அதிகரிக்கிறது பசுமை நிலப்பரப்பு!



சுற்றுச்சூழல்

மரங்கள் அழிக்கப்படுகின்றன, சுற்றுச்சூழல் கெடுகிறது என்று ஒரு புறம் கவலை அடையச் செய்யும்  நிகழ்வுகள் நடக்கின்றனதான். அதே சமயம் உலகில் நல்ல  முயற்சிகளும்  நடந்து வருகின்றன என்பதற்கான உதாரணமாக செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது.

செயற்கைக்கோள் புகைப்படங்களை வைத்து பூமியின் பசுமைப் போர்வை குறித்து ஆராய்ந்தபோது, கடந்த 20  ஆண்டுகளில் உலகின் பசுமைப் போர்வை 5  சதவீதம் அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. அதிலும் இந்தியா மற்றும் சீனா  ஆகிய நாடுகள் கடந்த 2000-த்தில் இருந்து கணிசமாக பசுமைப் பெருக்கத்தைச்  சாதித்துள்ளன. பசுமைப் போர்வை அதிகரிப்பில் இரண்டு வகை உள்ளது. காடுகளில் மரங்கள் தழைத்து வளர்வது ஒரு வகை.

இதனால் காற்றிலுள்ள கரியமில வாயுவை அதிக மரங்கள் ஈர்த்து ஆக்சிஜனை வெளியிடும். இரண்டாவது வகை பசுமைப் போர்வை  விவசாயப் பயிர்கள். இவை  பல வழிகளில் கரியமில வாயுப் பெருக்கத்திற்கே வழி வகுக்கும். அந்த வகையில் சீனாவின்  பசுமைப் போர்வையில் 42 சதவீதம் காடுகள், 32 சதவீதம்  விவசாயப் பயிர்கள். இந்தியாவில் பசுமைப் போர்வையில் 82  சதவீதம் விவசாயப் பயிர்கள்தான். வெறும் 4.4 சதவீதம்தான் காட்டு மரங்கள். உலக பசுமைப்  பெருக்கத்தில் ஏற்றம்தான் இருக்கிறதே தவிர வீழ்ச்சி இல்லை.

அதிலும் குறிப்பாக இரு பெரும்  மக்கள்தொகை நாடுகளில் பசுமைப் போர்வை அதிகரித்திருப்பதற்கு மனித முயற்சியே காரணம் என்பதும் ஊக்கம் தருவதாக,  Nature Sustainability இதழில் வெளியாகியுள்ள அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இனி அடுத்த பசுமைப் போர்வை  ஆய்வுகளில் மனித நிலப்  பயன்பாட்டையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் ஆராய்ச்சியாளர்கள்  சுட்டிக் காட்டியுள்ளனர். இந்த விழிப்புணர்வும், முயற்சியும் இன்னும்  வேகம் பெறட்டும்!

- கௌதம்