பாலியல் அடிமை டூ நோபல் பரிசு!



எஸ்ஐஎஸ் பயங்கர வாதிகளுக்குப் பாலியல் அடிமை, தப்பிக்க முயன்றால் பல மணி நேர கூட்டு வன்புணர்வு மற்றும் சாட்டையடி, சிகரெட்டில் உடல் முழுவதும் சூடு, தனிமைச் சிறை, ஒரு வேளை மட்டுமே உணவு... இப்படி வெளியில் சொல்ல முடியாத பல கொடுமைகளைச் சந்தித்த ஒரு பெண் என்ன செய்வாள்? தற்கொலை செய்துகொள்வாள் அல்லது பைத்தியமாகிவிடுவாள்.

ஆனால், தன்னம்பிக்கைச் சுடராக மிளிர்கிறார் நாடியா முரத். ஆம்; 2018ம் வருடத்துக்கான அமைதிக் கான நோபல் பரிசை மருத்துவர் டெனிஸ் முக்வேஜேவுடன் சேர்ந்து வென்றிருக்கிறார்  நாடியா.

ஈராக்கில் உள்ள ஒரு குக்கிராமத்தில் பிறந்த நாடியாவின் தந்தை ஒரு விவசாயி. 2014ல் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளின் அமைப்பு அவரின் கிராமத்தைச் சுற்றி வளைத்து சரமாரியாக துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்தியது.

அதில் நாடியாவின் 6 சகோதரர்கள் உட்பட சுமார் 600 பேர் பலியானார்கள். அத்துடன் அங்கிருந்த மூவாயிரத்துக்கும் மேற்பட்ட இளம் பெண்களைத் தங்களது பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகக் கடத்திக்கொண்டு போய்விட்டது ஐஎஸ் ஐஎஸ். அப்படிக் கடத்தப்பட்டவர்களில் ஒருவர்தான் நாடியா.சிறைமுகாமிற்கு அருகிலிருந்தவர்களின் துணையுடன் மூன்று மாத பாலியல் அடிமை வாழ்க்கையிலிருந்து நாடியா தப்பித்தது தனிக்கதை.

பயங்கர வாதிகளுக்குப் பயந்து வட ஈராக்கிலிருந்த அகதிகளின் முகாம் மற்றும் பழைய கன்டெய் னர்களில் தங்கி தன் னைக் காப்பாற்றிக்கொண்ட நாடியாவுக்கு ஜெர்மனி அரசின் அகதிகள் முகாம் அடைக்கலம் தந்தது. அங்கே, தனக்கு நிகழ்ந்த கொடுமைகளை வெளிப்படையாக ஒரு பத்திரிகைக்கு நாடியா நேர்காணல் தர, உலகமே அதிர்ந்தது.

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளின் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் வெளிச்சத்துக்கு வர முக்கிய காரணமே அந்த நேர்காணல்தான். நல்லெண்ணத் தூதுவராக அவரை ஐநா நியமித்து கவுரவித்தது.

பிறகு தன்னைப் போன்ற பாதிக்கப்பட்ட பெண்களுக்காகக் குரல் கொடுக்க ஆரம்பித்த நாடியா, ‘The Last Girl: My Story of Captivity, and My Fight Against the Islamic State’ என்ற சுயசரிதையை கடந்த வருடம் வெளியிட்டார். இப்புத்தகம் நோபல் கமிட்டியின் கைக்குப் போக, நோபல் பரிசு வென்ற முதல் ஈராக்கிய பெண் என்ற புதிய அந்தஸ்தைப் பெற்றுவிட்டார் நாடியா.

த.சக்திவேல்