புதிய கண்டுபிடிப்புகள்



சில வருடங்களுக்கு ஒரு முறை புதிய கண்டுபிடிப்புகள் வந்து மக்களின் வாழ்க்கையையே தலைகீழாக புரட்டிப்போடும். உதாரணமாக இன்டர்நெட், ஸ்மார்ட்போன், சமூக வலைத்தளங்கள், ஸ்ட்ரீமிங் வீடியோவைச் சொல்லலாம். இதுபோல இந்த வருடம் நம் வாழ்க்கையைப் புரட்டிப்போடும் கண்டுபிடிப்பு கள் வெளிவரலாம் என்கின்றனர் நிபுணர்கள். அந்தக் கண்டுபிடிப்புகள் என்னென்ன என்பது பற்றிய தகவல்கள் கூட இணையத்தில் கசிந்துள்ளது. அவற்றைப் பார்ப்போம்.

5ஜி

நெட்வொர்க் துறையில் மிகப்பெரிய பாய்ச்சலை உருவாக்கப்போகிறது 5ஜி. போன வருடமே 5ஜி குறித்த அறிவிப்புகள், விளம்பரங்கள் வெளிவந்தாலும் இன்னும் முறையாக அனைத்து வகையான மக்களையும் இது சென்றயடையவில்லை. இந்த வருடத்தின் இறுதிக்குள் 5ஜி பரவலாகக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படிக் கிடைத்தால் ஒரு திரைப்படத்தைக்கூட சில நொடிகளில் டவுன்லோடு செய்யலாம்.

ஸ்மார்ட் ஊசி

மனிதகுலத்துக்கு முக்கிய எதிரியாக இருப்பது புற்றுநோய். மருத்துவமும் அறிவியலும் அனைத்து வகையான புற்றுநோய்களையும் முழுமையாக குணப்படுத்த போராடி வருகின்றன. தவிர, புற்றுநோய் தீவிரமடைந்த பிறகே பலரும் சிகிச்சை எடுக்க வருகின்றனர்.

புற்றுநோய் இருக்கிறதா என்று சோதனை செய்யப்போனால் பயாப்ஸி, அந்த டெஸ்ட், இந்த டெஸ்ட் என்று ஒரு வாரமாவது காத்திருக்க வேண்டியிருக்கிறது. இந்த நிலையில் புற்றுநோய் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள சில நிமிடங்களே போதும். இதற்காகவே பிரத்யேகமாக ஒரு ஸ்மார்ட் ஊசியை வடிவமைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த ஊசி வந்துவிட்டால் புற்று நோயைக் கண்டறியும் சோதனை வெகு எளிதாகிவிடும்.

பிளாஸ்டிக் எரிபொருள்

உலகளவில் அதிகமாக வீணாவது பிளாஸ்டிக் குப்பைகள்தான். இதனால் சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்லாமல் அனைத்து வகையான உயிரினங்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் பிளாஸ்டிக் குப்பைகளை மறுசுழற்சி செய்து அதிலிருந்து பெட்ரோல் தயாரிக்க முடியுமா என்று பல நிறுவனங்கள் சோதனை செய்து வருகின்றன.

இந்தச் சோதனையில் சில நிறுவனங்கள் வெற்றியும் அடைந்துள்ளன. ஆனால், பிளாஸ்டிக் குப்பையிலிருந்து தயாரிக்கப்படும் பெட்ரோல் மக்களின் பயன்பாட்டுக்கு வரும்போது இந்தக் கண்டுபிடிப்பு மனித குலத்துக்கே முக்கியமானதாக இருக்கும்.