மூளையைக் காப்பாற்றுங்கள், ப்ளீஸ்!



மது... மயக்கம் என்ன?

ஆல்கஹாலுக்கு நீங்கள் கொடுக்கும் விலை பணம் மட்டுமே அல்ல... திரும்பப் பெற வாய்ப்பே இல்லாத மூளையின் முக்கிய செல்கள்!

முன்பெல்லாம் ஏதோ ஒரு திரைப்படத்தில் மட்டுமே காட்டப்பட்டஇந்தக் காட்சியை, இப்போது தமிழகத்தின் எந்த ஊரிலும் நிஜமாகவே காணலாம்.பள்ளிச்சீருடை அணிந்த மாணவர்கள் டாஸ்மாக்கிலே மது வாங்கி,அங்கேயோ, அருகிலுள்ள சந்துகளிலோ பதற்றத்தோடு பருகுவதுதான் அது.

சில நொடிகள் அதிர்ச்சியைத் தாண்டி, அவரவர் பணிக்குத்திரும்புவதைத் தவிர, இச்சூழலில் என்ன செய்கிறோம் நாம்? சமூகச் சிக்கல்களைத் தாண்டி, இதன் பின்னணியில் உள்ள மிரட்டும் பயங்கரத்தை அண்மையில்அறிவித்திருக்கிறார்கள் டியூக் பல்கலைக்கழகவிஞ்ஞானிகள்.

‘அடலோசன்ஸ்’ என்கிற வளர் இளம் பருவத்தில் குடிக்கிறவர்களுக்கு மூளையில் சரி செய்ய முடியாத அளவு பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக கற்றல் திறன், நினைவாற்றல் ஆகியவை பாதிப்புக்கு உள்ளாகும்என்கிறது அந்த ஆய்வு.‘சட்டத்தின் பார்வையில், 18 வயது தாண்டியவர்கள் வயது வந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். எனினும், 20களில் முற்பகுதி வரை மூளையின் வளர்ச்சி படிப்படியாக நடந்துகொண்டேஇருக்கிறது’ என்கிறார் இது பற்றி ஆய்வு நிகழ்த்தியிருக்கிற விஞ்ஞானி டாக்டர் மேரி-லூயிஸ் ரிஷ்ஷர்.

வளர் இளம் பருவத்தினரும் இளைஞர்களும் இந்தக் காலகட்டத்தில்அதிகமாகக் குடிப்பது தங்கள் மூளைக்குத் தாங்களே வைக்கிற வேட்டு என்பதை முதலில் உணர வேண்டும். நினைவாற்றல் குறைவதோடு, புலன்வழி அறிந்து மூளையின் மூலம் பகுக்கும் தர்க்கஅறிவையும் இவர்கள் இழக்கிறார்கள். இளம் வயதில் அதிகம் குடிப்பதால், உடலியல் ரீதியான பிரச்னைகளோடு, மூளையின் வலு குறைந்து, மந்தமான ஒரு நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

சோதனை எலிகளைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட ஆராய்ச்சியிலும், இளம்பருவத்தில் மது அருந்துவோரிடம் அறிந்த தகவல்களில் இருந்தும் இம்முடிவு எட்டப்பட்டிருக்கிறது.நினைவாற்றலும் கற்றல் திறனும் கட்டுப்படுத்தப்படுகிற மூளையின்ஹிப்போகேம்பஸ் பகுதியில் மதுவானது பாதிப்பை ஏற்படுத்துவது உணரப்பட்டது. புதிய இலக்குகளை எட்டுவதிலும் நினைவுகளை ஏவுவதிலும் மதுவின் தாக்குதல் காரணமாக பலவீனம் ஏற்படுகிறது.

ஹிப்போகேம்பஸ் பகுதியில் மட்டுமல்ல... மூளையின் வேறு பகுதிகளிலும் மதுவின் பாதிப்பு காரணமாக செல்களின் அமைப்பில் மாற்றம் ஏற்படுவதையும் இந்த விஞ்ஞானிகள் கவனித்துள்ளனர்.‘ஜர்னல் ஆல்கஹாலிசம்: கிளினிக்கல் & எக்ஸ்பெரிமென்டல் ரிசர்ச்’ எனும்ஆய்விதழில் வெளியான விரிவானஆய்வுத் தகவல்களின் ஒட்டுமொத்த முழக்கம் ஒன்றுதான்...

’25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் குடிப்பதைக் கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளைஉலகெங்கும் மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில், எதிர்கால மூளைகளை நாம் இழக்க வேண்டியிருக்கும்!’அல்சர் (வயிற்றுப்புண்), கேன்சர், மஞ்சள் காமாலை, கல்லீரல் அழற்சி, ஈரல் வீக்கம், உயர் ரத்த அழுத்தம், ரத்தக் கொதிப்பு, ரத்தக் குழாய்கள் பாதிப்பு,இதயத்தசைகள் பழுதடைதல் உள்பட இதய நோய்கள், நரம்புத் தளர்ச்சி, உணர்ச்சியின்மை, சருமப் பிரச்னைகள், கணையப் பாதிப்பு, தாம்பத்திய சிக்கல்கள், மலட்டுத்தன்மை உள்பட நாள்தோறும்பல்வேறு உடலியல் பிரச்னைகள்குடியினால் ஏற்படுகின்றன.

எவ்வளவு குடித்தாலும் போதைஏற்படாமல் மேலும் மேலும் குடித்தல், நடந்த சம்பவங்களை மறந்து விடுவது, எப்போதும் குடிப்பது பற்றிய சிந்தனையிலேயே இருப்பது, குடிக்கும் அளவு, உணவின் அளவு, நேரம் என எல்லாமும் கட்டுப்பாடின்றி அதீதமாக இருப்பது, சாதாரண விஷயங்களுக்கும் அதிக கோபம், சண்டை சச்சரவுகள், தேவையற்ற பேச்சு, கெட்ட வார்த்தைகள் உள்பட பல மாற்றங்கள் ஏற்படுவது, மனைவி, குழந்தைகள், குடும்பத்தினரை காரணம் ஏதுமின்றி சந்தேகிப்பது, மனதாலும் உடலாலும் துன்புறுத்துவது, குடித்தால் மட்டுமே வேலை செய்ய முடியும் என உறுதியாக நம்புவது, எப்போதும் பதற்றமாகவே இருப்பது ஆகியவை மது காரணமாக மனவியல் ரீதியாக ஏற்படும் மாற்றங்கள். இவையே குடிநோயின் அறிகுறிகளாகவும் வரையறுக்கப்படுகின்றன.

மது பிறந்தது எப்படி?

சாணக்கியர் படைத்த அர்த்தசாஸ்திரத்தில் விவரிக்கப்பட்டுள்ள 6 வகை குடிபானங்களில் ஒன்று மது.
 சமஸ்கிருதத்தில் ‘மதுரம்’ என்பது இனிமை. மதுரம் என்ற வார்த்தையிலிருந்து ‘மது’ வந்திருக்கலாம்.
(இப்ேபாதைய மதுவுக்கும் இனிமைக்கும் எந்தத் தொடர்பும் இல்லைஎன்பதைக் கவனத்தில் கொள்க!)
 ‘மன்மதன்’ எனும் காமக் கடவுளின் பெயரில் இருந்தே மது எனும் சொல் தோன்றியது என்றும் கூறப்படுகிறது.


25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் குடிப்பதைக் கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை உலகெங்கும் மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில், எதிர்கால மூளைகளை நாம் இழக்க வேண்டியிருக்கும்!

அதிர்ச்சி டேட்டா

தமிழகத்தில், குடி காரணமாக ஒரு மணி நேரத்துக்கு 15 பேர் மனவியல் சிக்கல்களுக்கு ஆளாகி, மனநோயாளிகளாக மாறுகின்றனர்.

அதிர்ச்சி செய்தி

டாஸ்மாக் நிர்வாகம் மது விற்பனை குறியீட்டு இலக்கை இன்னும் எட்டாதது குறித்து ஆய்வு மேற்கொண்டிருக்கின்றனர்.  இதன் முடிவு என்ன தெரியுமா?
‘ஜூன், ஜூலை மாதங்களில் இலக்கை எட்டி விடுவோம்...’
எப்படி?

‘பள்ளி, கல்லூரிகள் திறந்தவுடன்விற்பனை அதிகரிக்கும்!’

(தகவல்களைப் பருகுவோம்!)

டாக்டர் ஷாம்