கஃபே ஸ்டைலில் ஃபேமிலி உணவகம்!



உணவு என்பது   ஒருவரின் வயிற்றை மட்டுமில்லை... அவர்களின் மனதினையும் நிரப்ப வேண்டும். அதுதான் ஒரு முழுமையான உணவு. அப்படிப்பட்ட உணவிற்கு உலகளவில் பெரிய மார்க்கெட் உள்ளது. அதை புரிந்து கொண்டுள்ளார் சென்னையை சேர்ந்த ஜிங்கேஷ். 
சென்னை கீழ்ப்பாக்கத்தில் அமைந்துள்ள இவரின் சோல் கார்டன் உணவகத்தை அனைவரும் விரும்பக்கூடிய ஒரு முழுமையான உணவகமாக மாற்றி அமைத்துள்ளார்.

‘‘எனக்கும் உணவுக்கும் பெரிய அளவு சம்பந்தமில்லை. எங்களின் குடும்ப பிசினஸ் என்று பார்த்தால் ஸ்டீல் மற்றும் இரும்பு சம்பந்தமான பிசினஸ். அப்பா 60களில் குஜராத்தில் இருந்து சென்னைக்கு குடி பெயர்ந்தார். இங்கு சிறிய அளவில் முதலில் ஹார்ட்வேர் கடையினைதான் நடத்தி வந்தார்.

அதன் பிறகு அது அப்படியே ஸ்டீல் பிசினஸாக மாறியது. உணவுத் துறை சார்ந்த பிசினஸ் நாங்க செய்யவில்லை என்றாலும், எனக்கு அதில் மேல் இருந்த ஆர்வம்தான் தற்போது சென்னையில் மூன்று விதமான உணவகங்களை நிர்வகிக்க காரணம். ஆரம்பத்தில் எனக்கு உணவுத் துறையில் பெரிய அனுபவம் இல்லை என்பதால் முதலில் துவங்கிய அமெரிக்க உணவகத்தை என்னால் தொடர்ந்து நடத்த முடியவில்லை.

அந்த ேதால்வி எனக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்திருந்தது. அந்த அனுபவங்கள் கொண்டு துவங்கப்பட்டதுதான் சோல் கார்டன் என்ற உணவகம். முதலில் ஆழ்வார்பேட்டையில்தான் நான் இதனை துவங்கினேன். இது மல்டி குசன் உணவகம் என்பதால் சென்னையில் மட்டும் முதலில் நான்கு கிளைகள் ஆரம்பித்தேன். 

இங்கு வேகன் உணவுகளும் முதலில் வழங்கினேன். அதன் பிறகு அதனை மட்டும் தனியாக அமைக்க திட்டமிட்டு ஈகோ லைஃப் என்ற பெயரில் முழுக்க முழுக்க ஆரோக்கியம் சார்ந்த உணவுகள் மட்டுமே வழங்கக்கூடிய உணவகமாக மாற்றினேன். இதனைத் தொடர்ந்து முழுக்க முழுக்க ஃபாஸ்ட் ஃபுட் உணவகம் ஒன்றையும் துவங்கினேன்.

நான் முதலில் சோல் கார்டன் ஆரம்பித்த சில காலங்களில் கோவிட் பாதிப்பு ஏற்பட்டதால் அந்த உணவகத்தின் உணவுப் பட்டியலை முற்றிலும் மாற்றி அமைக்க திட்டமிட்டேன். ஆரம்பத்தில் மேகி, பர்கர், பீட்சா என கான்டினெட்டல் உணவுகள் மட்டும்தான் வழங்கி வந்தோம். அப்போதுதான் ஆரோக்கியத்திற்கு ஒரு உணவகமும் இளம் தலைமுறையினர் விரும்பும் ஃபாஸ்ட் ஃபுட்டிற்கு ஒரு உணவகம் இருப்பதால், இதனை அனைவரும் விரும்பும் உணவகமாக மாற்றி அமைக்க முடிவு செய்தேன்’’ என்றவர், தற்போது இங்கு வழங்கப்படும் உணவுகள் குறித்து விவரித்தார்.

‘‘கான்டினென்டல் மட்டுமில்லாமல் தென்னிந்திய மற்றும் வட இந்திய உணவுகளை கொடுத்தால் என்ன என்று தோன்றியது. காரணம், குடும்பமாக வந்து சாப்பிட வருபவர்கள் ஒவ்வொருவரும் ஒரு உணவினை விரும்புவார்கள். அதனால் இந்திய உணவுகளை இதில் அதிகமாக இணைத்திருக்கிறோம். 

அதில் பிளாடர் வகைகள், ஸ்சிஸ்லர்ஸ், ஜெலட்டோஸ் அறிமுகம் செய்திருக்கிறோம். மேலும் ஜெலட்டோஸ் நாங்களே இங்கு தயாரிப்பதால் அதில் பல வகையான ஐஸ்கிரீம்ஸ், சூரோஸ், வாஃபில் போன்ற டெசர்ட் வகைகளை கொடுக்கிறோம்எங்க உணவகத்தின் மிகவும் ஸ்பெஷல் சோர் டவ் என்று சொல்லக்கூடிய புளிக்கவைக்கப்பட்ட மாவு. இதில்தான் நாங்க பட்டர் நாண், பீட்சா போன்றவற்றை செய்கிறோம்.

பொதுவாக நாண் போன்ற உணவுகளை சூடாக சாப்பிட வேண்டும். கொஞ்சம் ஆறினாலும், மைதா என்பதால் சாப்பிடுவதற்கு மிகவும் கடினமாக மாறும். மேலும் டெலிவரிக்கு தரும் போது, பலர் அந்தப் பிரச்னையை சந்திக்கிறார்கள். அதற்கு மாற்று என்ன என்று சிந்தித்த போதுதான், மாவினை புளிக்க வைத்தால் என்ன என்று தோன்றியது. அவ்வாறு செய்யும் போது, அதன் கடினம் உடைந்து மிருதுவாகும். எளிதாக சாப்பிடவும் மற்றும் செரிமானத்திற்கும் உதவுகிறது. இது எங்களின் தனிப்பட்ட அறிமுகம் என்று சொல்லலாம்.

சில உணவுகளை சிறிய பைட்ஸ் போல் தருகிறோம். அதாவது, பானி பூரியினை கோன் வடிவில் செய்து அதற்குள் மசாலா மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் புதினா தண்ணீரை ஐஸாக்கி மசாலா மேல் வைத்து தருகிறோம். நாணையும் சிறிய அளவில் ரோல் போல் செய்து அதை தால் மக்கானியில் பிரட்டி சாப்பிடுவது போல் அமைத்திருக்கிறோம். சாப்பிடுவது எளிது என்பதால், பலர் குறிப்பாக இளம் தலைமுறையினர் ஒன் பைட் உணவினை அதிகம் விரும்புகிறார்கள்.

இவை தவிர சூப், சாலட், ஸ்டார்டரில் ஆரம்பித்து சாண்ட்விச், பீட்சா, பாஸ்தா, சாட் உணவுகள், டம்பிளிங்க்ஸ், பிளாட்டர் மற்றும் சிஸ்லர் வகைகள், ரைஸ் பவுல்கள், நார்த் இந்தியன் கிரேவி மற்றும் பிரெட் வகைகள், சைனீஸ்... இவை தவிர பிசிபெல்லாபாத் மற்றும் என் அம்மாவின் குருமா ரெசிபி, காராபூந்தி சேர்க்கப்பட்ட மோர், பில்டர் காபி என தென்னிந்திய உணவுகள் அனைத்தும் உள்ளது’’ என்றவர், இதனை கஃபே ஸ்டைலில் அமைத்திருந்தாலும் ஒரு குடும்பமாக அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுகளை மிகவும் கவனமாக தேர்வு செய்துள்ளார்.

‘‘நாம் என்னதான் பக்கம் பக்கமாக பல உணவுகளை வழங்கினாலும், பெரும்பாலானவர்கள் நாண், பனீர் மசாலா, பானி பூரி, நூடுல்ஸ், பனீர் டிக்கா போன்று அவர்கள் எப்போதும் சாப்பிடக்கூடிய உணவுகளைதான் விரும்புகிறார்கள். அதையே நாம் சுவையாகவும் வித்தியாசமாகவும் கொடுத்தால் கண்டிப்பாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என்பது தான் என் திட்டம். மேலும் இதனுடன் நாங்கள் ஈகோ லைஃப் உணவகத்தில் பலரும் விரும்பும் சில குறிப்பிட்ட உணவுகளை மட்டும் தனி மெனுவாக அறிமுகம் செய்திருக்கிறோம்’’ என்றார் ஜிங்கேஷ்.

செய்தி: நிஷா

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்