சிறுகதை-தொடராத கதை இது!
தோளில் தொங்கிய பையுடன், சூட்கேசையும் கையில் இழுத்துக் கொண்டு பிளாட்ஃபார்மில் நடக்கும் ேபாது… வாழ்க்கையையே கட்டி இழுத்துப் போவது போல பாரமாக இருந்தது. “வசு”...ஸ்டேஷனில் கலவையான எல்லா சப்தங்களையும் தாண்டி திடீரென்று என் பின்னால் ஒலித்த அந்தக் குரல்… என்னையும் அறியாமலேயே கண்களில் பொங்கிய நீரைக் கட்டுப்படுத்திக் கொண்டு, மனோகரைப் பார்த்து,“ஓ…. ஐ அம் ஆல்ரைட்…. எப்படி இருக்கீங்க மனோ?” என்றேன்.
‘‘டிரெயினிங்கா?’’‘‘ம்… ஒரு வாரம்.”“ரொம்ப இளைச்சுட்டே வசு. உடம்பைக் கவனிச்சிக்கறதே இல்லையா? மைத்தி எப்படி இருக்கா? இஸ் ஷீ ஹாப்பி?”
அவர் கேட்டுக் கொண்டே நடக்க, நான் மௌனமானேன். நிமிர்ந்து அவரைப் பார்க்கும் துணிவு என்னிடம் எப்போதோ காணாமல் போயிருந்தது. பாதியில் முறித்தது நீதானே? என்று அலறியது மனது. ‘‘நீங்க… இங்கே…”‘‘நேத்து லலிதாவோட பொண்ணு ப்ரியாவோட வீடு கிரகப் ப்ரவேசம்… லல்லியை டிரைன் ஏத்தி விட்டுட்டு வரேன்.. நீ சாப்பிட்டியா?
பழம் ஏதும் வாங்கிட்டு வரவா? தண்ணி இருக்கா?”“இருக்கு… நீங்க வேணாக் கிளம்புங்க...’’ “டிரெயின் கிளம்பட்டும் வசு...’’ ‘‘புவனா, ப்ரகாஷ், ப்ரதீப் எல்லாம் நல்லா இருக்காங்களா?’’ ‘‘ப்ரகாஷ் எம்.எஸ். பண்றான். புவனா நல்லா இருக்கா. ப்ரதீப் ஃபைனல் இயர்.”
ரயில் கிளம்பியது. ஒரு வேகத்துடன் கூட வந்த மனோ, “வசு, உடம்பைப் பார்த்துக்கோ… வேலை வேலைன்னு ஓடிட்டே இருக்காதே… ஓகே…” நான் தலையசைத்தேன். “பை மனோ” என்று கை அசைத்த போதே கலங்கிய கண்களில் மங்கலான பிம்பமாய்த் தெரிந்தது மனோவின் உருவம். அப்படியே சாய்ந்து கண்களை மூடிக் கொண்டேன்.
‘‘லல்லி… லலிதா…’’ மனோவின் ஒரே தங்கை.
‘‘ஒரு புடவையை அவளுக்குத் தந்து விட்டாரே என்ற கோபத்தில் விருட்டெனக் கிளம்பி உடனே அம்மா வீட்டுக்கு ஓடி வந்துவிட்டேன்.’’“எனக்குன்னு ஆசையா வாங்கிட்டு வந்தாரும்மா… அவ நல்லாருக்குன்னதும் அப்படியே தூக்கிக் கொடுத்துட்டார்.” “அவ்வளவுதானேம்மா… உனக்கு வேறே எடுத்துத் தருவாரா இருக்கும்...’’ அப்பா பொறுமையாய் பேச…
‘‘அப்போ இவளை விட தங்கைதானே உசத்தியாப் போயிட்டா அவருக்கு.. இப்படில்லாம் வரும்னு முன்னாடியே தெரியும் எனக்கு…” என்று அம்மா எனக்கு ஆதரவாகப் பேசியதும் அந்த வலையில் அப்போது விழுந்தவள்தான்… ‘‘வசு… இதெல்லாம் சின்ன விஷயம்டா…” அப்பா என் அருகில் உட்கார்ந்து அன்புடன் சொன்ன எதுவும் என் காதில் ஏறவில்லை. மனோ வீட்டில் எப்போதும் எனக்கே முதலிடம் இருக்க வேண்டும் என்ற என் எதிர்பார்ப்புக்கு மாறாக எது நடந்தாலும் உடனே அம்மாவிடம் புலம்ப ஆரம்பித்து விடுவேன்.
“நான் பார்த்திருந்த பையன் வீட்டுக்கு ஒரே பிள்ளை. ஒரு பிடுங்கல் கிடையாது. நீ நம்ம வீட்டில இருந்த மாதிரியே ராணி மாதிரி இருக்கலாம்… எத்தனை தடவை சொன்னேன்
உன் காதிலே ஏறவேயில்லை.
உலகத்தில இல்லாத அதிசயமான பிள்ளைன்னு இவரைத்தான் கட்டுவேன்னு பிடிவாதம் பிடிச்சே. அவங்க வீட்டுக்கு உன் பணம் வேணும்… அதுக்குத்தான் இந்தக் கல்யாணமே… பணம் இல்லைன்னா தங்கச்சிக்கு இவ்வளவு பெரிய இடம் பார்த்திருப்பாங்களா..?’’அம்மா பேசிக் கொண்டே போக. அப்பா வேகமாக வந்தார். “பொண்ணுக்கு நல்லதை எடுத்துச் சொல்லலைன்னாலும், இப்படி அவ மனசைக் கெடுக்காதே. நான் மாப்பிள்ளை கிட்டே, லல்லி கல்யாணத்துக்குப் பணம் ஏதும் வேணுமான்னு கேட்டப்போ, இல்லை மாமா, நிறையவே இருக்குன்னுட்டார்...’’ ஒரே பெண் என்று வீட்டில் செல்லம். நினைத்தது உடனே நடந்துவிடும். அப்பா கொஞ்சம் யோசித்தாலும், அம்மா விட மாட்டாள். ஒரு புடவை எடுக்கக் கடைக்குப் போய், அதை மட்டும் எடுத்ததாய் சரித்திரமே இல்லை.மனோவிடம் என் மனம் விழுந்ததும், அவரும் என்னிடம் இதையேதான் சொன்னார்.
“வசு, உன் வீடு மாதிரி, ஒரு டிரஸ் எடுக்கப் போயிட்டு, நாலு வாங்கற வீடு இல்லை எங்க வீடு. வீட்டு லோன் இன்னும் முடியலை. லல்லி கல்யாணம் இருக்கு. இப்போ நம்ம கல்யாணம் நடந்தா நீ கொஞ்சம் எங்க வீட்டில அட்ஜஸ்ட் பண்ணணும். ஒரு ரெண்டு மூணு வருஷம் போனா’’ அவரை முடிக்க விடவில்லை.“ஸ்டாப்… ஸ்டாப்... இன்னும் ரெண்டு மூணு வருஷமா… எங்க வீட்டில என்னை விடவே மாட்டாங்க..
நீங்க எப்பவும் என் பக்கத்திலேயே இருப்பீங்களே அது போதும்…” என்று மனோவின் தோளில் சாய்ந்து கொண்டு சொன்ன போது, காதல் வேறு, கல்யாண வாழ்க்கை வேறு என்ற வாழ்க்கைத் தத்துவம் அப்போது எனக்குப் புரிபடவில்லை. மனோவைப் பார்த்துப் பேசியதும் அப்பாவுக்குப் பிடித்து விட, அம்மாதான் புலம்பிக் கொண்டே இருந்தாள். ஆனாலும் அவர்களுக்குள் எவ்வளவோ அட்ஜஸ்ட் செய்து கொண்டு எனக்கு செய்ய வேண்டியதை எல்லாம் பார்த்துப் பார்த்துதான் செய்தார்கள். “வாம்மா… நீயும் சேர்ந்து சாப்பிடு’’ என்று மனோவின் அம்மாவும், லல்லியும் கூப்பிட்டால் கூட அவர்களுடன் என்னால் ஒட்ட முடியவில்லை. நான் கற்பனை செய்திருந்த உலகத்தில், நானும் மனோவும் மட்டுமே… அவருக்கு கடமைகளும், பொறுப்புகளும் உண்டு என்பதை என் மனம் ஏற்க மறுத்தது.இப்போது நினைத்தால்… “சே... இதற்காகவா மனோ என்கிற பொக்கிஷத்தை
தூக்கி எறிந்தேன் என என்னையே நொந்து கொண்டேன்.
‘‘நீ இன்னும் சின்னக் குழந்தை இல்லை. இங்கே உனக்கு என்ன குறை வசு? உனக்கு உன் அம்மாவைப் பார்க்கணும்னா போயிட்டு வா.. ஆனா, இங்கே நடப்பதை அப்படியே ஒப்பிக்கணும்னு போகாதே... உட்கார்ந்து பேசினாலே எல்லாம் சரியாயிடும்”-மனோ சாதாரணமாகச் சொன்னாலும்… அவரிடம் உடனே கோபமாய்க் கத்துவேன்…
லல்லிக்குக் கல்யாணப் பேச்சு வந்ததும். அம்மா சொன்னதைக் கேட்டுக் கொண்டு, என் நகைகளை மனோவிடம் கேட்காமல் அம்மாவிடம் கொடுத்து வைத்தது தெரிந்து அன்று விழுந்த விரிசல்… பெரிதாய்க் கொண்டே போக… ஊசலாடிக் கொண்டிருந்த எங்கள் உறவு ஒரு நாள் பட்டென அறுந்து போனது.
தனிக் குடித்தனம் என்றால்தான் என் மகளை விடுவேன் என்ற பிடிவாதத்துடன் அம்மா இருக்க, நானும் அதையே பிடித்துக் கொண்டேன். அப்பாவின் மறைவிற்கு பிறகு அம்மா என்னைப் பற்றிக் கவலைப்பட ஆரம்பித்த போது, மனோ டிரான்ஸ்ஃபர் வாங்கிக் கொண்டு வேறு ஊருக்குப் போய்விட்டார். அவர் வீட்டிலும் அவருக்கு சொந்தத்தில் இருந்த புவனாவைக் கல்யாணம் பண்ணி வைத்ததும், ப்ரகாஷ், ப்ரதீப் பிறந்ததும் அம்மாவும், நானும் கொஞ்சமும் எதிர்பாராதது. அதன்பின் அம்மா எத்தனை சொல்லியும், கெஞ்சியும் நான் இன்னொரு கல்யாணத்துக்கு மறுத்துவிட்டேன். அம்மாவிற்கு பிறகு மைத்தி, ஆபீஸ், வீடு என்ற சின்ன வட்டத்துக்குள் என் வாழ்க்கை சுழல ஆரம்பித்தது. எதிர்பாராமல் நானும், மனோவும் சந்திக்கும் அந்த நிமிடங்களில், நான் தடுமாறிப் போவேன்.
மனோவிடம் பேசினால், உடைந்தே போய் விடுவேன் என்ற பயத்தால், அவரிடம் பேசுவதைத் தவிர்த்தேன். அழகான அவர் குடும்பத்தில் என்னால் குழப்பம் வரக்கூடாது என்பதும் ஒரு காரணம். ‘‘மைத்தி சந்தோஷமாக இருக்கிறாளா?’’ மனோவின் குரலில் எத்தனை அக்கறை?
“ரொம்ப சந்தோஷமாக இருக்கிறாள்” என்ற பதிலைத் தவிர அவரிடம் எதைச் சொல்வது? கல்யாணம் ஆன இந்த ஒரு வருடத்தில், “அம்மா, இந்த அஷ்வின் நான் நினைச்ச மாதிரி இல்லைம்மா என்று சொல்லிக் கொண்டு வருபவளைப் பார்க்கும் போது வசுவாக வந்து விடுவாளோ என்று பயமாக இருக்கிறது” என்று அவரிடம் சொல்ல முடியாத என் நிலையை யாரிடம் சொல்வது?
வீடு வந்ததும், வந்து விட்டேன் என்று மைத்திக்கு ஒரு மெசேஜ் அனுப்பி விட்டு காலையில் சீக்கிரமாகவே ஆபீஸ் போய்விட்டேன்.“ஏய் வசு, என்ன ஆச்சு? முகமே சரியில்லை. மைத்தி பேசினாளா என்ன?”
“மீரு… டிரெயினிங் முடிச்சுட்டு வரப்போ நேத்து ஸ்டேஷன்ல்ல மனோவைப் பார்த்தேன்…” மீரா சாப்பிடுவதை நிறுத்திவிட்டாள். என் கையைப் பிடித்து “ஒரு நாலு வருஷமாவது இருக்கும்ல நீ அவரைப் பார்த்து? எப்படி இருக்கார்?
நீ பேசினியா?” “ம்… அவர் ரொம்ப நல்லவர் மீரா. நல்லா இருக்கார்…” “நீயும் நல்லவதான் வசு. உங்க ரெண்டு பேருக்கும் நடுவில இந்தப் பிரிவு வந்திருக்கவே வேண்டாம்…”மைத்தி ரொம்ப சந்தோஷமா இருக்கான்னு மனோ கிட்டே சொன்னேன் மீரா. அவளும் அவ அம்மா மாதிரியே மாப்பிள்ளை கிட்ட கோபிச்சுட்டு, அம்மா வீட்டுக்கு ஓடி ஓடி வரான்னு எப்படி அவர் கிட்டே சொல்வேன்? இப்போ கூட எங்கே அவ ஃபோன் வந்துடுமோன்னு பயந்துட்டேதான் இருக்கேன்.நான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, மைத்தியின் ஃபோன்.
“வசு, நீ எடுக்காதே... என்ன பண்றான்னு பார்க்கலாம்… எனக்கு போன் செய்வா… நான் பார்த்துக்கறேன். நீ முதல்ல சாப்பிடு... ”மீராவின் ஃபோன் இப்போது அலற ஆரம்பித்தது. “மைத்தி, அம்மா இன்னிக்கு வந்ததும், வேற ஒரு பிராஞ்சுக்கு டெபுடேஷன் போட்டுட்டாங்க. அங்கே முடிச்சுட்டு அப்படியே வீட்டுக்குப் போயிடுவேன்னா எப்படியும் எட்டு ஒன்பது மணியாகிடும். காலையிலேயே ரொம்ப டயர்டா இருந்தா... நாளைக்கு வேணாப் பேசு...”வைத்துவிட்டாள்.
‘‘என்னன்னு தெரியலை. உடனே உன்னைப் பார்க்கணும். உங்கிட்டே பேசணுங்கறா... படபடன்னு பேசறா… நிச்சயமா மைத்தி எத்தனை மணியானாலும் இன்னிக்கு வீட்டுக்கு வரப்போறா... என்ன பிரச்னைன்னு தெரியலை. நான் இன்னிக்கு அங்கே வரேன் வசு. அவகிட்டே பேசுவோம். இப்படியே விட முடியாது. எத்தனை நேரமானாலும் பரவாயில்லை...”‘‘தேங்க்ஸ் மீரா. மனோவைப் பார்த்ததிலிருந்து எனக்கு என்னவோ ரொம்ப கில்டியா இருக்கு.
யாராவது பக்கத்தில வேணும் போல இருக்கு. ஜஸ்ட் டு ஷேர் மை ஃபீலிங்க்ஸ்…’’‘‘இந்த மாசத்திலேயே இது ரெண்டாவது தடவை மீரா. இவ இப்படி வர்றது அஷ்வின் ஹி இஸ் எ ஜெம்... மனோ மாதிரியே…”‘‘ஏய் வசு, எமோஷன் ஆகாதே… இப்போதைக்கு இதை மறந்துட்டு, வேலையை பார்ப்போம். எல்லாம் வீட்டில போய்ப் பேசிக்கலாம். வேலை முடிந்து நானும் மீராவும் வீட்டுக்குப் போன போது, நல்ல வேளையாய் மைத்தி வந்திருக்கவில்லை. ஊரில் இருந்து கிளம்புறப்போ, நான் அஷ்வின் கிட்டே பேசினேன்.’’
’’ஆன்ட்டி… எனக்கு அவளை நல்லாத் தெரியும். நீங்க கவலைப்படாதீங்க. அவகிட்டே எந்த அட்வைஸும் பண்ணாதீங்க… அவ சொல்றதைக் கேட்டுக்கோங்க… அவ்வளவுதான்… நான் பார்த்துக்கறேன். டேக் கேர் ஆன்ட்டி…’’ ரொம்பத் தெளிவாப் பேசினாரு தெரியுமா… இதையே மனோவும் அப்பாவும் அப்போ சொன்னபோது என் மனசில பதியலை.
“ெடன்ஷன் ஆகாதடா… வசு... நான் பார்த்துக்கறேன் அவளை. அஷ்வின் இல்லாம இங்கே வரமாட்டேன்னு அவளே சொல்வா பாரு...”‘‘நீ சொல்றது அப்படியே நடக்கட்டும் மீரா...’’‘‘அவரை விட்டு விலகிப் போனா தேடி ஓடி வந்துடுவார்… நான் வேணும்னா அவராவே வரணும்னு பைத்தியம் போல அப்போ நினைச்சேன் மீரு...’’‘‘இப்போ மைத்தியும் என்னை மாதிரியே பண்ணும் போது… என்னை மாதிரியே அவளும் தனியா ஆகிடுவாளோன்னு பயமா இருக்கு…” நான் அழ ஆரம்பித்தேன். வாசலில் கார் சத்தம்.
‘‘ஏய் வசு, மைத்திதான்… நீ இரு நான் பார்க்கிறேன்…’’ “வசு, இங்கே வா… சீக்கிரம் இதைப்பாரு…’’ என்று அவள் கத்தியதில் நான் பதறி அடித்துக் கொண்டு ஓட, மீரா கையில் ஒரு பேப்பரைப் பிடித்துக் கொண்டிருந்தாள், அவள் முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு... நான் அவசரமாய் அவள் கையிலிருந்து அந்த பேப்பரைப் பிடுங்க…
“மை டியர் அம்மா…
நீ உன் ஃபிரெண்ட் கிட்டே பேச ஆரம்பிச்சதுமே நான் வந்துட்டேன். கவலையே படாதே. என் வாழ்க்கை ஒரு புள்ளில ஆரம்பிச்சு அதே புள்ளிக்குத் திரும்பி வந்து முடிஞ்சு போற வட்டமா இருக்காது. அந்த வட்டத்தை கோடாக மாற்றி நானும், அஷ்வினும் சுகமாக கை கோர்த்துப் போயிட்டே இருப்போம்… இப்போ கிளம்பறேன்.
அப்புறமா நானும் அஷ்வினும் வரோம்… இனிமே உன் வீட்டுச் சாவி எனக்கு வேண்டாம்… வீட்டைத் திறந்துட்டு ஒருத்தி வர்றது கூடத் தெரியாம ரெண்டு பேரும் பேசிட்டிருக்கீங்க… வெரி பேட்… மீரா ஆன்ட்டி… உங்களுக்கும்தான்...’’ பாட்டி சொல்லிச் சொல்லி ஒரு அரக்கன் போல என் மனதில் பதிந்துவிட்ட என் அருமை அப்பாவை, நான் ஒரு தடவையாவது பார்க்கணும்… பார்க்கலாமா… அஷ்வினோட ப்ளீஸ்… லவ் யு மா… தமிழில் ஏகப்பட்ட பிழைகளுடன் இருந்த மைத்தியின் கிறுக்கல் கையெழுத்தை ஒரு புதையலைப் போலவே பரவசத்துடன் நான் மறுபடி மறுபடி பார்த்துக் கொண்டிருக்க… என் கண்களில் வழிந்த நீரை மீரா வாஞ்சனையுடன் துடைத்தாள்.
யசோதா சுப்ரமணியன்
|