டிப்தீரியாவுக்கு இனி தடுப்பூசி கட்டாயம்



செய்திகள் வாசிப்பது டாக்டர்

5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு டிப்தீரியா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கட்டுக்குள் இருந்த நோய் மீண்டும் வேகமாக பரவி வருவதால் இந்த நடவடிக்கையில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.

குழந்தைகளை அதிகம் தாக்கும் நோய்களில் டிப்தீரியா(Diphtheria) என்கிற தொண்டை அடைப்பான் நோய் மிகவும் ஆபத்தானது. இந்த நோய் பாதித்த குழந்தைகளுக்கு தொண்டை பகுதியில் வலியுடன் கூடிய வீக்கம், நாக்கின் நிறம் மாறி காணப்படும்.

மூச்சு விடுவதில் சிரமம், நுரையீரல் பாதிப்புடன், திடீர் மரணத்தை ஏற்படுத்தும். இந்த நோய் பாதிப்பு தமிழகத்தை பொறுத்தவரையில் கட்டுக்குள் வைக்கப்பட்டிருந்தது. DPT என்கிற தடுப்பூசி இந்த நோய் பாதிப்புக்கு ஏற்ற மருந்தாக தற்போதுவரை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிப்தீரியா நோய் பாதிப்பு கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் கண்டறியப்பட்டது. நாளடைவில் இந்த நோய் பாதிப்பு மனிதர்கள் மூலமாக பரவி தற்போது தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பரவி வருகிறது. உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வந்த 10-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இந்நோய் கண்டறியப்பட்டுள்ளது.

குழந்தை பிறந்த ஒன்றரை, இரண்டரை, மூன்றரை மாதங்களிலும் அதன்பிறகு 4-ம் கட்டமாக ஒன்றரை வயதிலும், 5-ம் கட்டமாக 5 வயதிலும் தடுப்பூசி போட வேண்டும். ஆனால், பெரும்பாலான பொதுமக்கள் தங்களது 5 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதில்லை. இதனால் தொண்டை அடைப்பான் நோய் பாதிப்பு ஏற்படுகிறது. DPT என்று கூறப்பட்டு வந்த தடுப்பூசி, தற்போது Td என்று பெயரிடப்பட்டுள்ளது.

இனி அனைத்து வகையான தொற்றுநோய் தாக்குதலுக்கும் இந்த தடுப்பூசி போடப்படும். அரசு தலைமை மருத்துவமனைகள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்துகள் போதியளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர் 5 வயது குழந்தைகளுக்கு இந்த டிடீ தடுப்பூசியை தவறாமல் போட வேண்டும். இந்த நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிப்பதன் மூலம் டிப்தீரியா நோய் பரவுவதைத் தடுக்கலாம் என்று சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- கௌதம்