மயோனைஸ் பயன்படுத்தலாமா?!



டாக்டர் எனக்கொரு டவுட்டு

துரித உணவு வகைகள் அனைத்திலும் பக்க வாத்தியமாக மயோனைஸ் என்ற ஒருவகை உணவுப் பொருளை சேர்க்கிறார்கள். இது சிறியவர் முதல் பெரியவர் வரை சப்புக்கொட்டி ரசித்து சுவைக்கிற ஒரு பொருளாகவும் இருக்கிறது. ஃப்ரென்ச் ஃப்ரைஸ், க்ரில்டு சிக்கன், ஷாவர்மா, சாண்ட்விச் போன்றவற்றின் பயன்பாடு நம்மிடம் அதிகரித்திருக்கும் நிலையில் இந்த மயோனைஸ் நல்லதா என்று ஊட்டச்சத்து நிபுணர் ஆரீஸ் ரீஜாவிடம் கேட்டோம்...

மயோனைஸ்(Mayonnaise) என்பது கொழுப்புச்சத்து நிறைந்த ஓர் உணவுப் பண்டம். கிபி. 17-ஆம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மெனோர்கா தீவில் இது உருவானது. பிரான்ஸ், அமெரிக்கா நாடுகளில் பிரபலமாகி தற்போது உலகமெங்கும் அதிகமான ரசிகர்களை பெற்றுவிட்டது.

மயோனைஸ் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததா?

பொதுவாக ஆலிவ், சோயா, சூரிய காந்தி, கனோலா, குசம்பப்பூ (Safflower oil) போன்றவற்றின் சமையல் எண்ணெய்களே மயோனைஸ் தயாரிக்க ஏற்றவை. இதுபோன்ற சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களில் உடலுக்கு நன்மை சேர்க்கும் MUFA (Mono-Unsaturated Fatty Acids), PUFA (Poly-Unsaturated Fatty Acids) போன்ற கொழுப்புச் சத்துகள் குறைந்த அளவிலேயே உள்ளன.

ஆனால் செக்கிலிட்ட எண்ணெய் வகைகளில் இவை மிகுந்த அளவில் உள்ளன. ஆதலால் நாம் மயோனைஸ் தயாரிக்க பயன்படுத்தும் பொருட்களுக்கு ஏற்ப அதன் தரம் பாதுகாக்கப்படுகிறது.மயோனைஸால் ஏற்படும் சிக்கல்உணவகங்களில் உபயோகிக்கப்படும் பாக்கெட்டுகளில் உள்ள மயோனைஸ் பெரும்பாலும் நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்காகவும், சுவை கூட்டவும், ரசாயனப் பொருட்கள் அடங்கிய Preservatives, Emulsifiers, Stabilizers, Sugar முதலியன சேர்த்தே தயாரிக்கப்படுகின்றன. இவ்வாறு தயாரிக்கக்கூடிய உணவு வகைகளை அதிக அளவில் உண்ணுவதால் புற்றுநோய், இதய நோய், கல்லீரல் கோளாறுகள் முதலியவற்றுக்கு அவை வழிவகுக்கும்.

மேலும் இதில் அதிகளவு Transfats, Saturated fats உள்ளதால் இதய நோய் வர வாய்ப்பு உள்ளது. பச்சை முட்டையில் சால்மொனெல்லா(Salmonella) போன்ற கிருமிகள் உருவாக வாய்ப்பு உள்ளதால் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். சரியான அளவில் வினிகர், எலுமிச்சைச்சாறு சேர்க்கும் பொழுதுதான் மயோனைஸின் pH அளவு அதிகரித்து கிருமிகளை அழிக்க முடியும்.

வீட்டிலேயே தயாரிக்க முடியுமா?!

குழந்தைகள் சுவையான மயோனைஸை விரும்பும் பட்சத்தில் அதை வீட்டிலேயே தயாரிக்கலாம். கடைகளில் விற்கப்படும் மயோனைஸின் தரத்துக்கு உத்தரவாதம் இல்லை என்பதால் வீட்டில் முயற்சிக்கலாம்.

தேவையான பொருட்கள்

முட்டை மஞ்சள் கரு - 2
சமையல் எண்ணெய் - 250 ml (1 கப்)
வெள்ளை வினிகர்/சைடர் வினிகர் - 1 மேசைக் கரண்டி
எலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி
உப்பு, மிளகு தூள் - தேவைக்கேற்ப
கடுகு தூள் - ½ தேக்கரண்டி

செய்முறை :

முட்டைக் கருவுடன் உப்பு மற்றும் மிளகு சேர்த்து நன்றாக நுரை வரும் வரை அடித்துக் கொள்ளுங்கள். இதில் வினிகர் மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்து ½ கப் எண்ணெயை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து அனைத்தும் ஒன்று சேருமாறு அடிக்க வேண்டும். இதில் மீதம் உள்ள ½ கப் எண்ணெயை சொட்டு சொட்டாக கலந்து வேகமாக அடித்து வந்தால் சுவையான மயோனைஸ் தயாராகி விடும். இதை மிக்சியிலும் செய்யலாம்.

இவ்வாறு தயாரிக்கப்படும் 1 மேசைக்கரண்டி அல்லது 15 கிராம் அளவுள்ள மயோனைஸில் 102 கலோரிகள் உள்ளது. மேலும் அதில் 11.85 கிராம் கொழுப்பும், 0.4 கிராம் புரதமும் உள்ளது.

Preservative சேர்க்காமல் வீட்டில் தயாரிக்கும் மயோனைஸை நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு குளிர்சாதனப் பெட்டியில் சாதாரணமாக வைத்து பாதுகாக்கலாம். ஆனால், Freezer-ல் வைத்தாலோ அல்லது சூடுபடுத்தினாலோ அதன் பதம் மாறி வீணாகிவிடும்.

உடல் பருமன் மற்றும் இதய நோயாளிகள் கவனத்திற்குமயோனைஸில் கொழுப்புச்சத்து அதிகமுள்ளதால் உணவின் கலோரி எண்ணிக்கையை அதிகரித்துவிடும்.

எனவே, Low Calorie - Balanced Diet கடைபிடிப்பவர்கள் இதை தவிர்க்கலாம். மேலும் அதிக அளவில் கொழுப்பு உள்ள உணவுகளை எடுப்பதன் மூலம் இதய நோய், Metabolic Syndrome போன்ற நோய்களுக்கு இது வழிவகுக்கும். ஆதலால் தமது உடல் நலத்தை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றாற்போல உணவு பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும்.

Keto, Atkins போன்ற மாவுச்சத்து குறைந்த அல்லது கொழுப்பு மிகுந்த உணவுமுறைகளைப் பின்பற்றுபவர்கள் இதை உணவில் அவ்வப்போது சேர்த்துக் கொள்வதுண்டு. சீரான உடல் ஆரோக்கியம் உள்ளவர்கள் வீட்டில் தயாரிக்கும் மயோனைஸை ஒரு வாரத்திற்கு இரண்டுமுறை 1 டேபிள்ஸ்பூன் அளவிற்கு சாப்பிடுவதில் தீங்கெதுவும் இல்லை.

வீகன் (Vegan) மயோனைஸ்

Vegan மற்றும் சைவ உணவுமுறைகளைப் பின்பற்றுபவர்கள் கவலைப்பட வேண்டாம். அவர்கள் முட்டை கருவிற்கு பதில் சோயாபால் அல்லது முந்திரி விழுது உபயோகித்து சுவையான மற்றும் Cholesterol Free மயோனைஸை உண்டு மகிழலாம்.

மயோனைஸை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள விரும்பாதவர்கள் வெள்ளை கொண்டைக் கடலை உபயோகித்து தயார் செய்யும் புரதச்சத்து நிறைந்த Hummus, Avocado Pesto அல்லது எலுமிச்சைச்சாறு - ஆலிவ் எண்ணெய் டிரெஸ்ஸிங் போன்றவை சேலட்களில் பயன்படுத்தலாம். இவை குறைந்த அளவு கலோரிகளையே கொடுக்கும்.

- க.கதிரவன்