தாங்க முடியாத கொசுத்தொல்லை...



சர்வதேச கொசு தினம் - ஆகஸ்ட் 20

* ‘நான் ஈ’ படம் பார்த்திருக்கிறீர்களா? சர்வ வல்லமையும் படைத்த, மிகப்பெரிய ஒரு தொழிலதிபரை ஒரு ஈ படாத பாடுபடுத்தும். அதுபோலத்தான் இன்று நம்  நிலைமையும். சகலவிதத்திலும் நாம் மருத்துவ முன்னேற்றம் அடைந்திருந்தாலும் சின்னஞ்சிறிய கொசுவை இன்னும் சமாளிக்க முடியவில்லை. டெங்கு,  மலேரியா என்று பல நோய்களைப் பரப்பும் ஆதாரமாக கொசுக்கள் இருப்பதால் அவைகளை சமாளிப்பது மருத்துவ உலகத்துக்கு சவாலானதாகவே இருக்கிறது. இதற்காக கொசு தினம் என்றே ஒன்று அனுசரிக்கப்படுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

* சர்வதேச கொசுதினம் அனுசரிக்கப்படக்கூடிய இந்த மாதத்தில், உயிர்களைக் கொன்று உலகையே அச்சுறுத்தும் மிகச்சிறிய உயிரினமான கொசுவைப் பற்றிய சில  தகவல்களை இங்கு நாம் தெரிந்துகொள்வோம்.

* கொசுக்கள் 210 மில்லியன் வருடங்களுக்கு முன்பே தோன்றிவிட்டன. இவை டைனோசர் காலம் முதலே இருந்து  வருகின்றன. 8 ஆயிரம் அடி உயரத்தில்  இருக்கும் இமயமலைப் பகுதிகளில்கூட இவை வாழ்கின்றன.

* உலகளவில் கொசுக்களில் 3,000-கும் மேற்பட்ட வகைகள் உள்ளது. அதில் உலகளவில் மூன்று விதமான கொசுக்கள் மட்டும்தான் மிகக் கொடிய நோய்களைப்  பரப்புகின்றன. மலேரியாவைப் பரப்பும் அனோபிலஸ் (Anopheles), டெங்கு மற்றும் சிக்கன் குனியாவை பரப்பும் ஏடிஸ் (Aedes) மற்றும் யானைக்கால்  நோயைப் பரப்பும் கியூலெக்ஸ் (Culex) போன்றவையே அந்த மூன்று கொசுக்கள். அனாஃபிலஸ் என்கிற பெண் கொசுக்கள் கடிப்பதன் மூலம் மலேரியா நோய்  பரவுவதை, 1897-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 அன்று மருத்துவர் சர்.ரெனால்டு ரோஸ் என்பவர் கண்டுபிடித்தார். இந்த நாளின் நினைவாகவும், கொசுக்கடியினால்   ஏற்படுகிற ஆபத்துக்கள் குறித்தும், அதிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்குரிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் ஆண்டுதோறும் இந்த தினம் சர்வதேச  கொசு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
 
* கொசுவானது க்யூலிசிடே (Culicidae) குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூச்சியினம். இவை உருவத்தில் சிறியவையாக இருந்தாலும் நோய்களைப் பரப்புவதில்  அசுர வேகம் கொண்டவை.

* ஒரு சிறிய கொசுக்கடி பெரிய ஆபத்துகள் உருவாக வழிவகுக்கிறது. கொசுக்கடியால் மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா, ஜப்பானிய மூளையழற்சி, யானைக்கால்  நோய், மஞ்சள் காய்ச்சல், சிக்கா வைரஸ் பாதிப்பு போன்ற உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் நோய்கள் ஏற்படுகிறது.

* உலகிலேயே மிகவும் கொடூரமான விலங்கினம் என்றால் அது கொசுதான். ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் அதிகம் பேர் உயிரிழக்க காரணமாக இருப்பது  கொசுக்கள்தான்.

* மலேரியாவால் 2015-ம் ஆண்டு உலக மக்கள் தொகையில் பாதி பேர், அதாவது 320 கோடி பேர் தாக்கப்படும் ஆபத்தை எதிர்நோக்கினர். 21 கோடியே 40 லட்சம்  பேர் இந்த நோயால் தாக்கப்பட்டனர். 4 லட்சத்து 38 ஆயிரம் பேர் இந்த நோயால் இறந்தனர் என்கிறது புள்ளிவிபரம். உலகளவில் மலேரியாவின் பாதிப்பை 90  விழுக்காடு குறைப்பதற்கு 2030-ஆம் ஆண்டுக்குள் 870 கோடி டாலர் ஒவ்வோர் ஆண்டும் தேவைப்படுவதாக தெரிவித்திருக்கிறது அந்த புள்ளிவிவரம். உலகளவில்  அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் நோய்களில் மலேரியா 5-ஆவது இடத்தில் உள்ளது. மலேரியாவால் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் இறப்பதாகவும், இந்நோய்  தாக்கப்பட்ட ஒவ்வொரு 30 வினாடிகளுக்கும் ஒரு குழந்தை வீதம் பலியாவதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.

* கருமைநிற துணிகள் வெப்பத்தை தக்கவைத்துக் கொள்ளும் என்பதால் அவை கொசுவை அதன் பக்கம் ஈர்க்கும்  தன்மையுடையதாக இருக்கிறது.

* சில கொசு வகைகள் மனிதனை கடிப்பதில்லை. உதாரணமாக க்யூலி செட்டா மெலனுரா (Culiseta melanura) என்ற கொசு வகை பறவைகளை  மட்டுமே கடிக்கிறது. மனித உடலிலிருந்து வெளியிடப்படும் கார்பன் டை ஆக்சைடு, வியர்வை போன்றவற்றை கொசுக்களால் அறிய இயலும். மேலும் அவை  மனிதனின் வெப்பத்தை உணர்ந்து எவரை கடிக்கலாம் எனவும் தீர்மானிக்கிறது.

* ஆண் கொசுக்கள் தேன் அல்லது தாவரச் சாற்றை மட்டுமே உணவாக எடுத்துக் கொள்கிறது. பெண் கொசுக்கள் முட்டைகளை உருவாக்கத் தேவைப்படும்  புரதத்தை பெறுவதற்காகவே மனிதர்களிடமிருந்தும், உயிரினங்களிடமிருந்தும்  ரத்தத்தை உறிஞ்சி உணவாக எடுத்துக் கொள்கிறது.

* கொசுக்களால் அதன் எடையைவிட 3 மடங்கு ரத்தத்தை உறிய முடியும். ரத்தத்தை உறிஞ்சும்போது பெண் கொசுக்கள் உயிருக்கு ஆபத்தான நோய்களை  உண்டாக்கும் கிருமிகளைப்
பரப்புகின்றன. ஆனால், கொசுக்களால் எய்ட்ஸ் நோயைப் பரப்ப இயலாது.

* ஏடீஸ் (Aedes) வகை கொசுக்கள் நம்மை பகல் நேரத்தில் கடித்து ரத்தத்தை உறிஞ்சுகின்றன. க்யூலெக்ஸ் (Culex) வகை  கொசுக்கள் இரவு நேரத்தில்  கடிக்கின்றன.

* உலக வரலாற்றில் அழியாப் புகழ்பெற்ற மாவீரன் அலெக்ஸாண்டரையே தாக்கி வீழ்த்தியிருக்கின்றன இந்த கொசுக்கள்.  அவர் கி.மு. 323-ல் மலேரியா தாக்கி  இறந்தார்.

* தேங்கிய நீர் நிலைகள், வடியாத மழைநீர், திறந்தவெளி சாக்கடைகள், குப்பைத் தொட்டிகள், மூடப்படாத நீர் இருக்கும்  பாத்திரங்கள் மூலமாக கொசுக்கள்  பெருகுகிறது. மழைக் காலமானது கொசு பெருகி பல நோய்களைப் பரப்புவதற்கு ஏற்றதாக இருக்கிறது.

* கடற்கரைப் பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் கியூலெக்ஸ் கொசுக்களால் பைலேரியா என்கிற யானைக்கால்  நோய் உருவாகிறது. இவ்வகை கொசுக்கள்  இரவில்தான் கடிக்கும். சாக்கடை, வயல்வெளி போன்ற இடங்களில் இவ்வகை  கொசுக்கள் இனப்பெருக்கம் செய்து பல்கிப் பெருகுகிறது. யானைக்கால் வியாதிக்கு  இதுவரை மருந்து  கண்டுபிடிக்கப்படவில்லை.

* கொசுக்களுக்கு பற்கள் கிடையாது. அவை நீளமான நுண்துளை உறிஞ்சிகள் (Proboscis) மூலமாக நமது ரத்தத்தை  உறிஞ்சுகின்றன. இந்த உறிஞ்சிகள்  மூலம் நம் உடலின் மேல் தோலில் துளையிடும் அதே நேரத்தில் இன்னொரு குழல் மூலம் ரத்தத்தில் எச்சிலை உமிழ்கின்றன. இதனால் அந்த இடம் லேசாக  மரத்துப் போவதால் கொசு கடிப்பதை நம்மால் சட்டென உணர முடிவதில்லை.

* பெண் கொசுக்கள் தன் வாழ்நாளில் மூன்று முறை முட்டையிடும். அவை ஒவ்வொரு முறையும் 300 முட்டைகள் வரை  இடுகிறது. இந்த வேகத்தில்  முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்தால் ஆறே தலைமுறையில் அதன் சந்ததிகளின்  எண்ணிக்கை 3,100 கோடியை எட்டிவிடும்.

* ஆண் கொசுக்கள் 10 நாட்களுக்கும் குறைவாகவே உயிர்வாழும், பெண் கொசுக்கள் 6 முதல் 8 வாரம் வரை உயிர் வாழும். கொசுக்கள் வெகுதூரம்  பயணிப்பதில்லை. அவை 3 மைல்களுக்குள்ளாக பறப்பதை நிறுத்திக்கொள்கின்றன.

* கொசுப்புழுக்களால் நீரில் மூச்சுவிட முடியாது. அவை மூச்சு விட நீரின் மேல் மட்டத்திற்கு வரும். எனவே, கொசுக்களை அழிக்க நீரின் மீது மண்ணெண்ணெய்  தெளிப்பது ஒரு நல்ல உத்தியாக இருக்கும். இதேபோல் கொசுப்புழு தடுப்பு மருந்து தெளிக்கலாம். வீட்டைச் சுற்றி துளசி, திருநீற்றுப் பச்சிலை செடியை வளர்க்க  கொசு வருவது குறையும். பூண்டு வாசனையும் கொசுவுக்கு ஆகாது. பெரும்பாலான கொசு விரட்டிகளில் Diethyltoluamide என்கிற வேதிப்பொருள்  உள்ளது. இதைத் தொடர்ந்து சுவாசித்தால் உடல்நலனுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே பாதுகாப்பான கொசு மருந்தாக உள்ள Picaridin, Lemon  Eucalyptus Oil மற்றும் மின் பூச்சி விரட்டிகள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

* மீன்கள், பூஞ்சைகள், தட்டான், பல்லிகள் போன்ற உயிரியக் கட்டுப்படுத்திகள் மற்றும் மலட்டு ஆண் கொசுக்களைப் பெருக்குதல் போன்ற வழிகளிலும்  கொசுக்களைக் கட்டுப்படுத்தலாம்.

* நமது சுற்றுப்புறத்திலுள்ள பொருட்களில் நீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். டயர்கள், தகரங்கள், பிளாஸ்டிக் பொருட்களில் நீர் தேங்காமல்  பார்த்துக்கொள்ள வேண்டும். நீர் தேங்கும் குட்டைகளிலும் திறந்த வெளிகளிலும் மண்ணெண்ணெய் தெளிப்பதன் மூலம் கொசு பெருகுவதைத் தடுக்கலாம்.  அதோடு நம் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியம்.

* கொசு ஒழிப்புக்காக அரசு எடுக்கக்கூடிய முன்முயற்சிகளுக்கு நாம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். நாம்  ஒவ்வொருவரும் விழிப்புணர்வோடு மேற்சொன்ன  வழிமுறைகளைப் பின்பற்றினால் கொசுவால் பரவும் கொடிய  நோய்களைத் தடுக்கலாம்.

தொகுப்பு : க.கதிரவன்