மாமனாரின் திருமண பரிசு!



டிசம்பர் 12ம் தேதி மும்பையில் நடக்க  இருக்கும் ஆடம்பர திருமணம் உலகையை உற்று பார்க்க வைத்துள்ளது. அது உலக  கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் வீட்டுத் திருமணம். முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும் பிரபல ரியல்  எஸ்டேட் அதிபரான, அஜய் பிராமலின் மகன் ஆனந்துக்கும் நடக்கும் இந்த திருமணத்தின் அழைப்பிதழ் வீடியோ இணையதளத்தில்  வைரலாக பரவி வருகிறது. அப்படி என்ன விசேஷம் அந்த பத்திரிகையில் என்கிறீர்களா?திருமணப் பத்திரிகையே ஒரு பெட்டி வடிவில்  உருவாக்கப்பட்டுள்ளது. நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட  இந்த அழைப்பிதழ் பெட்டியுடன் பரிசுகளும் வைக்கப்பட்டுள்ளதால் மிக ஆவலை  உருவாக்கியுள்ளது. ஒரு அழைப்பிதழின் விலை அதிகமில்லை தோழிகளே ஜஸ்ட் 3 லட்சம் ரூபாய் தானாம். கேட்டதும் தலை  சுற்றுகிறதா? அதில் உள்ள சிறப்புகளை பாருங்கள்.

பெட்டியின் முன் பக்கம் மணமக்களின் முதலெழுத்துக்கள் பதிக்கப்பட்டு இரண்டு அடுக்குகளாக உள்ளது. முதல் அடுக்கில் திருமண  அழைப்பிதழ் கடிதம். அதில் ஒரு பக்கம் வேத மந்திரங்கள், அடுத்தப்பக்கம் மணமகள் மற்றும் மணமகன் பாட்டிகளின் பிரத்யேக குறிப்பு  இடம் பெற்றுள்ளது. அதன் அருகே  திருமணத்தில் நடைபெறும் பல்வேறு சடங்குகளுக்கான விளக்கம் மற்றும்  சடங்குகள் நடைபெறும்  தேதி என பத்திரிகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.அழைப்பிதழின் அடுத்தப்பகுதியில் விருந்தினருக்கான பரிசுகள். இரண்டாவது அடுக்கை  திறந்தால் காயத்ரி மந்திரம் ஒலிக்கிறது. அதில் 4 சிறிய நகைப்பெட்டிகள் உள்ளது. அதில் விலை உயர்ந்த கற்களால் அலங்கரிக்கப்பட்ட  கடவுள்களின் சிலைகள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அடுக்கிலும் ஒரு நகை பரிசாக உள்ளது.டிசம்பர் 8 மற்றும் 9ல் உதய்ப்பூரில் கல்யாணத்திற்கு முன்பு இரண்டு வரவேற்பு  நிகழ்ச்சியும், டிசம்பர் 12ம் தேதி மும்பையில் பிரபலங்கள் கலந்துக்கொள்ளும் திருமணமும் நடக்கிறது.  இதை விட சிறப்பு அம்சமே  மாமனார் மும்பை தொழிலதிபர், அஜய் பிராமல், தன் வருங்கால மருமகளுக்கு, 452 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர பங்களாவை,  திருமண பரிசாக வழங்குகிறார். ஆனந்த் - இஷா தம்பதி  திருமணத்திற்கு  பின் வசிப்பதற்கு, மும்பையின் ஓர்லி பகுதியில், கடற்கரையை  ஒட்டியுள்ள ஆடம்பர பங்களா தான் இது.  

இந்துஸ்தான் லீவர் நிறுவனத்தின் பயிற்சி மையமாக இருந்த, இந்த 5 மாடி கட்டிடத்தை, 452 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார் அஜய்.  இதில் மூன்று பேஸ்மெண்ட்கள் உள்ளன. ஒரு அடித்தளத்தில், புல்தரை, திறந்தவெளி நீர் ஊற்று மற்றும் பல்நோக்கு பயன்பாட்டு அறைகள்.  மற்ற இரண்டு அடித்தளங்கள், கார் நிறுத்தம் மற்றும் இதர பயன்பாட்டுக்கு.   மேல் தளங்களில், வரவேற்பு அறை, சமையல் அறை,  படுக்கை அறைகள், உடை மாற்றும் அறைகள்  என பல்வேறு சொகுசு வசதிகள் உள்ளன. மற்றவற்றில் பணியாளர்கள் குடியிருப்புகள்  அமைக்கப்படுகின்றன. தன் வருங்கால மருமகளுக்கு அஜய் குடும்பத்தார் அளிக்கும் பரிசு தான் இந்த பங்களா. என்ன சொர்க்கத்தில்  இருப்பது போன்று உணர்கிறீர்களா. கண்ணை திறந்து பாருங்கள்.

- பா.கோமதி