குட்டிச்சாத்தான் ரேடியோ!



விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை மக்கள் ஏற்றுக்கொள்வதில் இருந்த தயக்கம், இப்போது நீங்கிவிட்டதா?

- ஆர்.பாரதி, 10ம் வகுப்பு, கணபதி பள்ளி, சென்னை-24.

* ரேடியோ பாடுவதை, ‘குறளியோ, குட்டிச்சாத்தானோ உள்ளே இருந்துகொண்டு கத்துகிறது’ என்று மிரண்டவர்கள் உண்டு.

* ‘கம்பிகளில் மனிதன் பேசும் குரலை அனுப்ப முடியுமென்று சொன்னால், புத்தியுள்ளவர்கள் நிச்சயம் நம்ப மாட்டார்கள்...’ என்று ஒரு அறிஞர் கூறினார்.

* ‘குதிரை இல்லாமல் வண்டி ஓட்டி விடுவார்களாம்! இந்த பிரதாபமெல்லாம் அவர்களின் கற்பனையில் தோன்றுபவைதான். அதனால் ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை’ என்று ஒரு பத்திரிகையே எழுதியது. இப்படித்தான் அந்தக் கால அறிவியல் கண்டு பிடிப்புகளுக்கு ‘நல்ல’ வரவேற்பு கிடைத்தது. இப்போது நிச்சயமாக இந்த அறியாமை நீங்கியிருக்கிறது என்று சொல்லலாம். இருப்பினும், நவீன தொழில்நுட்ப வசதி களைப் பயன்படுத்துவதில் மக்களுக்கு உள்ள ஆர்வம், அறிவியல் மீது இல்லை!

ஏரியன் ராக்கெட் இந்திய உருவாக்கமா?

- ஆர்.கமல், 9ம் வகுப்பு, மகாத்மா பள்ளி, மதுரை.

இந்தியாவின் பல செயற்கைக்கோள்களை ஏவப் பயன்பட்டிருந்தாலும், ஏரியன் நமது தயாரிப்பல்ல. இந்தியா தனக்குச் சொந்தமான ஜிஎஸ்எல்வி ராக்கெட்களை க்ரையோஜெனிக் எஞ்சின்களோடும் மூன்று கட்ட ராக்கெட் அமைப்புகளோடும் உருவாக்கும் வரை, கைகொடுத் தது வணிக ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்தப்பட்ட ஏரியன் ராக்கெட்களே.

ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சிக்குச் செந்தமான ஏரியன் குடும்பத்தின் லேட்டஸ்ட் வரவு ஏரியன்5சிஏ. இந்த 780 டன் ராக்கெட், தென் அமெரிக்காவிலிருந்து எழுந்த 30 நிமிடங்களில், இரு செயற்கைக்கோள்களை ஜியோசிங்க்கரனைஸ் மாறுதல் சுற்றுப்பாதையில் சேர்க்கும் திறன் கொண்டது. அங்கே 10 டன் அளவு பொருளை இது எளிதாகச் சேர்த்துவிடும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஏரியன் ராக்கெட்டின் முதல் நிலையில் vulcain2 என்ற க்ரையோஜெனிக் எஞ்சின் உள்ளது. இது மிகக்குறைந்த வெப்ப நிலையில் திரவ ஹைட்ரஜனையும், திரவ ஆக்சிஜனையும் உபயோகிக்கிறது. இந்தியாவின் ஜிஎஸ்எல்வியில் க்ரையோஜெனிக் எஞ்சின் மூன்றாவது  கடைசி நிலையில் வைக்கப்பட்டு விண்வெளியில் எரியூட்டப்படுகிறது. ஏரியனிலுள்ள க்ரையோஜெனிக் எஞ்சினோ, மேலே எழுவதற்கு 7 வினாடிகள் முன்பே எரியூட்டப்பட்டு விடுகிறது.

இதனால் புறப்படுவதற்கு முன்பே போதுமான உந்துவிசை கிடைக்கிறதா என்று ராக்கெட்டிலுள்ள கம்ப்யூட்டர்கள் உறுதிப்படுத்திக்கொள்ள நேரம் கிடைக்கிறது. அதோடு, ஏரியன் திட எரிபொருளுடன் கூடிய, இரு பூஸ்டர்களையும் கொண்டிருக்கிறது.

இவை ராக்கெட்டுக்கு மொத்த உந்துவிசையில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமாக அளிக்கவல்லவை. ஏரியனின் மேல்நிலையில் திரவ எரிபொருள்கள் சேமிக்கப்பட்டுள்ளன. இந்நிலை தேவைக்கேற்ப ஆன் - ஆஃப் செய்யும் வசதி கொண்டது. இதனால், செயற்கைக்கோளை மிகத் துல்லியமாக சுற்றுப்பாதையில் விட முடிகிறது.