23 உயிர்களுக்கு மறுவாழ்வு அளித்த ஐவர்!



நெகிழ்ச்சி

உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த ஜி.ரவிக்குமார், சிதம்பரத்தைச் சேர்ந்த சந்திரசேகர் உள்பட ஐவர் எதிர்பாராமல் ஒரே நாளில் மூளைச்சாவு அடைந்தனர். இவர்களின் உறவினர்கள் சொல்ல முடியாத சோகத்தையும் தாங்கிக்கொண்டு, உறுப்புகளை தானமாக அளிக்க முன்வந்தனர்.

5 குடும்பத்தினரின் உதவியால் மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல்களில் இருந்து, அப்போலோ மருத்துவமனைக்கு 10 சிறுநீரகங்கள், 3 ஜோடி விழிவெண்படலங்கள், 2 இதயங்கள், 5 கல்லீரல்கள் என 23  வெவ்வேறு உடலுறுப்புகள் தானமாக பெறப்பட்டன. பல்வேறு மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்டன. ஆறு விழிவெண்படலங்களும் பிரபலமான கண் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன. மறுவாழ்வுக்கு உதவிய 23 உள்ளங்களை கவுரவிக்கும் நிகழ்வில் சில துளிகள் இதோ...
‘‘சாலை விபத்துகளைத் தடுக்க ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வு வரவேண்டும்.

ஏனென்றால், ஒரு நாளில் மட்டும் சாலை விபத்து களில் 150 பேர் உயிரிழக்கின்றனர். உடல் உறுப் புகளை தானம் செய்வது, இறந்தவர் உடலை அவமதிப்பு செய்தது ஆகாது. மற்ற உலக நாடுகளைவிட, இந்தியாவில் இந்த சாதனை செய்யப்பட்டதே ஒரு சாதனை’’ என்றார் தமிழக அரசின் சுகாதார செயலர்.

‘‘ஆயிரக்கணக்கானோர் உறுப்பு தானத்துக்காகக் காத்து இருக்கின்றனர். ஒரே நாளில் ஒரு மருத்துவமனையில் 23 உறுப்புகள் தானம் செய்யப்பட்டது ஒரு சாதனையே. இந்நாள் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்த நாள்’’ எனக் குறிப்பிட்டார் அப்போலோ குழுமத்தைச் சேர்ந்த டாக்டர் பிரதாப் ரெட்டி.

- விஜயகுமார்
படம்: ஏ.டி.தமிழ்வாணன்