டயாலிசிஸ்



நம் உடலுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் ரத்தத்தை வடிகட்டி,கழிவுகளை சிறுநீராக வெளியேற்றிவிட்டு, நல்ல ரத்தத்தை மீண்டும் உடலுக்கு உள்ளேயே செலுத்தும் வேலையை சிறுநீரகங்கள் செய்து கொண்டிருக்கின்றன. ஒரு சிறுநீரகம் செயலிழந்தால் கூட மற்ற சிறுநீரகம் நிலைமையை சமாளித்துக்கொள்ளும். இரண்டும் செயலிழந்தால் டயாலிசிஸ் மூலம் ரத்தத்தை சுத்தி கரித்தே உயிர் வாழ முடியும்.

இன்று பலரையும் வாழ வைத்துக் கொண்டிருக்கும் டயாலிசிஸைக் கண்டுபிடித்தவர் அமெரிக்க இளம் மருத்துவர் வில்லெம் ஜோஹன் கால்ஃப்.நெதர்லாந்தின் கிரானிஞ்சன் மருத்துவமனையில் மருத்துவராக வாழ்க்கையைத் தொடங்கியவர் கால்ஃப். ஒருநாள் சிகிச்சைக்கு வந்த 22 வயது இளைஞர், இரு சிறுநீரகங்களும் செயலிழந்து கால்ஃபின் கண் முன்னே பரிதாபகரமாக உயிரிழந்தார். வாழ வேண்டிய வயதில், தன்னைப் போன்ற ஓர் இளைஞர் உயிரிழந்ததைத்  தாங்கிக்கொள்ள முடியவில்லை.

1913ல், விலங்குகளின் ரத்தத்தில் இருந்து கழிவுகளை அகற்றும் முறையை ஜான் எபேல் என்ற மருந்தியலாளர் கண்டுபிடித்திருப்பது தெரிந்தது. இதை அடிப்படையாக்கி செயற்கை சிறுநீரகத்தை உருவாக்கும் ஆய்வைத் தொடங்கினார். 2ம் உலகப் போர் ரூபத்தில்சிக்கல் வந்தது. நெதர்லாந்தைக் கைப்பற்றிய ஹிட்லரின் நாஜிப்படை டச்சு மருத்துவமனைக்கு கால்ஃபை வலுக்கட்டாயமாக அனுப்பியது.

ஆனாலும், தன்னுடைய லட்சியத்தைக் கைவிட அவர் தயாராக இல்லை. நேரம் கிடைத்தபோெதல்லாம், கையில் கிடைக்கிற பொருட்களை எல்லாம் வைத்து ஆராய்ச்சியைத் தொடர்ந்தார் கால்ஃப். விடாமுயற்சி... விஸ்வரூப வெற்றி என்பது போல, 1943ல், டயாலிசிஸ் எந்திரம் முழு வடிவம்பெற்றது. ஒருவழியாக மனைவி மற்றும்சக மருத்துவர்களின் உதவியுடன்அங்கிருந்து தப்பித்தார் கால்ஃப்.

அடுத்த இரு ஆண்டுகளில் நேரடியாக நோயாளிகள் பலரிடமும் டயாலிசிஸை முயற்சித்துப் பார்த்ததில் சின்னச் சின்ன முன்னேற்றங்கள் தெரிந்தன. உச்சகட்டமாக, 1967ல், வயதான பெண்மணி ஒருவருக்கு 11 மணி நேரம் டயாலிசிஸ் சிகிச்சை அளித்து காப்பாற்றினார். இதன்பிறகே,  சந்தேகங்களையும் விமர்சனங்களையும் கைவிட்டு, எல்லோரும் டயாலிசிஸை ஏற்றுக் கொண்டார்கள்.

நல்ல விஷயம் மக்களுக்குச் சென்று சேர்ந்தாலே போதும் என்ற எண்ணத்தில் 5 டயாலிசிஸ் எந்திரங்களை உருவாக்கி, 5 மருத்துவமனைகளுக்கு இலவசமாக அளித்தார் கால்ஃப். பல நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்களுக்கு எந்த ஒளிவுமறைவும் இல்லாமல் விளக்கமும் அளித்தார். அடுத்தகட்ட ஆராய்ச்சியாக செயற்கை இதயத்தை உருவாக்கிநம்பிக்கை அளித்தார். தனது இறுதிக்காலத்திலும் கண், காது போன்ற உறுப்புகளை செயற்கையாக உருவாக்க முடியுமா என்று முயற்சித்தவாறே,  2009ல் உலகில் இருந்து விடைபெற்றார்!

- ஜி.வித்யா