கணித மேதை ராமானுஜன்



இவர் தமிழ்நாட்டுக்காரர். 1887 டிசம்பர் 22ம் தேதி ஈரோட்டில் பிறந்தார். வளர்ந்தது கும்பகோணத்தில். இவரது தந்தை ஒரு துணிக்கடையில் கணக்கு எழுத்தராக வேலை செய்தார். ராமானுஜன் சிறு வயதிலேயே புத்திக் கூர்மையும் படிப்பில் அதிக ஆர்வமும் கொண்டிருந்தார். இளம் வயதில் ‘பை’யின் மதிப்பை (3.14) பல தசமத்தில் மாணவர்களிடம் பள்ளியில் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

1903ம் ஆண்டு கும்பகோணம் அரசு கல்லூரியில் சேர்ந்து படித்தார். முழு மனதும் கணிதம் ஒன்றிலே ஆழ்ந்து விட்டதால், மற்ற பாடங்களில் கவனம் செல்லவில்லை. கல்லூரித் தேர்வில் தோல்வியைத் தழுவினார். தனது 22வது வயதில் ஜானகியைத் திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு கணித ஆர்வத்தைக் கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு வயிற்றுப் பிழைப்புக்காக சென்னையில் வேலை தேடி அலைந்தார். சென்னைத் துறைமுக நிறுவனத்தில் எழுத்தராக பணியில் சேர்ந்தார். 

இந்தியக் கணிதக் கழகத்தின் ஆய்வுப் பத்திரிகையில் ராமானுஜனின் ஆய்வுக் கட்டுரை பிரசுரமானது. துறைமுக அலுவலகத்தின் பிரிட்டிஷ் உயரதிகாரி பிரான்ஸிஸ் ஸ்பிரிங்ஸ், ராமானுஜனின் திறமையை அறிந்து வியந்தார். அவரது கணிதப் படைப்புகளை இங்கிலாந்தில் மூன்று முக்கிய கணித வல்லுநர்களுக்கு அனுப்பி வைத்தார். அவர்களில் புகழ்பெற்ற கணித நிபுணர் ஜி.எச் ஹார்டி, ராமானுஜனை உடனே கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு வரும்படி அழைப்பு விடுத்தார்.

1914ல் ராமானுஜன் இங்கிலாந்து சென்றார். ஜி.எச்.ஹார்டியுடன் இணைந்து டிரினிடி கல்லூரியின் கணிதத் துறை வளர்ச்சிக்கு சேவை செய்தார். ஹார்டியின் சீரிய நுணுக்கமும் ராமானுஜனின் நூதன கணித ஞானமும் இணையாகப் பொருந்தி ஒப்பற்ற உடன்பாடு நிலவி, கணித மெய்ப்பாடுகள் பல உருவாகின. அவர் ஹார்டியுடன் நான்கு ஆண்டுகள் இருந்தபோது 27 ஆய்வுக் கட்டுரைகள் பிரசுரித்தார். அவற்றில் 7 கட்டுரைகள் ஹார்டியுடன் இணைந்து எழுதியவை.

கிட்டத்தட்ட 3000க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார் ராமானுஜன். எண்களின் பண்புகளைப் பற்றிய எண்கோட்பாடுகளிலும், செறிவெண் கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் பயன்படுகின்றன. தன் முப்பதாவது வயதில் லண்டன்   F.R.S .  (Fellow of Royal Society)   விருதையும் டிரினிடி கல்லூரியின் ஃபெல்லோஷிப் விருதையும் ஒன்றாகப் பெற்றுப் புகழடைந்தார். இந்த இரண்டு கௌரவப் பட்டங்களை முதன் முதலில் பெற்ற இந்தியர் இவரே!

ராமானுஜனை காசநோய் கடுமையாகத் தாக்கியது. அந்தக் காலகட்டத்தில் அதைக் குணப்படுத்த மருந்து இல்லை. நோயின் தாக்கத்தால் அவர் இந்தியாவிற்குத் திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. நோயின் தீவிரத்தால், அவர் 1920 ஏப்ரல் 26ம் தேதி காலமானார். ‘ராமானுஜன் என்னிடம் கற்றுக்கொண்டதை விட, அவரிடம் நான் கற்றுக் கொண்டதுதான் அதிகம்’ என்று ஹார்டி இவருக்குப் புகழாரம் சூட்டினார்.

சி.பரத்