மெகா கேமரா போன்



கொரோனாவின் பிடியில் உலகமே தத்தளித்துக்கொண்டிருந்தாலும் சீனாவில் இன்னும் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துவது தடையில்லாமல் அரங்கேறி வருகிறது.
அப்படி சமீபத்தில் வெளியான ‘ஷியோமி’ நிறுவனத்தின் ‘மீ 10’ என்ற மாடல் சமூக வலைத்தளங்களிலும், கேட்ஜெட்ஸ் பிரியர்களிடையேயும் பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கிறது. இதிலுள்ள அம்சங்கள் நாளைய ஸ்மார்ட்போன்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறது என்று வாடிக்கையாளர்கள் சொல்கிறார்கள். இந்தப் போனில் அப்படி என்னென்ன அம்சங்கள் இருக்கின்றன என்பதைப் பார்ப்போம்.

மெலிதான வடிவமைப்பு நம்மை வசீகரிக்கிறது. குறைந்த எடை இதன் சிறப்புகளில் ஒன்று. 6.67 இன்ச்சில் ஃபுல் ஹெச்.டியில் AMOLED மெகா டிஸ்பிளே,  காட்சிகளின் துல்லியத் தன்மைக்கு 1080 X 2340 பிக்ஸல் ரெசல்யூசன், 8 ஜிபி மற்றும் 12 ஜிபி என இரண்டு வகையான ரேம்கள், 128 ஜிபி, 256 ஜிபி என இரண்டு வகையான ஸ்டோரேஜ்கள், 108 எம்பியில் முதன்மை கேமரா பளிச்சிடுகிறது, இதனுடன் 13 எம்பியில் இரண்டாவதாக ஒரு கேமரா, 2 எம்பியில் இரண்டு கேமராக்கள்  என நான்கு பின்புற கேமராக்கள் அசத்துகின்றன.

இதுபோக 20 எம்பியில் செல்ஃபி கேமரா, நீண்ட நேரம் தொடர்ந்து சார்ஜ் நிற்க 4780mAh பேட்டரி திறன் என கெத்து காட்டுகிறது மீ 10. சீனாவில் இதன் விலை ரூ.42,400-லிருந்து ஆரம்பிக்கிறது. இந்தியாவில் அறிமுக சலுகையுடன் மார்ச் 31 முதல் ப்ரீ ஆர்டர் செய்யலாம்.