கியிருந்த ஒளி வட்டத்துக்கு அப்பாலும் தமது சமகால உலகைப் பார்த்தவர்.

அதனால்தான் நாடகங்களிலும் திரைப்படங்களிலும் பிஸியாக இருந்தபோதும் ‘கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன்’ போன்ற நாவலை அவரால்  எழுத முடிந்தது. 1931-லேயே எழுதப்பட்ட இந்த நாவல் ஒரு முக்கியமான சமூக சீர்திருத்த நாவல் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதைவிட அதன்  காட்சிகள் மிக யதார்த்தமாகச் சித்திரிக்கப்பட்டிருப்பது முக்கியமாகும். இந்த நாவலில் இடம்பெறும் கமலவல்லி சூழ்நிலைகளின் காரணமாகக்  காதலித்தவனைத் திருமணம் செய்துகொள்ள இயலாமல் வேறு ஒருவனைத் திருமணம் செய்து கொள்ள நேர்கிறது.

கமலவல்லி வேறு ஒருவனைக் காதலித்தவள் என்பதை அறிந்தவுடன் அவள் கணவன், கமலவல்லியை அவளுடைய காதலனுக்கே மீண்டும்  திருமணம் செய்து தரும் ஒரு மாற்றுக் கருத்தை மையமாகக் கொண்டு நாவல் எழுதப்பட்டுள்ளது. இதன் பின்னர் விமலா, சுந்தரி, வாஸந்திகா,  உறையின் வாள் போன்ற வேறு சில நாவல்களையும் டி.பி. ராஜலட்சுமி எழுதியுள்ளார்.

மிஸ்.கமலா திரைப்படமான கமலவல்லி

டி.பி.ராஜலட்சுமி இதே நாவலை ‘மிஸ்.கமலா’ என்ற பெயரில் 1936ல் திரைப்படமாகவும் தயாரித்து திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதியதுடன்  இப்படத்தை அவரே இயக்கியும் உள்ளார். அதோடு கமலவல்லி பாத்திரத்திலும் நடித்து அதற்கு உயிர் கொடுத்துள்ளார். 30களில் இம்மாதிரியான  கதைக்கருவுடன் ஒரு படம் வெளி வருவதென்பதே பெரும் பாடு. சமூகத்தின் பங்களிப்பும் மக்களின் விருப்பமும் இல்லாமல் போன காரணத்தால்  இப்படம் தோல்வி கண்டது. ஆனால், ஒரு பெண்ணாக தயாரிப்பு, திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு, பாடல் என அவர் சாதனை படைத்திருக்கிறார்  என்றுதான் சொல்ல வேண்டும்.

அதுவரை பெண்கள் நடிப்பு, நடனம், பாடல் என்ற வளையத்துக்குள்ளேயே சுழன்று கொண்டிருந்தார்கள். அதிலிருந்து ஒருவர் வெளியே வந்து  சாதித்திருக்கிறார் என்பதாலேயே தமிழ் சினிமாவின் நூற்றாண்டு கடந்தும் அவர் கொண்டாடப்படுகிறார். ஆனால், இப்படத்தின் தோல்வி பற்றியும்  பெண்கள் திரைப்படங்கள் இயக்குவது பற்றியும் ‘பேசும் படம்’ சினிமா பத்திரிகை 1950 ஏப்ரல் இதழில் கேள்வி - பதில் பகுதியில் கீழ்க்கண்டவாறு  வன்மமும் வக்கிரமுமாகக் கேலி செய்து எழுதியிருக்கிறது:

கேள்வி: பெண் டைரக்டர்கள் தமிழ் நாட்டில் ஏன் தோன்றவில்லை? மேல் நாட்டு, வட நாட்டுப் படங்களைப் பெண்கள் டைரக்ட் செய்வதுண்டா?
பதில்: எல்லா நாடுகளிலுமே ஆண்கள் தான் படங்களை டைரக்ட் செய்கிறார்கள். அவர்களைப் பெண்கள் டைரக்ட் செய்வதும் இல்லாமலில்லை.  இதற்கெல்லாம் விதிவிலக்காக முற்போக்கான நம் நாட்டில் டி.பி.ராஜலட்சுமி ஒரு படத்தை டைரக்ட் செய்து பெண்கள் இந்தத் தொழிலுக்கு  லாயக்கில்லை என்பதை நிரூபித்திருக்கிறார்.

பன்முகப் பரிமாணம் கொண்டவர்
 
தொடர்ந்து ‘ராஜம் டாக்கீஸ்’ என்ற பெயரில் திரைப்படத் தயாரிப்புகளிலும் ஈடுபட்டார். அவர் தயாரித்த படங்களில் ‘தமிழ்த்தாய் அல்லது மாத்ரு தர்மம்’  மற்றும் ‘மதுரை வீரன்’ ஆகிய படங்கள் முக்கியமானவை. தேச பக்தி, நீதி, நேர்மை, தன்னடக்கம், சுயமரியாதை, பெண்ணுரிமை, மது உண்ணாமை,  நன்றி மறவாமை போன்ற கருத்துகள் அத்தனையும் கொண்டு உரு வாக்கப்பட்ட கதையமைப்பு. இப்படத்தைத் தயாரிக்க நேர்ந்தது, நடித்தது குறித்து  ராஜலட்சுமி பின்னர் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். திரைப்படக் கலை தொடர்பான நுணுக்கங்களிலும் அவர் மிகுந்த கவனம் கொண்டவராக  இருந்துள்ளார்.

1929ல் மவுனப் படங்களில் தொடங்கி, 1931ல் பேசும் படத்தில் நடிக்க ஆரம்பித்து 1943 வரை தொடர்ச்சியாக நடிப்பில் கவனம் செலுத்தியுள்ளார்.  பின்னர் 1950ல் ஒரு படத்துடன் திரை வாழ்வு முற்றுப் பெற்றது. மவுனப் படங்கள் அல்லாமல் 27 படங்களில் நடித்துள்ளார். 1961 ஆம் ஆண்டு தமிழக  அரசு அவருக்குக் கலைமாமணி விருது வழங்கிக் கௌரவித்தது. மத்திய அரசு 2017 ஆம் ஆண்டு ‘சினிமா ராணி’க்குச் சிறப்பு செய்யும் விதமாக சிறப்பு  அஞ்சல் உறையை வெளியிட்டது. படங்களில் நடித்தபோதும் நாடகங் களையும் விட்டு விடாமல் தொடர்ச்சியாக இயங்கியிருக்கிறார். இலங்கை, பர்மா  போன்ற அயல் நாடுகளிலும் நாடகங்கள் நிகழ்த்தியிருக்கிறார்.

இலங்கை ரசிகர்கள் இவருக்கு ‘இலங்கை திலகம்’ என்று பட்டம் கொடுத்துள்ளனர். பம்பாயைச் சேர்ந்த சாகர் மூவிடோன் நிறுவனம் தயாரித்த, ‘குறத்தி  பாட்டும் நடனமும்’ என்ற நான்கு ரீல்களை மட்டுமே கொண்ட குறும்படத்திலும் நடித்துள்ளார். அது 1931ம் ஆண்டில் வெளியானது. குறும் படத்தில்  நடித்தவர் என்ற பெருமையும் இவருக்கே உரியது. பொதுவாகப் பெண் கல்வி, குழந்தைத் திருமண எதிர்ப்பு, கைம்பெண் மறு மணம் போன்ற கருத்துகள்  பரவலாக ஏற்றுக் கொள்ளப்படாத மரபு மீறிய கருத்து களாகவே கருதப்பட்டன. அக்காலத்தில் அதை மீறும் விதமாக நாவல் எழுதியதுடன்  சினிமாவாகவும் தயாரித்தார்.

கமலவல்லி பாத்திரத்தால் கவரப்பட்ட அவர் தமது ஒரே மகளுக்கும் கமலா என்றே பெயரிட்டுள்ள தும் கவனிக்கத்தக்கது. அத்துடன் சிசுக்கொலை  செய்யப்பட இருந்த ஒரு பெண் குழந்தையைக் காப்பாற்றி, ‘மல்லிகா’ எனப் பெயரிட்டு தன் வளர்ப்பு மகளாகவும் ஏற்றுக் கொண்டுள்ளார். இறுதியாகத்  தயாரித்த படத்தினால் பெரும் பண இழப்பினை சந்திக்க நேர்ந்த தால் பல சொத்துகளை விற்று ஈடு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அதுவே  அவரை நோயாளியாகப் படுக்கையிலும் தள்ளியது. டி.பி. ராஜலட்சு்மி தன் இறுதிக் காலத்தில் சென்னை கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரான் கார்டன் பகுதியில்  தன் மகள் கமலாவுடன் வாழ்ந்து வந்தார், 1964-ல் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாகக் காலமானார்.

டி.பி.ராஜலட்சுமி நடித்த படங்கள்

கோவலன்,  உஷா சுந்தரி, இராஜேஸ்வரி (மௌனப் படங்கள்), காளிதாஸ், ராமாயணம், வள்ளித் திருமணம், சத்தியவான் சாவித்திரி, திரௌபதி  வஸ்திராப ஹரணம், பக்த குசேலா, குலேபகாவலி, பூர்ணசந்திரா, சம்பூர்ண அரிச்சந்திரா, பாமா பரிணயம், மிஸ் கமலா, வீர அபிமன்யு, சீமந்தனி,  கௌசல்யா பரிணயம், நந்தகுமார், அநாதைப்பெண், சுகுண சரஸா, தமிழ் தியாகி, மதுரை வீரன், குமார குலோத்துங்கன், பக்த குமணன் அல்லது  ராஜயோகி, மாத்ருபூதம், உத்தமி, பரஞ்சோதி, ஜீவஜோதி, இதயகீதம்.

படங்கள்: ஸ்டில்ஸ் ஞானம்