சத்தான சிறுதானிய ஸ்நாக்ஸ்!



சிறு தானிய பிரெட் சாண்ட்விச்

தேவையானவை:

வரகு, சாமை, குதிரைவாலி,
கொள்ளு, தினை, வெள்ளை சோளம்,
மஞ்சள் சோளம், கம்பு - தலா 1 தேக்கரண்டி
கோதுமை பிரெட் - 8 துண்டுகள்
வெங்காயம் - 1
 பச்சை மிளகாய் - 4
 பூண்டு - 4 பல்
 கொத்துமல்லித்தழை - முக்கால் கப்
 வெண்ணெய் - 8 தேக்கரண்டி
 உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:  சிறுதானிய கலவையை 3 மணி நேரம் ஊற வைத்து, பூண்டு, வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு, கொத்துமல்லி சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். பின்னர், இந்தக் கலவையை பிரெட்டின் ஒருபுறம் அரை அங்குல கனத்துக்குச் சீராகத் தடவி மற்றொரு பிரெட் துண்டத்தால் மூடி தோசைக் கல்லில் சிறிது வெண்ணெய் சேர்த்து ரோஸ்ட் செய்யவும். தக்காளி சாஸுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

பயன்கள்: கம்பு, சோளம், வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கேழ்வரகு போன்ற சிறுதானிய உணவுகளை சாப்பிடுவதால் சர்க்கரைநோய், உடல் பருமன், ரத்தக்கொதிப்பு போன்ற நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம். இவை அதிக ஆற்றலை தரக்கூடியவை. அரிசி, கோதுமை போன்ற மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது இவை புரதச்சத்து, நார்ச்சத்து மிகுந்தும், பைடிக் அமிலம் குறைந்தும், இரும்பு, கால்சியம் மற்றும் வைட்டமின்களை அதிகம் கொண்டது.

சோளம் ஸ்டப்ட் போண்டா

தேவையானவை:

சோள மணிகள் - 2 கப்
உளுந்தம்பருப்பு - 1 கப்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி -  சிறிது
தேங்காய்த் துருவல் - கால் கப்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் -  தேவைக்கேற்ப.

செய்முறை:  உளுந்தம் பருப்பை 1 மணி நேரம் ஊற வைத்து சிட்டிகை உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.  சோளமணிகளையும் தனியாக ஆவியில் வேக வைத்து ஆறவிடவும். பின்னர் அதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து, தேங்காய்த் துருவலுடன் கலந்து அரைத்து, சிறு உருண்டைகளாக்கிக் கொள்ளவும். இந்த உருண்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து உளுந்த மாவில் தோய்த்து வாணலியில் சூடாக்கிய எண்ணெயில் பொரித்தெடுக்கவும். வித்தியாசமான போண்டா தக்காளி சட்னியுடன் சாப்பிட மிகவும் சுவையாக  இருக்கும்.

பயன்கள்:  சோளத்தில் புரதம், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் கால்சியம், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் இரும்புச் சத்து ஆகியவை அதிகளவில் இருப்பதால் இவை ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது.

கம்பு சர்க்கரைவள்ளிகிழங்கு பஜ்ஜி

தேவையானவை:

கம்பு மாவு - 2 கப்
கடலை மாவு -  அரை கப்
சோடா உப்பு - 1 சிட்டிகை
மிளகாய்த்தூள் -  1 தேக்கரண்டி
 பெருங்காயம் - சிறிது
 உப்பு - தேவைக்கேற்ப
 எண்ணெய் - தேவைக்கேற்ப
சர்க்கரைவள்ளிக்கிழங்கு - 3
 பெரிய வெங்காயம் - 1
 கத்தரிக்காய் - 2.

 செய்முறை, கம்புமாவு, கடலைமாவு, சோடா உப்பு, உப்பு, மிளகாய்த் தூள், பெருங்காயம் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கலந்து வைக்கவும். சர்க்கரை வள்ளிக்கிழங்கு, வெங்காயம், கத்திரிக்காய் ஆகியவற்றை மெல்லிய துண்டுகளாக வட்டமாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், மெல்லியதாக நறுக்கிய காய்கறிகளை மாவில் தோய்த்து வாணலியில்   காய வைத்த எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.  தக்காளி சட்னியுடன் பரிமாற சுவையாக இருக்கும்.

 பயன்கள்: கம்பு ரத்தத்தில் உள்ள கழிவுகளை போக்கி ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. இதனால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும். கம்பில் புரதச்சத்து அதிகம் இருப்பதால் தலைமுடி உதிர்வு உள்ளவர்கள் கம்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தலை முடி உதிர்வில் இருந்து விடுபடலாம். கம்பு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூட்டை குறைக்கிறது.

சர்க்கரை வள்ளி கிழங்கில் அதிக அளவு பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், இரும்புசத்து போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும், வைட்டமின் ஏ, பி, சி, பொட்டாசியம், மெக்னீசியம், நார்சத்து, ஆன்டிஆக்சிடன்ட்ஸ், இரும்பு, கால்சியம் போன்ற பலவித சத்துக்களும் நிறைந்துள்ளது. பொதுவாக கிழங்கு வகைகளில் கொழுப்பு அதிகம் நிறைந்து காணப்படும். ஆனால் சர்க்கரைவள்ளிக் கிழங்கில் கொழுப்பு மிகவும் குறைவு. மேலும் இதில் அதிக அளவில் நார்சத்து நிறைந்துள்ளது. இவை உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கின்றது.

- ஸ்ரீதேவி குமரேசன்