தேங்கும் கொழுப்பால் தங்கும் பிரச்னை



ஹெல்த் அண்ட் பியூட்டி

இது கொஞ்சம் வித்தியாசமான பிரச்னை. உடல் முழுக்க எடை அதிகரிப்பால் பருமனாக இருப்பது ஒரு வகைப் பிரச்னை. இன்றைய பெண்கள் மற்றும் ஆண்கள்  பெரும்பாலானவர்களுக்கு உடலின் ஒரு சில பகுதிகள் மட்டும் பருமனாக உள்ளது. பெரும்பாலான பெண்களுக்கு கைகள், இடுப்பு, தொடைப் பகுதிகள் அதிகப்  பருமனாக இருப்பது, ஆண்களுக்கு இடுப்புப் பகுதியில் பருமன் போன்ற பிரச்னைகள் அதிகமாகக் காணப்படுகிறது. இது அவர்களுக்கு வயதான தோற்றத்தை  அளிப்பதுடன் டிரெண்டில் உள்ள உடைகளை அணியவும் முடிவதில்லை. பர்சனாலிட்டி பிரச்னையாகவும் மாறுகிறது. இதனால் அடுத்தடுத்த உடல்நலப்  பிரச்னைகளுக்கும் ஆளாகின்றனர். இது குறித்து காஸ்மெட்டிக் சிகிச்சை மருத்துவர் செல்வ சீத்தாராமனிடம் கேட்டோம்...

உடல் பருமனோடு சிலருக்கு கை, தொடை, இடுப்பு இப்படி ஒரு சில பகுதிகள் அதிகப் பருமனாகக் காணப்படலாம். முதலில் இதற்கான காரணத்தை  கண்டறிவதற்கான மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். உடலில் உள்ள வேறு ஏதாவது உடல் நலப் பிரச்னை கூட இதற்குக் காரணமாக  இருக்கலாம். தைராய்டு சுரப்பில் ஏற்படும் மாற்றம், ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் பிரச்னைகள், மரபுரீதியான காரணங்கள், தவறான உணவுமுறை, உடல்  உழைப்பின்றி இருப்பது இப்படிப் பல காரணங்களால் உடல்பருமன் உண்டாகலாம். உடல் பருமன் வேறு சில உடல் நலப் பிரச்னைகளின் அறிகுறியாகவும் இருக்க  வாய்ப்புள்ளதால். சரியான காரணத்தைக் கண்டறிவதுதான் முதல் படி. சாப்பிடாமல் உடல் எடை கூட வாய்ப்பில்லை.

அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் உணவு வகைகளில் இருந்து கிடைக்கும் சத்துக்கள் உடலில் தங்கிவிடுவதால் உடல் பருமன் ஏற்படுகிறது. உடலின் எடைக்கு  ஏற்ப உடல் உறுப்புக்களின் செயல்பாட்டுக்கு கொழுப்புச் சத்து தேவைப்படுகிறது. உடலில் மெட்டபாலிசம் சரியாக இல்லாதபோதும் தேவையற்ற கொழுப்பு உடலில்  தங்கி உடல் பருமனுக்குக் காரணமாகிறது. மருத்துவரின் ஆலோசனையுடன் மெட்டபாலிசம் சரியாக இருப்பதற்கான வழிமுறைகளைக் கையாள வேண்டும். கை,  இடுப்பு, தொடை என குறிப்பிட்ட இடத்தில் அதிகளவு கொழுப்பு சேர்ந்து எடை கூடுவதால் உடலின் வடிவமே மாறிப் போகும். இதனால் பெண்கள் ஸ்லீவ்லெஸ்,  திரீ ஃபோர்த் ஸ்லீவ் அணிய முடியாது, வெஸ்டர்ன் உடைகளை அணிவதும் இயலாமல் போகும்.

சேலையில் கூட குறிப்பிட்ட வகையானவற்றை மட்டும்தான் இவர்களால் உடுத்த முடியும். இதுவே லைஃப்ஸ்டைல் பிரச்னையாகவும் மாறுகிறது. இது ஒருவித  தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துகிறது. இதனால் அவர்களின் சமூகப் பொருளாதார வளர்ச்சியும் பாதிப்பைச் சந்திக்கிறது. பெண்களுக்கு பிரசவத்துக்குப் பின்னர்  வயிற்றுப் பகுதி பெரிதாவது இயற்கையே. உடற்பயிற்சியின் மூலம் வயிற்றைச் சுருங்கச் செய்ய முடியும். ஆனால், சிலர் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்காமல்  தவிர்ப்பதால் எப்போதுமே வயிற்றுப்பகுதி பெருத்தே காணப்படும். உடல் பருமன் கூடும்போது வயிறு மேலும் பெரிதாக வாய்ப்புள்ளது. இவர்கள் உடற்பயிற்சியை  கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட இடத்தில் மட்டும் கொழுப்பு சேரும் பிரச்னைக்கு அறுவை சிகிச்சை மூலம் தீர்வு காணலாம்.

கருப்பை நீர்க்கட்டி, ஹைப்பர் டென்ஷன், சிறுநீரகம், கல்லீரல் ஆகியவை பாதிக்கப்பட்டிருக்கும்போதும் உடல் எடை கூட வாய்ப்புள்ளது. குறைவாக சாப்பிட்டும்  உடல் எடை அதிகரிக்கிறது என்பது போன்ற பிரச்னை உள்ளவர்கள் இவற்றையும் கவனிக்க வேண்டியது அவசியம். எந்தவித உடல் உழைப்பும் இன்றி இருப்பது.  தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே சாப்பிடுவது, வேலைக்குச் செல்லும் பெண்களில் சிலர் காலை உணவை சரியாக எடுத்துக் கொள்ளாமல் அடுத்தடுத்த  வேளைகளில் அதிகமாகச் சாப்பிடுவதும் உடல் பருமனை அதிகரிக்கச் செய்கிறது. ஃபாஸ்ட் ஃபுட் மற்றும் பாக்கெட் ஃபுட் ஆகியவையும் உடல் பருமனுக்குக்  காரணமாகிறது. தவறான வாழ்க்கை முறையும், உணவு முறையும் இந்தப் பிரச்னைக்கு அடிப்படைக் காரணமாக உள்ளது.

உடல் எடை அதிகரிப்புக்கான  முழுமையான காரணங்களைக் கண்டறிந்து அவற்றில் பாதிக்கப்பட்டிருக்கும் நபர் செய்யும் தவறுகளைப் பட்டியலிட வேண்டும்.  அவற்றைச் சரி செய்வதன் மூலம்தான் இதற்குத் தீர்வு காண முடியும். லைஃப் ஸ்டைலை மாற்றுவது அவசியம். மருத்துவரின் ஆலோசனைப்படி உங்களது  உடலின் தன்மைக்கு ஏற்ற உடல் எடைக்குறைப்புக்கான டயட் திட்டத்தைப் பின்பற்றலாம். சரியான வேளைகளில் போதுமான அளவு உணவை எடுத்துக் கொள்ள  வேண்டியது அவசியம். சர்க்கரை மற்றும் இனிப்பு வகைகள் கட்டாயம் தவிர்க்க வேண்டும். அடிக்கடி காபி, டீ குடிக்கும் பழக்கத்தைத் தவிர்க்கவும். நல்ல கொழுப்பு  உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் உடலில் கெட்ட கொழுப்பு சேராமல் தடுக்கலாம்.

பழங்கள், காய்கறி மற்றும் கீரை வகைகள், ஆவியில் வேக வைத்த உணவுகளும் உடல் எடையை சீராக வைத்திருக்க உதவும். தண்ணீர் குடிப்பதும் உங்களது  உடலில் இருந்து தேவையற்ற கழிவுகளை வெளியேற்றி ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும், உடல் எடைக் குறைப்புக்கு உதவும். வேலை நேரத்தில் உங்களுக்கு  நீங்களே இலக்கு வைத்துத் தண்ணீர் குடிப்பதையும் பழக்கப்படுத்திக் கொள்ளவும். அலுவலகம் செல்லும் ஆண்களும் பெண்களும் அதிக நேரம் ஒரே இடத்தில்  அமர்ந்து வேலை பார்க்கின்றனர். இதனைத் தவிர்க்க காலை அல்லது மாலை நேரங்களில் அரை மணி நேரம் நடைப்பயிற்சியைப் பழக்கப்படுத்தலாம். வேலைக்கு  இடையிலும் நடப்பது, லிஃப்ட்டுக்கு பதிலாகப் படிகளைப் பயன்படுத்துவதும் நல்லது.

உணவில் உப்பை சரியான அளவில் பயன்படுத்துவதும், வைட்டமின் சி சத்துள்ள பழங்களையும் அடிக்கடி சேர்த்துக் கொள்வதும் கொழுப்பு அதிகரிப்பைக்  கட்டுக்குள் வைக்கும். போதிய அளவு தூக்கம் அவசியம். உடல் எடையைக் குறைக்க குறைந்த பட்சம் 6 மணி முதல் 8 மணி நேரம் வரை தூங்க வேண்டும்.  போதிய தூக்கமில்லாமல் போவதும் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். இந்த மாற்றங்களை முறைப்படுத்திய சில மாதங்களில் உடலில் தேங்கியிருக்கும்  தேவையற்ற கொழுப்பு கரைந்து உடல் எடை குறையும். இதன் பின்னரும் உடலில் சில பாகங்கள் மட்டும் பருமனாக இருந்தால் மருத்துவரின் அறிவுரைப்படி  அறுவை சிகிச்சை மூலம் தீர்வு காணலாம்.

- யாழ் ஸ்ரீதேவி