ஒரு படம் ஒரு ஆளுமை



Daniel Day-Lewis

கிறிஸ்டி பிரவுன் என்ற ஓவியர், கவிஞர், எழுத்தாளரின் வாழ்க்கைக் கதை ‘My Left Foot’. பிரவுன் மூளையில் ஏற்பட்ட குறைபாடு அவரது உடலை முடக்கிவிட, இடதுகால் மட்டுமே இயங்கியது.

பிரவுனின் அம்மா, இறுதிவரை அவரின் ஆன்ம பலமாக இருந்தார். பிரவுன் தனது இடக்காலால் எழுதும் முதல் சொல்லே ‘mother’ என்பதுதான். பேச்சுப்பயிற்சியாளர் மீது பிரவுன் கொள்ளும் ஒருதலைக்காதலை அப்பெண் தீர்மானமாக மறுக்க, உடைந்து போகிறார். தாயின் அன்பும், அரவணைப்பும் பிரவுனை மீட்க, அயர்லாந்தின் அட்டகாச எழுத்தாளர் நமக்குக் கிடைத்தார்.

தொடக்கத்தில் ஓவியராக தூரிகை எடுத்தவர் பின்னர் பேனாவைப் பிடித்து சாதித்தார். வறுமை பிரவுனின் மிகப்பெரிய குடும்பத்தை உலுக்கியெடுக்கிறது. குடிக்க கஞ்சி தவிர வேறு உணவேயின்றி தவிக்கும் நிலையிலும் பிரவுனுக்காக வீல்சேர் வாங்க  பணம் சேமிக்கும்  தாயின் அன்பை  என்னவென்று  சொல்ல? காதல் தோல்வியில் நொறுங்கிய பிரவு னிடம் ‘‘உடைந்த உடலின்   வலியை விட உடைந்த இதயத்தின் வலி அதிகமானது. கிறிஸ்டி, எப்போதுமே நீ தான் என் இதயம்.

நீ ஜெயிக்க வேண்டியது வெளியே இல்லை; உன் மனதை. ஒரு நாள் உனக்கான இடத்தை நீ பிடிப்பாய்...’’ என்று பேசுகிறார். பிரவுனுக்கென தனி அறையை உருவாக்கிக் கொடுக்க, அவர் தீவிரமான மனவெழுச்சியில் எழுதத் தொடங்கினார்.  பிரவுனின் நூலைப் படித்த மேரி அவருக்கு மனைவியாகிறார்.

எழுத்துலகில் மாபெரும் புகழடையும் கிறிஸ்டி பிரவுன் சில ஆண்டுகளில் இறந்துபோகிறார். கிறிஸ்டி பிரவுனாக நடித்த டேனியல் டே லீவிஸ், சிறந்த நடி கருக்கான ஆஸ்கர் விருதைத் தட்டிச் சென்றார். மட்டுமல்ல, There Will Be Blood (2007), Lincoln (2012) என்ற இரண்டு படங்களிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஆஸ்கர் வென்ற ஆளுமை இவர்.

ஸ்கிரிப்ட் வாங்கியவுடன் அக்கதாபாத்திரமாக மாறிவிடும் டேனியல், படம் முடியும்வரை அக்கதாபாத்திரமாகவே வாழ்வார். மை லெஃப்ட் ஃபுட்’ படப்பிடிப்பு முடிந்த பிறகும் வீல் சேரிலேயே வீட்டுக்குப் போயிருக்கிறார். பிறர் ஊட்டிவிட உணவருந்தியவர், வீல்சேரை இயக்கி விலா எலும்புகளை உடைத்துக்கொண்டிருக்கிறார்.

சென்ற ஆண்டு வெளியான ‘Phantom Thread (2017)’ படத்தில் டேனியல், ஃபேஷன் டிசைனராக நடித்திருந்தார். ஃபேஷன் டிசைனிங் பட்டம் பெற்றபோது அவரின் வயது 60. டேனியல் தற்போது தனக்கு நெருங்கிய நண்பர்களுக்கு  காஸ்ட்யூம் டிசைனராக இருக்கிறார்.

லிஜி