என்னுடைய வலிகள்தான் என் கவிதைகள்!



பகிரங்கமாக நான் அழவில்லை என்பதனால் எனது எல்லா வலிகளும் வேதனைகளும் முடிந்துவிட்டதாக அர்த்தம் இல்லை!!!

என தன்னுடைய வாழ்வின் வலிகளை எல்லாம் கவிதைகளாக எழுதி வருகிறார் சரோஜினி விபோகன். இலங்கை தமிழரான இவர் தமிழ்நாட்டிற்கு வந்து இலங்கை தமிழர்கள் முகாமில் வசித்து வருகிறார். இலங்கை தமிழர்களின் வாழ்வு நமக்கு மறைக்கப்பட்டதை போல இவருடைய கவிதைகளுக்கும் அதிகம் வெளிச்சம் கிடைக்கவில்லை. தன்னுடைய எழுத்துகளின் வழியாகவே தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் சரோஜினியிடம் பேசும் போது...

‘‘நான் இலங்கை தமிழர். நான் படிச்சு வளர்ந்ததெல்லாமே இலங்கை, திரிகோணமலையில் உள்ள ஒரு கிராமத்தில்தான். எனக்கு சின்ன வயதிலிருந்தே கட்டுரைகள், கவிதைகள் எழுதுவது

மிகவும் பிடிக்கும். 

அதற்காக பல பரிசுகளும் வாங்கியிருக்கேன். பள்ளிக்கு அடுத்து நான் கல்லூரிக்கு சென்று படிக்கல. பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் எனக்கு திருமணமாகிவிட்டது. என் கணவர் விபோகனும் நானும் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் இருக்கிறார்கள். 2006ம் ஆண்டில் இலங்கையில் போர் காலம். அதனால் எங்களால் அங்கு இருக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

அதனால் அங்கிருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்தில் நாங்க தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரத்திற்கு வந்துவிட்டோம். நான் இலங்கையை விட்டு வெளியே வரும் போது எனக்கு வயது 25. என் மகனுக்கு 5 வயது. கைக்குழந்தையாக மகள் என இருந்தபோது அவ்வளவு காலமும் நான் இருந்த அந்த நாட்டையும் நான் பேசி சிரித்த மக்களையும் நான் வளர்ந்த மண்ணையும் விட்டு விட்டு வேறொரு நாட்டிற்கு அகதியாக வந்து சேர்ந்தேன். 

ராமேஸ்வரத்திற்கு ஒரு இரவில் வந்து சேர்ந்தோம். அங்கு எங்களை விசாரித்து விட்டு மண்டபம் முகாமிற்கு எங்களை அழைத்து சென்றனர். அங்குதான் எனக்கு இன்னொரு வாழ்க்கை தொடங்கியது’’ என்றவர் தான் வளர்ந்த கதையையும் தன்னுடைய கவிதைகள் குறித்தும் பேசத் தொடங்கினார்.

‘‘மண்டபம் முகாமிற்கு வந்ததும் என் கணவர் அங்கு கிடைக்கும் வேலைகளுக்கு செல்வார். ஆரம்பத்தில் 10க்கு 10 அறையில் தான் நாங்க நால்வரும் எங்களுடைய வாழ்க்கையை தொடங்கினோம். கூலி வேலைகள் என்பதால் தினசரி வேலை இருக்கும் என்று சொல்ல முடியாது. அப்போது என் கணவருக்கு ஒரு நிறுவனத்தில் வேலை  கிடைத்தது. ஆனால் அவர் அங்கு தங்கி இருந்து வேலை பார்க்க வேண்டும். வாரத்திற்கு ஒரு நாள்தான் வீட்டிற்கு வருவார். நான் குழந்தைகளை பார்த்துக் கொண்டு வீட்டில் இருந்தேன்.

செலவு போக சேமித்த பணத்தில் நாங்கள் ஒரு தேநீர் கடை ஒன்றை தொடங்கினோம். அந்தக் கடையை நான் பார்த்துக் கொண்டேன். என் கணவர் வேலைக்கு சென்று விடுவார். கேட்க நன்றாக இருந்தாலும் அகதியாக வேறு நாட்டில் வாழ்வதென்பது கொடுமையானது. எந்த ஒரு உரிமைகளும் எங்களுக்கு கிடையாது. எங்களின் உழைப்பை மட்டுமே நம்பி வாழ வேண்டிய சூழலில்தான் எங்களின் வாழ்க்கைப் பயணம். எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்த நேரத்தில்தான் 2019ல் என் கணவர் இறந்துவிட்டார்.

அவரின் இழப்பு என்னை மிகவும் பாதித்தது. பல கஷ்டங்களையும் அவரின் துணையுடன்தான் கடந்து வந்தேன். திடீரென அவர் இல்லாமல் போனது என்னை இழந்தது போல ஒரு நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியது. நான் எனக்குள்ளேயே முடங்கிப் போனேன். என்ன செய்வதென்றே தெரியவில்லை. 

எனக்குள் இருந்த வலியெல்லாம் வெளியே சொல்ல முடியாமல் தவித்தேன். அந்த வலியினை எழுத்துக்களால் வெளிப்படுத்த ஆரம்பித்தேன். அது எனக்குள் இருந்த சொல்ல முடியாத அழுத்தத்தை போக்கியது. தொடர்ந்து கவிதைகளை எழுதத் தொடங்கினேன்’’ என்றவர் அதனை புத்தகமாக வெளியிட்டது குறித்து கூறினார்.

‘‘நான் எழுதிய கவிதைகளை என் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டேன். பலரும் படித்துப் பாராட்டினார்கள். ஆனால் ஒரு சிலர் என் வரிகளை அவர்கள் எழுதியது போல் தங்களின் பக்கத்தில் பதிவு செய்தார்கள். 

அதுகுறித்து கேட்ட போது, சமூக வலைத்தளம் என்பது பொதுவெளியானது. அதனால் அதனை நான் எடுத்துக் கொண்ேடன் என்றார்கள். என்னை ஆசுவாசப்படுத்திய அந்தக் கவிதைகளை வேறொருவர் தவறாக பயன்படுத்தியது எனக்கு வலியை தந்தது. நான் எழுதிதான் என்னை நான் மீட்டெடுத்தேன்.

இந்த சுரண்டலை நீக்க என் கவிதைகளை புத்தகமாக வெளியிட்டால்தான் சரியாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் புத்தகமாக வெளியிடுவதற்கான பொருளாதார நிலையில் நான் இல்லை. ஆனாலும் நான் எழுதுவதை நிறுத்தவில்லை. தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்தேன். என் பக்கத்திலும் பதிவு செய்தேன். 

என் கவிதைகளை படித்த ரசித்து அவர்கள் என்னை பாராட்டி என் கவிதைகளை புத்தகமாக வெளியிட வேண்டும் என்று என்னிடம் கூறினார்கள். ஆனால் அதற்கான போதிய நிதி என்னிடம் இல்லை என்று நான் கூறவும், அதற்கான உதவிகளையும் செய்து கொடுத்தார்கள். அவர்கள் கொடுத்த ஆதரவினால் என் கவிதைகளை தொகுத்து தயார் செய்தேன்.

முதல்    கட்ட கவிதை களை ‘காற்றின் மொழியின் கவிதைகள்’ என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டேன். அந்தப் புத்தகம் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்து ‘கார்கால கனவுகள்’ என்கிற பெயரில் இன்னொரு கவிதை தொகுப்பு புத்தகத்தை எழுதி வெளியிட்டேன். என் நாட்டை விட்டு வெளியே வந்து எல்லாவற்றையும் இழந்து ஒவ்வொன்றையும் பல போராட்டத்திற்குப் பிறகு தான் பெற்றிருக்கிறேன். பல ஆண்டுகள் இந்த மண்ணில் வாழ்ந்தாலும் இன்றும் நாங்க எந்த உரிமைகளும் பெற முடியாத நிலையில் அடையாளமற்றுதான் இருக்கிறோம். இந்த வாழ்க்கைப் பயணத்தை எழுத வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது’’ என்றார் சரோஜினி விபோகன்.

மா.வினோத்குமார்