நினைவாற்றலை அதிகரிக்கும் வல்லாரை...



வாசகர் பகுதி

*ஞாபக சக்தியை பெருக்கும் சக்தி வல்லாரை கீரைக்கு உண்டு. வல்லாரைக் கீரையில் சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, விட்டமின் A, C,  மற்றும் தாது உப்புக்கள் ஏராளமாக உள்ளது.

*ரத்தத்திற்குத் தேவையான மற்றும் மூளையை நன்றாக செயல்பட வைக்கும் ஊட்டச்சத்துக்களும் சரிவிகித அளவில் உள்ளது.

*வல்லாரை இலைகள் மூன்று, வாதுமை பருப்பு, பாதாம் பருப்பு, ஏலக்காய் தலா ஒன்று, மிளகு மூன்று, கற்கண்டு பத்து கிராம்  ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். அதை பாலில் கலந்து காலை மற்றும் மாலை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு  வந்தால் இதயம் தொடர்பான பிரச்னைகள் வராமல் பாதுகாக்கலாம்.

*கால் கிலோ புழுங்கல் அரிசியை ஊற வைத்து வடித்து, அதனுடன் ஒரு கைப்பிடி அளவு வல்லாரை இலைகள், ஐந்து மிளகு ஆகியவற்றை  சேர்த்து அரைக்கவும். உடன் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து, ரொட்டி போல் சுட்டு சாப்பிட்டால் படை, தோல் நோய்கள்,  அரிப்புகள் போன்ற பிரச்னைகள் சரியாகும்.

*வல்லாரை இலையைக் காய வைத்து அரை கிலோ அளவில் பொடித்துக் கொள்ளவும். உடன் 50 கிராம் சீரகப்பொடி, ஐந்து கிராம் மஞ்சள்  தூள் சேர்த்து சலிக்கவும். காலை, மாலை உணவுக்கு முன் இரண்டு கிராம் சாப்பிட்டு, சூடான பசும்பாலைக் குடித்து வந்தால், அறிவு  மேம்பட்டு, நினைவாற்றல் அதிகரிக்கும்.

*அரை லிட்டர் வல்லாரை இலைச்சாற்றில் கால் கிலோ வாய்விளங்கத்தை ஊற வைத்து, வெயிலில் உலர்த்தி, தூள் செய்து கொள்ளவும்.  காலை மாலை ஒரு கிராம் சாப்பிட்டு வந்தால், வலிப்பு, வயிற்றுப் பூச்சிகள், கிருமிக் கோளாறுகள் போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கும்.

*வல்லாரை இலையின் சாறு எடுத்து, அரிசித் திப்பிலியை அதில் ஊற வைத்து, காயவைத்து பொடித்துக் கொள்ளவும். நான்கு சிட்டிகை  பொடியை தேனில் குழைத்து தினமும் காலை மாலை சாப்பிட்டு வந்தால் கபநோய்கள், இரைப்பு மற்றும் இருமல் பிரச்னைகள் குணமாகும்.

-- கவிதா சரவணன், திருச்சி.