டியர் டாக்டர்



* கவர் ஸ்டோரியில் இன்றைய இளைய தலைமுறையினர் பிரச்னையை அலசியிருந்தீர்கள். வாட்ஸ் அப் மோகத்தில் கைபேசியிலேயே ஆழ்ந்துபோவதால் உண்டாகும் உடல்நலக்கேடுகளை அலசியது காலத்துக்கேற்ற நல்ல அட்வைஸ். இயற்கை தந்த ஆன்டிபயாட்டிக்கான மஞ்சளின் மகிமையை மனதில்படும்படி எடுத்துச் சொல்லியிருந்ததும் பாராட்டுக்குரியது.
- சுகந்தி நாராயன், வியாசர் நகர்.

* அதிர்வலை சிகிச்சை என்பது இதுவரை கேள்விப்படாத ஒன்றாக இருந்தது. மூட்டுகளின் இயக்கங்களுக்கு உதவும் என்பதும், வலிகளை நீக்கப் பயன்படும் என்பதும் எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவலாகவும் இருந்தது.
- இரா. வளையாபதி, தோட்டக்குறிச்சி.

* சந்தையில் பிரபலமாகி வரும் Detox Foot pad பற்றிய ஒரு நல்ல அறிமுகக் கட்டுரையை கடந்த இதழில் வாசித்தேன். அதன் சாதக, பாதகங்களைச் சொல்லியதுடன் டீட்டாக்ஸ் ஃபுட் பேட் பற்றிய சர்ச்சைகளையும் மறக்காமல் குறிப்பிட்டிருந்தது சபாஷ்!அதேபோல் வயிற்றுவலியை ஏற்படுத்தும் பல்வேறு காரணங்களைப் படித்தபோது மிகவும் கவனமாய் இருக்க வேண்டும் என புரிந்துகொண்டேன். கால் பந்தாட்டத்தில் கடவுளைக் காணலாமா? அதுவும் சுவாமி விவேகானந்தர் சொல்லி இருக்கிறாரா? அப்ப உண்மையாய்தான் இருக்கும்.
- செ.ரா. ரவி, செம்பட்டி.

* புற்றுநோய் என்பதே அச்சுறுத்தும் விஷயமாக இருக்கிறது. ஆனால், அதுபற்றிய எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் விழிப்புணர்வைத் தருகிறது ‘புற்றுநோய் இல்லாத புதிய உலகம்’. மருத்துவத் தகவல்களை எளிமையாகப் படிக்கும் வகையில் சுவாரஸ்யமாக எழுதி வருகிறார் டாக்டர் கு.கணேசன். ஒவ்வொரு அத்தியாயத்தின் மூலமும் நோய் பற்றிய ஐயங்கள் நீங்கி, தெளிவு கிடைக்கிறது. முக்கியமாக, சென்ற இதழில் ‘பயப்படாதீங்க’ என்ற தலைப்பில் கட்டத்துக்குள் இடம் பெற்றிருந்த குறிப்புகள் மிகவும் பயனுள்ளவை. நன்றி கலந்த பாராட்டுக்கள்!
- எல்ஜின் ஜோசப், செங்குன்றம்.

* ‘என்னது... ஆஸ்டியோபோரோசிஸ் ஆண்களையும் பாதிக்குமா?’ என்று அதிர்ச்சியடைய வைத்துவிட்டார் எலும்பு மற்றும் மூட்டு மருத்துவர் ராதாகிருஷ்ணன். அபாயங்களை உணர்ந்து இனியாவது ஆணினம் விழித்துக்கொண்டால் நல்லது.
- நாகராஜ், திருநெல்வேலி.

* எல்லோருக்கும் பயனளிக்கும் வகையில் இருந்தது செயற்கைப் பல் பற்றிய கட்டுரை. பற்களைப் பாதுகாக்கும் அவசியமும் புரிந்தது.
- இந்துமதி, மடுவின்கரை.

* மழைக்கால குளியல், காய்ச்சல் வருது... கவனம் ப்ளீஸ்... இந்த இரண்டும் பருவ காலத்துக்கேற்ற விழிப்புணர்வு கட்டுரைகள். வாசகர் நலனில் அக்கறை காட்டிய கட்டுரைகளும் கூட!
- விவேகானந்தன், நெய்வேலி.