கருத்தடைக்கு வேண்டாம் மனத்தடை!



மத்திய அரசு பல தசமங்களாக மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவது பற்றிய விழிப்புணர்வுப் பிரசாரங்களை தொடர்ந்து நடத்திவருகிறது. ஆனால், இத்தனை பிரசாரங்கள் செய்தும் கருத்தடை பற்றிய நம்முடைய புரிதல் என்பது கிட்டதட்ட ஜீரோ என்றுதான் சொல்ல வேண்டும். ’எத்தனை வகையான கருத்தடைச் சாதனங்கள் உள்ளன?’ என்று நன்கு படித்தவர்களிடம் கேட்டால்கூட இரண்டு மூன்று முறைகளுக்கு மேல் யாருக்கும் தெரிவதில்லை. இந்த அறியாமைதான் நம்மை மிகப் பெரிய சிக்கலில் கொண்டுபோய் விட்டிருக்கிறது.

கர்ப்பம் என்பது வரம்தான். ஆனால், அந்தக் கர்ப்பமே வேண்டாத நேரத்தில் நேர்ந்துவிட்டால் அதுதான் பெரிய சாபம். நம் நாட்டில் கருத்தடைச் சாதனங்கள் பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவு மட்டும் இல்லை, அது குறித்து எண்ணற்ற தவறான நம்பிக்கைகள், கருத்துகளும் உள்ளன. சிலர் அதைப் பாவம் என நினைக்கிறார்கள். சிலர் அதை இன்பத்துக்கு இடைஞ்சல் என நினைக்கிறார்கள். கருத்தடைச் சாதனங்கள் என்றால் என்ன? அவற்றில் எத்தனை வகைகள் உள்ளன. அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதைப் பற்றி இங்கு பார்ப்போம்.

கருத்தடை முறைகள்

பொதுவாக, கருத்தடை வழிமுறைகள், தற்காலிக முறைகள், நீண்டகால முறைகள், நிரந்தர முறைகள் என மூன்றுவகைப்படும். தற்காலிக முறைகளில் காண்டம்  எனப்படும் உறை, கருத்தடை மாத்திரை, அவசரநிலை மாத்திரை, கருத்தடை பேட்ச், கருத்தடை வளைவுகள், ஸ்பெர்மசைட், டயாப்ரம், கேப், கருத்தடை ஊசி ஆகியவை அடங்கும். நீண்டகால முறைகளில் காப்பர் டி, கான்ட்ராசெப்டிவ் இம்பிளான்ட் ஆகியவையும் நிரந்தர முறையில் டியூப்பக்டமி, வாசக்டமி ஆகியவையும் அடங்கும். இதில் ஆணுறையும், வாசக்டமியும் ஆண்களுக்கானவை மற்றவை பெண்களுக்கானவை.  

தற்காலிக முறைகள்

காண்டம் எனப்படும் உறை பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்த எளிய கருத்தடைச் சாதனம் இது. இதில் ஆணுறை, பெண்ணுறை என இரண்டு வகை உள்ளன. உடலுறவின்போது இதை அணிந்துகொண்டால், விந்து சினை முட்டையை அடைவதைத் தடுக்கலாம். இதன் மூலம் கர்ப்பம் தடுக்கப்படும். உறைகளுடன் சேர்த்து ‘ஸ்பெர்மிசைட்’ எனப்படும், விந்துகளைக் கொல்லும் மருந்துகளையும் பயன்படுத்துவது உண்டு.  

உடலின் வெளியே மட்டும் செயல்படுவதால் இது பாதுகாப்பானது. மேலும், உடலுறவினால் பரவும் நோய்களைத் தடுக்கக்கூடிய கருத்தடைச் சாதனம் காண்டம் என்பது குறிப்பிடத்தக்கது. உறை கிழிந்துபோதல், கழன்றுபோதல், ஓட்டை ஏற்படுதல் ஆகிய காரணங்களால் இந்த முறை தோல்வியடைய 20 சதவிகித  வாய்ப்புள்ளது.

கருத்தடை மாத்திரை

இது பெண்களுக்கானது. இந்த மாத்திரைகளில் புரோஜெட்ரான், ஈஸ்ட்ரோஜென் ரசாயனங்கள் இருக்கின்றன. இது, முட்டை வெளியேறுதலை (ஓவரேஷன்) தடுத்து, கருத்தரிப்பை தவிர்க்கிறது. இந்த மாத்திரைகளை மாதவிடாய் முடிந்த இரண்டாம் நாள் தொடங்கி 21 நாட்கள் உட்கொள்ள வேண்டும். இதனால், சினைமுட்டை வெளியே வராது. மியூக்கஸ் சுரப்பை அடர்த்திப்படுத்தியும் இது கருத்தடை செய்யும்.

தினமும் குறித்த நேரத்தில் தவறாமல் உட்கொள்ள வேண்டும். இந்த மாத்திரையை ஏதேனும் ஒருநாள் எடுத்துக்கொள்ளாமல் தவறவிடுவது, நேரம் மாற்றிச் சாப்பிடுவது போன்ற காரணங்களால் இது தோல்வி அடைய ஒன்பது சதவிகித வாய்ப்பு உள்ளது. மேலும் இதனால் பெண்களுக்கு சில பக்கவிளைவுகளும் ஏற்படக்கூடும். எனவே, பயன்படுத்தும் முன் மருத்துவரிடம் கலந்து ஆலோசனைப் பெற வேண்டியது அவசியம்.

அவசரநிலை மாத்திரைஇதுவும் பெண்களுக்கானதுதான். உடலுறவு முடிந்த 24 மணி நேரத்துக்குள் எடுத்துக்கொள்ள வேண்டும். குறித்த நேரத்தில் எடுத்துக்கொண்டால்கூட இந்த மாத்திரை செயல்படாமல் போவதற்கு 52 சதவிகித வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இதனை அடிக்கடி எடுத்துக்கொண்டால் பக்கவிளைவுகள் ஏற்படும். எனவே, மருத்துவரின் ஆலோசனை அவசியம்.

கருத்தடை பேட்ச்

‘கான்ட்ராசெப்டிவ் பேட்ச் (Patch)’ எனப்படும் இந்த பேட்ச்களை முன்வயிறு, பின்புறம், முதுகு ஆகிய பகுதிகளில் பெண்கள் தங்கள் உடலில் ஒட்டிக்கொண்டால், சருமம் வழியாகக் கடத்தும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரோஜெஸ்ட்டிரான் ஹார்மோன்கள் சினைமுட்டை உருவாதலைத் தடுப்பதன் மூலம் கர்ப்பம் தடுக்கப்படும்.  மாதவிலக்கின் முதல் நாளில் இருந்து சீரான இடைவெளியில் ஒட்டிக்கொள்ள வேண்டும். நம் நாட்டில் தற்போதுதான் ஓரளவு உபயோகத்தில் உள்ளது இந்த பேட்ச்.  இதில் தோல்வி ஏற்பட  ஒன்பது சதவிகித வாய்ப்பு உள்ளது.

கருத்தடை வளைவுகள்

‘கான்ட்ராசெப்டிவ் ரிங்’ எனப்படும் இந்தக்  கருத்தடை வளைவை மாதவிலக்கின் முதல்நாள் அன்று அணிந்துகொண்டால், அது வெளியிடும் ஈஸ்ட்ரோஜென், ப்ரோஜெஸ்ட்டிரான் ஹார்மோன்கள் சினைமுட்டை வெளியாதலைத் தடுத்து, கர்ப்பத்தைத் தடுக்கும். தோல்வி அடைய ஒன்பது சதவிகித வாய்ப்பு உள்ள முறை இது.

ஸ்பெர்மிசைட்ஸ்

விந்தணுக்களை அழித்தும் நுரை போன்ற அமைப்பை உருவாக்கி விந்தணுக்களின் ஓட்டத்தைத் தடை செய்தும் கர்ப்பத்தடையை உருவாக்கும் ரசாயனப் பொருள் இது. பெண்ணின் பிறப்புறுப்பில் வைக்கக்கூடிய வகையில் ஜெல், கிரீம், மாத்திரை எனப் பல வடிவங்களில் வருகிறது. இதைத் தனியாகப் பயன்படுத்தும்போது 50 சதவிகிதத்துக்கு மேல் தோல்வி அடைய வாய்ப்பு உள்ளது. டயாப்ரம் அல்லது கேப் முறை உடன் பயன்படுத்தும் போது நல்ல பயன்தரும்.

டயாப்ரம் (Diaphragm)

கூடாரம் போன்ற முகப்பு உடைய  ரப்பரால் ஆன பொருள். இது, வளைந்துகொடுக்கக்கூடியது. இதை உடலுறவு கொள்ளும் முன் பெண்கள் பொருத்திக்கொள்ள வேண்டும். பிறப்புறுக்குப்  பின்புறம், பியூபிக் எலும்புப் பகுதியில் பொருத்த வேண்டும். மிகச்சரியாகப் பொருத்தினால் கர்ப்பப்பை வாய் திறக்காமல் போய்விடும்.

இதனால், கர்ப்பப்பைக்குள் விந்தணு செல்வது தடுக்கப்படும். உடலுறவுக்குப் பின் ஆறு மணி நேரத்தில் இதை அகற்றிவிட வேண்டும். தொடக்கத்தில் இந்த டையாப்ரத்தை மருத்துவர்தான் பொருத்துவார். நன்கு பழகிய பிறகு இதைப் பெண்கள் தாங்களாகவே பொருத்திக்கொள்ளலாம். இதைத் தனியாகப் பயன்படுத்தும்போது 50 சதவிகிதத்துக்கு மேல் தோல்வி அடைய வாய்ப்பு உள்ளது. ஸ்பெர்மிசைட்ஸ் உடன் பயன்படுத்தும்போது நல்ல பலன் கிடைக்கும்.

கேப்

இதுவும் ரப்பரால் ஆன பொருள்தான். உடலுறவுக்கு முன் கர்ப்பப்பைவாய்க்கும் பிறப்புறுப்புக்கும் இடையில் பொருத்த வேண்டும். இது, விந்தணுக்கள் பயணிப்பதைத் தடுக்கிறது. கிட்டத்தட்ட இதுவும் டயாப்ரம் போலத்தான். ஆனால், பல்வேறு அளவுகளில் வருகிறது. இதையும் தனியாகப் பயன்படுத்தும்போது 50 சதவிகிதத்துக்கு மேல் தோல்வி அடைய வாய்ப்பு உள்ளது. ஸ்பெர்மிசைட்ஸ் உடன் பயன்படுத்தலாம்.

கருத்தடை ஊசி

இதுவும் பெண்களுக்கானதுதான். மூன்று மாத இடைவெளியில் போட்டுக்கொள்ளும் கருத்தடை ஊசி இது. ப்ரோஜெஸ்ட்டோஜென் ஹார்மோனை வெளியிட்டு கருமுட்டை உருவாதலைத் தவிர்ப்பதோடு, பிறப்புறுப்பின் மியூக்கஸ் சுரப்பை அடர்த்தியாக்கி, விந்து கருப்பை அடையாமலும் தடுக்கும். உலகம் முழுக்கப் பரவலாகப் பின்பற்றப்படும் முறை இது.  6 சதவிகிதம் தோல்வி அடைய வாய்ப்பு உள்ள கருத்தடை முறை இது. மேலும், சிலருக்கு இது பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதால் மருத்துவரிடம் சென்று மட்டுமே போட்டுக்கொள்ள வேண்டும்.

நீண்டகாலக் கருத்தடை

காப்பர் டி(Copper T) ஒரு நீண்டகால கருத்தடைச் சாதனம். மாதவிலக்கின் இறுதிநாளில், பெண்களின் பிறப்புறுப்பின் வழியாக மருத்துவரால் உள்ளே பொருத்தப்படும் கருத்தடைச் சாதனம் இது. இது பல்வேறு அளவுகளில் வருகிறது. அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் வரை ஆயுள்கொண்டது.

ஹார்மோன்கள் கொண்ட காப்பர் டி, பிறப்புறுப்பின் மியூக்கஸ் சுரப்பை அடர்த்தியாக்கி, விந்துக்கள் எண்டோமெட்ரியத்தை அடைவதைத் தவிர்க்கும், ஹார்மோன்கள் இல்லாத காப்பர் டி, காப்பர் அணுக்களைச் செலுத்தி விந்துக்களின் இயக்கத்தைத் தடுக்கும். மேலும், இதை, விரும்பும்போது அகற்றி, கருத்தரிக்கலாம். காப்பர் டி தோல்வி அடைய 1 சதவிகித வாய்ப்பு மட்டுமே உண்டு. ஆனால், இது சில பெண்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். அதனால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.

கான்ட்ராசெப்டிவ் இம்ப்ளான்ட்

கான்ட்ராசெப்டிவ் இம்ப்ளான்ட் எனப்படும் சிறிய குச்சி போன்ற கருத்தடைச் சாதனம், மருத்துவரால் பெண்களின் கைப்பகுதியில் செலுத்தப்படும். இது சினைமுட்டை வெளியேற்றத்தைத் தடுக்கும். மேலும், பிறப்புறுப்பின் மியூக்கஸ் சுரப்பின் அடர்த்தியை அதிகரித்து, விந்து உட்செல்வதையும் தடுக்கும் என்பதால் மிகவும் பாதுகாப்பான கருத்தடைச் சாதனம் இது.

ஒருமுறை உட்செலுத்திக்கொண்டால், மூன்று வருடங்கள் முதல் அதிகபட்சமாக ஐந்து வருடங்கள் வரை கருத்தடை செய்யும். விரும்பினால் இதை அகற்றிக்கொண்டு கருத்தரிக்கலாம். ஒரு சதவிகிதம் மட்டுமே தோல்வி அடைய வாய்ப்பு உள்ள இம்ப்ளான்ட் சாதனம் இது. சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும்.

- இளங்கோ கிருஷ்ணன்

நிரந்தர முறைகள்

ட்யூபெக்டமி

இது ஒரு நிரந்தரமான கருத்தடுப்பு முறை. இதில் பெண்களின் பெலோப்பியன் குழாய் கத்தரிக்கப்பட்டு முடிச்சுப்போடப்படும். சிலருக்கு இந்தக் குழாயை அகற்றுவதும் உண்டு. முடிச்சிடும் முறையில் அறுவைசிகிச்சை செய்துகொண்டால் மீண்டும் குழந்தைபெற விரும்பினால் தடையை அகற்றி சரி செய்துகொள்ளலாம். ஆனால், கத்தரிக்கப்பட்டால் மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள வாய்ப்பு இல்லை. தற்போது லேப்ரோஸ்கோமி முறையில் எளிமையாக அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது.

வாசக்டமி

இது ஆண்களுக்கான கருத்தடை முறை. இதில், விதைப்பையில் இருந்து விந்து எடுத்துச் செல்லப்படும் பாதை அறுவைசிகிச்சை மூலம் அடைக்கப்படுகிறது. தற்போது, லேப்ரோஸ்கோப்பி மூலம் இந்த அறுவைசிகிச்சைகள் எளிமையாகச் செய்யப்படுகின்றன. மேலும், பெண்களுக்கான ட்யூபக்டமியைவிட ஆண்களுக்கான வாசக்டமி சிகிச்சை எளிமையானது.